லிங்கபுராணம்
பகுதி 18
சிவனார் சனகாதியர்களுக்கு அருளுதல் ஒரு சமயம் சனகாதி முனிவர்கள் பரமேச்வரனை அணுகி அவர்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்பொழுது பரமன் அவர்களுக்கு அருளியது, ஜீவன் உற்பிசம், சுவேதசம், சராயுசம், அண்டசம் எனப்படும் நால்வகைப் பிறப்புகளுக்குள் உட்படுகிறது. ஷட்கோசம் எனப்படும் உதிரம், தோல், தசை, எலும்பு, மூளை, நிணம் எனும் ஆறினோடு ஜீவன் அன்னை வயிற்றில் தோன்றி இறக்கும் வரையில் துன்பமே அடைகிறது. வித்தையானது பரமவித்தை, பரவித்தை என இருவகை. நான்மறைகளைக் கற்று அவற்றால் பெறுவது பரமவித்தை. அறிவினால் உணரப்படுவது பரவித்தை ஆகும். மேலும் நிறம், குணம், மாசுமறுவற்று, உறுப்புகள் ஏதுமின்றி கருத்துக்கு எட்டாதது, தன்னைத் தவிர வேறு பொருள் இல்லாத பரம்பொருளை அறிவது பரவித்தை. பரம் என்றும் பரமன் என்றும் சொல்லப்படும் பரம்பொருள் ஒன்றே. முத்தொழில் புரிவதும் அதுவே. அழியும் உலகப்பொருள்களைத் தவிர வேறொன்று உண்டு என்று உள்ளத்தில் தியானித்து அதனில் மனத்தைச் செலுத்தினோர் இன்புற்றிருப்பர். கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் சித்தம், புத்தி, மகம், அகங்காரம் ஆகியவற்றை உடைய ஆத்மா ஜீவாத்மா எனப்படும். பதினான்கு இந்திரியமும், பதினான்கு வாயுக்களும் கொண்ட மனித உடலில் எழுபத்திரண்டாயிரம் நாடிகள் உள்ளன. அன்னத்தின் மயமான கோசம் பூதான்மா, பிராணமய கோசம் இந்திரியான்மா, மனோமய கோசமானது கால ஆன்மா, ஆனந்தமய கோசம் முறையே உரைக்கப்படாமல் நின்றது விஷயான்மா. இவ்வாறு கற்றறிந்தோர் தெரிந்து உணர்வார்கள். தெளிந்த ஞானமுள்ள குருவைப் பணிந்து, அவரருள் பெற்றுக் கருமங்கள் யாவும் முடித்துச் சுத்த நெறியில் இருப்போமானால் ஈசனைக் காணமுடியும். உயர் ஞானம் பெற்றார் இருவினைகள் ஒழிந்து போகின்றன. எனவே, பிறவாப் பேரின்ப முக்தியை அடைய விரும்புவோர் முதலில் தெளிந்த ஞானத்தைப் பெறுவகையே முயற்சிக்க வேண்டும். தெளிந்த ஞானமுடையவனுக்கு வேறு உடல் வராது முக்தியே சித்திக்கும். ஞானம் பெறாது முக்தி அடைய முடியாது. ஞானத்தைச் சிறந்த தியானத்தால் மட்டுமே பெற இயலும். உந்திக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தின் முடிவில் மென்மையான தாமரை இருப்பதாகத் தியானிப்பது ஞானத்தின் முதல் அங்கம் அணிமா முதலிய எண் வகை சித்திகள் அத்தாமரைக்கு இதழ்களாகும். அம்மலரின் மீது அனைத்துக்கும் ஆதியாய் தனியாய் தெளிந்த பரஞ்சுடராய் ஈசன் உலவுவதாகச் சிந்திக்க வேண்டும். அவ்விதமே உச்சியிலும், ஞான ஒளியாய் நினைவிற்கு எட்டாப் பரம்பொருளாய் விளங்கும் ஈசனைத் தெளிவுடன் கண்டு அப்பொருளின் திவ்ய வடிவில் தன்னையே மறந்து தன்னையும் ஈசனாகவே காண்பவர் கிடைத்தற்கரிய பேரின்ப வீட்டை அடைவர்.
பூமிக்குச் சர்வன், புனலுக்குப் பவன், அக்கினிக்கு ருத்திரன், காற்றுக்கு உக்கிரன், ஆகாயத்தில் பீமன், சூரிய மண்டலத்துக்கு மகாதேவன், சந்திர மண்டலத்துக்கு ஈசானன், பரமேச்வரன் ஆன்மாவுக்கெல்லாம் பசுபதியாகவும், அஷ்டமூர்த்தியாகவும் விளங்குகிறார். நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் ஞானம் வரும். ஞானம் வந்ததும் அறிவு தெளிவுறும். அடுத்து, பரம வைராக்கியம் ஏற்படும். அதனால் யோகம் சித்திக்கும். யோகத்தின் மூலம் அழியாத பேரின்ப வாழ்வைப் பெறலாம். ஞானம், தியானம் இவற்றை அனுஷ்டிக்கும் ஆன்மாவுக்கு பந்தம் நீங்கிவிடும். மாயையை அறிந்தோன் பற்றற்று தன்னைக் காத்துக் கொள்வான். தேவி வித்தை என்றும், ஞானசக்தி, க்ரியாசக்தி என்றும் கூறப்படுகிறாள். என்னுடன் உள்ள தேவி என் உடலின் ஒரு பகுதியே ஆவாள். இந்தச் சராசரங்களில் நிலவும் உலகங்கள் அனைத்தும் மாயாவிகாரமே. இவ்விதம் சொன்ன பரமன் பார்வதியின் முகம் நோக்க, ஈசன் திருவுள்ளத்தை அறிந்த தேவி அன்று பகலிலேயே சனகாதியருக்கு மாயையை அகற்றி பிறவாப் பேரின்ப வீட்டை அடைய அருள்புரிந்தாள்.
தொடரும்🙏🙏
No comments:
Post a Comment