லிங்கபுராணம்
பகுதி 24
ஜலந்தரன் வரலாறு: ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து தேவர்களால் தன்னை வெல்லமுடியாதவாறு வரம் பெற்றான். அளவற்ற பராக்கிரமத்தைப் பெற்ற ஜலந்தரன் வரங்கள் பெற்றவுடன் அகந்தை கொண்டு திக்விஜயம் புறப்பட்டான். இந்திரனை ஓடச்செய்து தேவர்களை வென்றான். அடுத்து அக்கினி, இயமன், நிருதி, வாயு, குபேரன் ஆகியோர்களை வென்று தன் வயப்படுத்திக் கொண்டதுடன் வைகுந்தம் சென்றிட, திருமால் கருடன் மீதேறி அவனுடன் போர் செய்தார். ஆனால், அசுரனை ஈசன் ஒருவனாலேயே அழிக்க முடியும் என்றறிந்து மாயையால் இருளைத் தோற்றுவித்து அந்த மாயையில் மறைந்து விட்டார். அடுத்து, அவன் பார்வை கயிலாயத்தின் மீது பட சிவனாரையும் எதிர்க்க முற்பட்டான். அப்போது சிவபெருமான், ஜலந்தரா, நீ சொன்னது அனைத்தும் சரியாக இருக்கலாம். ஆனால், நான் கண்கூடாகக் காணவில்லை என்று கூறித் தன் கால் கட்டைவிரலால் பரமேச்வரன் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அசுரனிடம் அதை எடுத்துத் தலைமீது வைத்து அவன் பிரதாபத்தை நிரூபிக்குமாறு சொன்னார். அவன் மிகவும் ஏளனமுடன் இலகுவில் வட்டத்தைப் பெயர்த்து விட்டான். ஆனால், அதை மேலே உயர்த்துவது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மிகவும் முயற்சி செய்து அதனைக் கழுத்துக்கு நேராகக் கொண்டு வர, அது சக்கராயுதமாக மாறி அவன் கழுத்தைத் துண்டித்தது. அசுரன் உடல் பூமியில் சரிந்தது. அவனுடைய மனைவியர் அங்கு வந்து அவன் உடலை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பினர். அப்போது சிவனார் அவர்களிடம், ஜலந்தரன் என் கையால் இறந்ததால் உத்தம லோகத்தை அடைந்துள்ளான் என்று கூறி அவனுடைய மனைவியர்களையும் அவனுடன் சென்று மகிழ்ந்திருக்குமாறு கூறி அருளினார்.
லிங்கபுராணம்
பகுதி 25
அரிக்குச் சக்கராயுதம் அளித்தல் ஜலந்தரன் மரணத்துக்குப் பின் அவனுடைய புதல்வர்கள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர முற்பட்டனர். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அப்போது பரந்தாமன் சிறிது காலம் பொறுத்திருங்கள். நான் ஈசனைக் குறித்துத் தவம் செய்து ஜலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தை அவரிடமிருந்து பெற்று வருகிறேன் என்றார். திருமால் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரத்தெட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய முற்பட்டார். முடிவில் ஒரு மலர் ஈசனால் மறைக்கப்பட்டு விட்டதால் குறைந்தது. அப்போது அரி தன் கண் மலரை எடுத்து ஈசன் திருநாமம் கூறி அர்ச்சனையை முடித்தார். அப்போது சிவனார் தோன்றி அவர் பக்தியை மெச்சி, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் வேண்டும் வரம் கேட்குமாறு கூறினார். அப்போது திருமால் மறுபடியும் அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வருவதால் ஜலந்தரனை அழித்த சக்கராயுதத்தை அளித்து, அதன் மூலம் தேவ சத்ருக்களை ஒழிக்கும் வலிமையை அருள்புரியுங்கள் என்று வேண்டினார். ஈசனும் அவ்வாறே சக்ராயுதத்தை அளித்து ஆசி கூறினார். மேலும், தனக்காக அர்ப்பணித்த கண் மலரையும் திரும்பி அளித்தார். ஈசன் அளித்த சக்கராயுதத்தால் மாதவன் அசுரர்களை வென்று தேவர்களின் துன்பங்களை நீக்கி அருளினான்.
தொடரும்🙏🙏
தொடரும்🙏🙏
No comments:
Post a Comment