Wednesday, April 5, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் ---பக்கம் பதினொன்று

              ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம்
                               ---பக்கம் பதினொன்று


 கோபத்தில் எரிந்துகொண்டிருந்த கைகேயி எதிரில்
கோபம் என்ற உருவிய வாள்நிற்பதுபோல் நின்றாள்.
தீய அறிவு அந்த வாளின் பிடி , குரூரம் என்பது அதன் கூர்மை பதம் , கூனி மந்தரைஎன்ற சானைக் கல்லில்
 தீட்டி மிக கூறியதாக ஆக்கப்பட்டுள்ளது .

      அரசர் அது மிக கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்ததைப் பார்த்தார்.  அவர் மனதில் இவள் என்னுடைய உயிரை எடுத்துவிடுவாள் என்று தோன்றியது.
அரசர் நெஞ்சம் நிமிர்த்தி மிகவும் பணிவான குரலில் பேசினார்---அன்பே!நம்பிக்கையையும் அன்பையும்
போக்கி  இப்படி  தீய வரங்களை எப்படி கேட்கிறாய்?
எனக்கு பரதனும் ராமனும்  இரண்டு கண்கள்.  இதை
நான் சங்கரரின் மீது ஆணையிட்டு  சொல்கிறேன்.
அவரே சாட்சியாக இருக்கட்டும்.
 நான் கட்டாயம் தூதர்களை அனுப்புகிறேன்.
இரண்டு சகோதரர்களும் (பரதனும் சத்துருக்கனனும் ) செய்திகேட்டதும்  வந்து விடுவார்கள்.
நல்ல நாள்   பார்த்து  எல்லா  ஏற்பாடுகளும் செய்து பரதனை  அரசனாக்குகிறேன்.
ராமனுக்கு   அரசனாகும் பேராசை கிடையாது.
அவனுக்கு பரதன் மேல் அன்பு அதிகம்.
நான் தான்   நம்  குல  வழக்கப்படி   மனதில் பெரியவன் -சின்னவன் என்று பிரித்து  மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய  ஏற்பாடு செய்தேன்.
நான் ராமன் மீது நூறுதடைவைகளுக்கு  மேல்   ஆணை இட்டு
சொல்கிறேன்  ராமனின் அம்மா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ராமனுக்கு அரசபதவி வேண்டும் என்று கௌசல்யா கேட்கவில்லை. நான் தான்  உன்னிடம் கேட்காமல் இப்படி செய்தேன்.
இதனால் என் மனவிருப்பம்  நடக்க வில்லை.
 இப்பொழுது கோபத்தை விட்டு விடு. சில நாட்களுக்குப்பின்
பரதன்  யுவராஜ் ஆகிவிடுவான்.
எனக்கு ராமனுக்கு  வனவாசம்  என்பதுதான்  மிகவும்  வருத்தமாக உள்ளது.  என் இதயம்   எரிகிறது.  இது  பரிகாசமா ?  கோவமா ?உண்மையா?
கோவத்தை விட்டு விட்டு   ராமனின்   தவறைச் சொல்.
ராமன் மிகவும்  சாது என்றுதான்  அனைவரும்   சொல்கின்றனர்.
  நீயே ராமனைப் புகழ்ந்திருக்கிறாய்.  அவனிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறாய். நீ புகழ்ந்ததும் அன்பு காட்டியதும்  பொய்யா ?    மெய்யா ?
அவன் விரோதிக்கே அனுகூலமானவன் . அம்மாவிடம் அனுகூலமற்று எப்படி நடந்து கொள்வான்.
 அன்பே! சிரிப்பையும் கோவத்தையும் விட்டுவிடு.
எண்ணி சிந்தித்து வரங்களைக் கேள். அப்பொழுதான் நான்
பரதனின் ராஜ்யாபிஷேகத்தைப் பார்க்க முடியும்.

