Thursday, July 9, 2026

லிங்க புராணம்

 லிங்கபுராணம் 


பகுதி 26 


தக்கன் நடத்திய வேள்வியும், அதன் விளைவும் தக்கன் தன் மகள் சதியை ஈசனுக்குத் திருமணம் செய்து வைத்தான். தக்கன் மகள் என்பதால் தேவி தாட்சாயிணி என்றும் அழைக்கப்பட்டாள். தக்ஷபிரஜாபதியை இந்திராதி தேவர்கள் வணங்குவதால் மருமகனாகிய ஈசன் தன்னை வணங்கி கவுரவிப்பதில்லை என்று அவன் ஆணவத்தின் காரணமாக ஈசன் மீது பகை கொண்டான். தக்கன் மாபெரும் யாகம் ஒன்று நடத்தினான். பிரமாதி தேவர்கள் எல்லார்க்கும் அழைப்பு அனுப்பி, ஈசனுக்கு மட்டும் அனுப்பவில்லை. எனினும், தாட்சாயிணி அழைப்பில்லாமலே யாகத்திற்கு வர அவரைக் கவுரவிக்கவில்லை. மேலும், ஈசனைப் பற்றியும் அவதூறாகப் பேசினான். அவமதிப்புக்கு உள்ளான தாட்சாயிணி அக்கினியில் உடலைத் துறந்துவிட்டு இமவான், மேனை தம்பதிகளின் வேண்டுதலுக்கேற்ப அவர்களுக்குப் புத்திரியாக அவதரித்தாள். இதனால் மிகவும் கோபம் கொண்ட பரமசிவன் வீரபத்திரனைத் தோற்றுவித்து, உடனே புறப்பட்டுச் சென்று தக்கன் வேள்வியை அழித்து, அவனைத் தண்டித்து திரும்புமாறு ஆணையிட்டார். வீரபத்திரன் தக்கன் யாக சாலையை அடைந்து அங்கிருந்தாரை எல்லாம் விரட்டி அழித்து, கடைசியில் தக்கன் தலையைப் பற்றி இழுத்து, அவன் தலையைச் சீவி நிலத்திலே எறிந்தான். இந்த நிலையில் பிரமன் தோன்றி தேவர்களைத் தக்கபடி தண்டித்தாகி விட்டது. யாகம் அழிக்கப்பட்டது. இனி சாந்தம் கொண்டு ஈசனிடம் திரும்புமாறு பிரார்த்தித்தான். மேலும், தேவர்களை மன்னிக்குமாறும் வேண்டிக்கொண்டார் பிரமன். தேவர்களும் அவ்வாறே சிவனாரை அணுகி தங்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொள்ள, அவரும் இறந்தவர்களை எல்லாம் உயிர்ப்பித்து மன்னித்தருளினார். தக்கனும் சிவபெருமானை வலம் வந்து நெஞ்சம் உருக பிரார்த்திக்க, அவனை மன்னித்து கணங்களின் தலைவனாக்கினார். 


தொடரும்🙏🙏

No comments: