Wednesday, July 1, 2026

லிங்க புராணம்

 [01/07, 6:31 am] +91 94447 22454: லிங்கபுராணம் 


பகுதி 17 


பஞ்சாக்ஷர மந்திர பெருமை ஒரு சமயம் தேவி ஈசனிடம் பஞ்சாக்ஷர மந்திரத்தின் பெருமையைப் பற்றிக் கேட்க, ஈசன் ஐந்தெழுத்தின் மகிமை குறித்து பார்வதி தேவிக்கு விவரித்தார். பரமன் கூறியதாவது : சிருஷ்டிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட பிரமன் படைக்கும் சக்தி அடைய என் அருள் வேண்டி என்னைத் துதி செய்ய, வேதங்களும் போற்றி வணங்கும் பஞ்சாக்ஷரத்தை (திரு ஐந்தெழுத்தை) அவனுக்கு என் ஐந்து முகங்களாலும் உபதேசம் செய்ய, பிரமன் சகல ஞானமும் பெற்று படைக்கத் தொடங்க அவனிடமிருந்து தசப் பிரம்மாக்கள் தோன்றினர். அவர்கள் இல்லற பந்தம் பற்றாதிருப்பதற்காக தவம் செய்ய நான் அவர்கள் முன் தோன்றி யோகத்தையும், ஐந்தெழுத்தையும் உபதேசித்தேன். அவர்கள் அதனை வையகம் முழுவதும் பரப்பினர். வேதத்தின் சாரமாகவும், விவரிக்க முடியாத உட்பொருளை உடையதும், முக்தியும் அளிக்கவல்லதாக பஞ்சாக்ஷரத்தை ஜபித்தவர் பிறவித் துன்பம் நீங்கப் பெறுவர் என்றார் பரமன். ஜபிக்கும் முறை ஈசனை நன்கு உணர்ந்து, அவர் திருஉருவைத் தெளிவுற மனத்திலேயே சிந்தித்து, அவர் அருள் ஒன்றையே வேண்டி உருகி ஐந்தெழுத்தை ஜபிக்க வேண்டும். திருவைந்தெழுத்தை குரு முகமாக உபதேசம் பெற வேண்டும். நாளொன்றுக்கு எத்தனை என்று சங்கல்பித்துக் கொண்டு விரதம் எடுத்து, இரவு மட்டும் உணவு கொண்டு ஆற்றங்கரை, சமுத்திர தீரம், சிவாலயம் ஏதாவது ஓரிடத்தில் உடல், உள்ளம் தூய்மையோடு இறைவனை வணங்கி வல்வினைகள் நீங்கிடப் பிரார்த்தனை கொண்டு ஜபிக்க வேண்டும். தினமும் ஜபிப்பதாயின் பகல் உணவுக்கு முன் ஜபிக்க வேண்டும். எண்ணிக்கையை விரலினால், விரல் ரேகையால் (அ) மணிகளைக் கொண்ட ஜபமாலையால் எண்ண வேண்டும்.

ஜபமாலை, பவளமணி மாலை, ஸ்படிக மாலை, முத்து மாலை, ருத்ராக்ஷமாலை ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். ஈசன் திருவடிகளை மனத்தில் சிந்தித்து ஜபிப்பதே உத்தமமான பலன்களைத் தரவல்லது. திருவைந்தெழுத்தை ஜபிப்பவர்கள் தூயவராக இருத்தல் வேண்டும். பஞ்சமபாதகங்கள் பற்றிய எண்ணமே கூடாது. ஈசன் திருவடிகளைத் தியானித்து சிறிதளவே உணவு உட்கொள்ள வேண்டும். பட்டை விரித்து அல்லது பலகையின் மீது அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஆசாரியனே இறைவன். இறைவனே ஆசாரியன். மந்திரமே இறைவன். ஆகவே குருவைப் பணிந்து அவர் ஆசி பெற்று ஜபத்தைத் தொடங்க வேண்டும். தெளிந்த உள்ளத்தில் ஈசன் திருஉருவைத் தியானித்து, மலரடி வணங்கி அருள் வேண்டிப் பிரார்த்தித்து, அமைதியான மலைக்குகையில் அமர்ந்து புலனடக்கத்தோடு பத்துலக்ஷம் முறை பஞ்சாக்ஷரம் ஜபிப்பவர்கள், வல்வினைகள் பொடிபட இறைவன் திருவடி நிழலில் சேர்வர். 


