லிங்கபுராணம்
பகுதி19
அனுசரிக்க வேண்டிய ஆசார விதிகள் எண் வகை சித்திகள். 1) அணுவைப் போலாகும் சக்தி அணிமா. 2) பஞ்சென இலேசாக இருத்தல் லகிமா. 3) பருத்தல் மகிமா. 4) நினைத்த இடம் செல்லும் சக்தி பிராத்தி. 5) யாவையும் உணர்ந்திடும் சக்தி பிராகாமியம். 6) அனைத்திலும் ஆணை செலுத்திடும் சக்தி ஈசத்துவம். 7) நினைத்த உருவை எடுத்தல் வாசித்துவம். 8) பிறப்பொடு இறப்பு நீக்கல் சாயுச்சியம். இந்த எண்வகை சித்திகள் பெற்றவர் அழியாப் பரம்பொருளாய், மூவர்க்கும் முதலாய் பரஞ்சுடராய் விளங்கும் இறைவனை உணர்ந்து சமாதியிலிருந்து முக்தி பெறுவர். சித்திகளைப் பெறாதவர்களும் கூட ஈசனை நன்குணர்ந்து அவரைத் தம் மனத்திலே இருத்தி தியானத்தால் முக்தி அடைவர். பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேறிப் பிறப்பிறப்பு அற்ற பேரின்ப வாழ்வு பெற ஜோதிப் பிழம்பான சுடரொளியின் மலரடிகளைச் சேவித்தல் வேண்டும். பிரம்மச்சாரி சிறந்த குருவை அடைந்து உபதேசம் பெற்று, இயம நியமங்களை குறைவற ஆற்ற நன்னெறியில் பிரம்மச்சரிய வாழ்வைக் கடைப்பிடிக்க பிரம்மச்சாரி பிøக்ஷ பெற்றே உணவு உட்கொள்ள வேண்டும். முற்றும் துறந்தவர்களைக் கண்டால், மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும். தண்டம், கமண்டலம், குடை, செருப்பு, மான் தோல் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். வசிக்கும் கிரகத்தில் தரையைப் பசுஞ்சாணத்தால் மெழுகித் தூய்மையாக்க வேண்டும்.
வேதியருக்குப் பத்து நாட்களும், வேந்தருக்குப் பன்னிரண்டு நாட்களும், வைசியருக்குப் பதினைந்து நாட்களும், பின்னவருக்கு முப்பது நாட்களும் தீட்டு உண்டாம். மங்கையர் தீட்டமான நான்காம் நாள் விடியற்காலையில் நீராடி சூரிய தரிசனம் செய்து பால் (அ) பஞ்சகவ்யம் உட்கொள்ள வேண்டும். நீராடிய 4,6,8,10,12,14,16 நாட்களில் கணவனுடன் கூடினால் புதல்வரையும் மற்ற நாட்களில் கூடினால் பெண் குழந்தையும் பெறுவர். துறவிகள் இடம் தேடிவரும் உணவை உட்கொள்ள வேண்டும். எதிலும் ஆசை கொள்ளக்கூடாது. துர் நிமித்தங்களையும், கனவுகளையும் கண்டவர் வடதிசை சென்று, பஞ்சகவ்வியத்தில் ஒன்றை உட்கொண்டு, பிரணவம் ஓதி, பரமனைத் தியானித்து வேண்டினால் தோஷம் நீங்கி மரணம் அடையமாட்டார்.
தொடரும்🙏
லிங்கபுராணம்
பகுதி 20
காசியின் சிறப்பு காசியின் மகிமை ஏராளம். கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் காசியே முக்தி தரும் நகரம். இத்தலத்தில் ஈசன் என்றும் நீங்காது உறைவதால் இதற்கு அவிமுக்தேச்வரம் என்ற பெயர் உண்டு. முனிவர் அவ்வியன் காசியில் பரமனை வழிபட்டு வீடுபேறு பெற்றார். குபேரன் நவநிதிகளைப் பெற்றான். சம்வர்த்தன் என்பவன் இங்கு ஈசனை வழிபட்டு பரமன் திருவடிகளை நீங்காத வாழ்வு பெற்றான். இங்குதான் வியாசர் இறைவனின் திருவடிகளைப் பெற்றார். மாயோன், நான்முகன், அக்கினி, சூரியன், சந்திரன், இந்திரன் ஆகியோரும் இந்தக் காசியில் பரமனை வழிபட்டு அவர் திருவருளைப் பெற்றனர். காமதேனு காசியில் ஈசனை லிங்க வடிவில் ஆராதித்துப் பேறு பெற்றது அந்த இடம் கோப்பிந்ரேக்கம் ஆகும். அந்த லிங்கத்தின் பெயர் கோப்பியேச்சுவரர் ஆகும். பிரம்மன் கபிலாகாரம் என்ற குளக்கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் பெயர் ரிஷபத்து வாசன். மற்றொரு லிங்கத்தை பத்திரோதயம் என்ற தடாகக் கரையில் பிரதிஷ்டை செய்ய, அதனை மாதவன் வழிபட்டான். அது அரணிய சர்ப்யேசுவரர் எனப்படும். மற்றொரு லிங்கம் பிரம்மன் வழிபட்டது. இச்சுவலினேச்சுவரர் எனப்படுகிறது.
பர்வதராஜனால் காசியில் வழிபாடு செய்யப்பட்ட லிங்கம் சைலேச்சுவரர் ஆகும். மற்றொரு லிங்கம் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அசுரர்களாலும், அமரர்களாலும் வழிபாடு பெறப்பட்டது. அது மத்திமேசர் ஆகும். சுக்கிராச்சாரியாரால் அமைக்கப்பட்டது சுக்கி ரேசுவரர் ஆகும். இத்தலத்தில் உயிர்விடும் மனிதனே அன்றி மற்ற எந்த ஜீவராசியும் முக்தி அடையும். பிரளய காலத்திலும் அழியாது விளங்கும் இத்தலம் அவிமுக்தம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாறு காசியின் சிறப்பைத் தேவிக்கு விளக்கிய ஈசன் அவிமுக்தீசுவர லிங்கத்தில் மறைந்தார். எனவே, கற்றோர்கள் தங்கள் அந்திமக் காலத்தை உணர்ந்து, காசிக்குச் சென்று தங்கி, கங்கையில் நீராடி பிரணவம் ஜபித்து, ஈசன் திருவடிகளை, ஒரு கணமும் மறவாது தியானித்து ஆவி நீத்து பிறவாப் பேரின்ப வீட்டை அடைவர்.
தொடரும்🙏🙏
No comments:
Post a Comment