தொடரும்🙏

[02/07, 6:21 am] +91 94447 22454: லிங்கபுராணம் 


பகுதி 18 


சிவனார் சனகாதியர்களுக்கு அருளுதல் ஒரு சமயம் சனகாதி முனிவர்கள் பரமேச்வரனை அணுகி அவர்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்பொழுது பரமன் அவர்களுக்கு அருளியது, ஜீவன் உற்பிசம், சுவேதசம், சராயுசம், அண்டசம் எனப்படும் நால்வகைப் பிறப்புகளுக்குள் உட்படுகிறது. ஷட்கோசம் எனப்படும் உதிரம், தோல், தசை, எலும்பு, மூளை, நிணம் எனும் ஆறினோடு ஜீவன் அன்னை வயிற்றில் தோன்றி இறக்கும் வரையில் துன்பமே அடைகிறது. வித்தையானது பரமவித்தை, பரவித்தை என இருவகை. நான்மறைகளைக் கற்று அவற்றால் பெறுவது பரமவித்தை. அறிவினால் உணரப்படுவது பரவித்தை ஆகும். மேலும் நிறம், குணம், மாசுமறுவற்று, உறுப்புகள் ஏதுமின்றி கருத்துக்கு எட்டாதது, தன்னைத் தவிர வேறு பொருள் இல்லாத பரம்பொருளை அறிவது பரவித்தை. பரம் என்றும் பரமன் என்றும் சொல்லப்படும் பரம்பொருள் ஒன்றே. முத்தொழில் புரிவதும் அதுவே. அழியும் உலகப்பொருள்களைத் தவிர வேறொன்று உண்டு என்று உள்ளத்தில் தியானித்து அதனில் மனத்தைச் செலுத்தினோர் இன்புற்றிருப்பர். கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் சித்தம், புத்தி, மகம், அகங்காரம் ஆகியவற்றை உடைய ஆத்மா ஜீவாத்மா எனப்படும். பதினான்கு இந்திரியமும், பதினான்கு வாயுக்களும் கொண்ட மனித உடலில் எழுபத்திரண்டாயிரம் நாடிகள் உள்ளன. அன்னத்தின் மயமான கோசம் பூதான்மா, பிராணமய கோசம் இந்திரியான்மா, மனோமய கோசமானது கால ஆன்மா, ஆனந்தமய கோசம் முறையே உரைக்கப்படாமல் நின்றது விஷயான்மா. இவ்வாறு கற்றறிந்தோர் தெரிந்து உணர்வார்கள். தெளிந்த ஞானமுள்ள குருவைப் பணிந்து, அவரருள் பெற்றுக் கருமங்கள் யாவும் முடித்துச் சுத்த நெறியில் இருப்போமானால் ஈசனைக் காணமுடியும். உயர் ஞானம் பெற்றார் இருவினைகள் ஒழிந்து போகின்றன. எனவே, பிறவாப் பேரின்ப முக்தியை அடைய விரும்புவோர் முதலில் தெளிந்த ஞானத்தைப் பெறுவகையே முயற்சிக்க வேண்டும். தெளிந்த ஞானமுடையவனுக்கு வேறு உடல் வராது முக்தியே சித்திக்கும். ஞானம் பெறாது முக்தி அடைய முடியாது. ஞானத்தைச் சிறந்த தியானத்தால் மட்டுமே பெற இயலும். உந்திக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தின் முடிவில் மென்மையான தாமரை இருப்பதாகத் தியானிப்பது ஞானத்தின் முதல் அங்கம் அணிமா முதலிய எண் வகை சித்திகள் அத்தாமரைக்கு இதழ்களாகும். அம்மலரின் மீது அனைத்துக்கும் ஆதியாய் தனியாய் தெளிந்த பரஞ்சுடராய் ஈசன் உலவுவதாகச் சிந்திக்க வேண்டும். அவ்விதமே உச்சியிலும், ஞான ஒளியாய் நினைவிற்கு எட்டாப் பரம்பொருளாய் விளங்கும் ஈசனைத் தெளிவுடன் கண்டு அப்பொருளின் திவ்ய வடிவில் தன்னையே மறந்து தன்னையும் ஈசனாகவே காண்பவர் கிடைத்தற்கரிய பேரின்ப வீட்டை அடைவர்.

பூமிக்குச் சர்வன், புனலுக்குப் பவன், அக்கினிக்கு ருத்திரன், காற்றுக்கு உக்கிரன், ஆகாயத்தில் பீமன், சூரிய மண்டலத்துக்கு மகாதேவன், சந்திர மண்டலத்துக்கு ஈசானன், பரமேச்வரன் ஆன்மாவுக்கெல்லாம் பசுபதியாகவும், அஷ்டமூர்த்தியாகவும் விளங்குகிறார். நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் ஞானம் வரும். ஞானம் வந்ததும் அறிவு தெளிவுறும். அடுத்து, பரம வைராக்கியம் ஏற்படும். அதனால் யோகம் சித்திக்கும். யோகத்தின் மூலம் அழியாத பேரின்ப வாழ்வைப் பெறலாம். ஞானம், தியானம் இவற்றை அனுஷ்டிக்கும் ஆன்மாவுக்கு பந்தம் நீங்கிவிடும். மாயையை அறிந்தோன் பற்றற்று தன்னைக் காத்துக் கொள்வான். தேவி வித்தை என்றும், ஞானசக்தி, க்ரியாசக்தி என்றும் கூறப்படுகிறாள். என்னுடன் உள்ள தேவி என் உடலின் ஒரு பகுதியே ஆவாள். இந்தச் சராசரங்களில் நிலவும் உலகங்கள் அனைத்தும் மாயாவிகாரமே. இவ்விதம் சொன்ன பரமன் பார்வதியின் முகம் நோக்க, ஈசன் திருவுள்ளத்தை அறிந்த தேவி அன்று பகலிலேயே சனகாதியருக்கு மாயையை அகற்றி பிறவாப் பேரின்ப வீட்டை அடைய அருள்புரிந்தாள். 


தொடரும்🙏🙏