     மீன்கள் தண்ணீரின்றி இருக்க முடியும். பாம்பு மாணிக்கம்
இன்றி இருக்கமுடியும்.    ஆனால்  நான் ராமனின்றி
உயிருடன் இருக்கமுடியாது.
 அன்பே!அறிவே!என்னுடைய   வாழ்க்கையே  ராமனின் தர்சனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 அரசரின் ஒவ்வொரு வேண்டுகோளும்  கைகேயின் குரோதாக்னியை மேலும் அதிகப்படுத்தியது.
அது   நெருப்பில் நெய்   ஊற்றியது போல் இருந்தது.
 நீங்கள் என்ன சொன்னாலும் சரி , இங்கு உங்களது சொல் எடுபடாது. நான் கேட்டதைக் கொடுங்கள்.  முடியாது என்றால்
இல்லை என்று சொல்லி இகழ்ச்சியைப் பெறுங்கள்.
ராமர், நீங்கள் ராமரின்  அன்னை அனைவரும் நல்லவர்கள்.
கௌசல்யா என்  நலம் விரும்புபவள் . நான் அதை நினைவில்நடு அதன் பலனையே அவளுக்கு கொடுத்துவிடுவேன்.   விடிந்ததுமே  முனிவேடம்  தரித்து ராமன்   வனத்திற்குச் செல்லவில்லை  என்றாள்
நான் இறந்துவிடுவேன். உங்களுக்கு இகழ்ச்சியும்
அவப்பெயரும் ஏற்படும்.
     குரோதம் என்ற நதி   கரைகடந்து ஓடுவது போல்  கைகேயி எழுந்தாள். அந்த நதி பாவம் என்ற    மலையில்  இருந்து
வெளிப்பட்டு குரோதம் என்ற நீரினால் பெருக்கெடுத்து  பொங்கி   ஓடியது. அந்த பயங்கரத்தைப்   பார்க்க முடியாது.
இரண்டு வரங்களும் அந்த    நதியின்  இரு கரைகள்.
கைகேயியின் பிடிவாதம் அந்த      நதியின் ஓட்டம் .
கூனியின் தூண்டுதல் இந்த நதியின் சுழல்.
அந்த குரோத நதி ராஜா தசரதர் என்ற மரத்தை வேரோடு சாய்த்து    ஆபத்து என்ற கடலை நோக்கி செல்கிறது.

அரசருக்கு இந்த வரங்கள் உண்மை என்று உணர்ந்ததுமே தன் மரணம் பெண்ணை சாக்காக வைத்து தலையின் மேல் நடனமாடுகிறது முடிவெடுத்தார். உடனே தசரதர் கைகேயியின் காலில் விழுந்து  அன்பே! நீ சூரிய குலம்
என்ற மரத்திற்கு கோடாலி ஆகிவிடாதே. என்றார்.
நீ என் தலையைக் கேள் தருகிறேன். என்னை ராமரின் பிரிவால் வதைத்து விடாதே. ராமனை மட்டும் வைத்துக்கொள்.இல்லை என்றால் உனக்கு இந்த ஜன்மம் முழுவதும் மன வேதனையே.
நோய்  தீராத நோய் என்று அறிந்ததுமே , மிகவும் வேதனையான குரலில்  ராமா !ராமா!ரகுநாதா! என்று
சொல்லி தரையில் விழுந்துவிட்டார். 

raamacharitha manas ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் --பதினொன்று

ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் -பதினொன்று

       கைகேயி  தசரதரிடம் சொன்னாள்---உயிரன்பரே !
 என்  மனதிற்குப் பிடித்த முதல் வரம்  என் மகன் பரதனுக்கு ராஜாபிஷேகம் .
இரண்டாவது வரம்  கைகூப்பி கேட்கிறேன் ,
என் மன விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
தவசிகள் வேடத்தில் மிக வருத்தமான நிலையில் ராமன் பதினான்கு ஆண்டுகள் வரை காட்டில் வசிக்கவேண்டும்.
கைகேயியின் வரங்களைக் கேட்டு தசரதர் மிகவும் வருந்தினார். நிலவின் ஸ்பர்சத்தால்  சக்கரவாகுப் பறவை
ஆற்றலாற்றுப்  போனது போல் அவர் நடுங்கினார்.
கழுகு காடையின்மேல் பாய்ந்த நிலையானார்.
பனைமரத்தில்     இடி விழுந்தது  போல் ஆனார்.
எரிந்த நிலையில் கருத்தது போல் அவர் நிலைமாறியது.
  கவலையே உடல்வடிவில் வந்தது போல் தலையில் கைவைத்து  இருகண்களையும்   மூடி சிந்திக்கத் தொடங்கினார்.    அவர் நினைத்தார் --என் மன விருப்பம் என்ற கற்பகமரம் பூத்துவிட்டது ஆனால் காய்த்து  பழுக்கும் முன்   கைகேயி என்ற யானை அதை வேரோடு பிரித்து எரிந்து   விட்டது.
கைகேயி அயோத்தியாவையே பாழ்படுத்தி விட்டாள்.
அழிவுக்கு திடமான அஸ்திவாரம் போட்டுவிட்டாள்.
 பெண்ணை நம்பி  மோசம் போய்விட்டேன்.
யோகிக்கு பலன்  கிடைக்கும்  போது யோகியின் தவம்
கலைத்ததுபோல் ஆகிவிட்டது.
இவ்வாறு  அரசன் மனதிற்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தார்.
அரசனின் இந்த நிலை கண்டு  தீய  அறிவுள்ள  கைகேயி  மனதில்  மிகவும்   கோபம்  அடைந்தாள்.
அவள்  கேட்டாள்---பரதன் தங்கள் மகன் இல்லையா ?
நீங்கள் என்னை விலை  கொடுத்தா  வாங்கிக்கொண்டு வந்தீர்கள்?  நான் உங்களை மணந்த  மனைவி இல்லையா?
என்னுடைய சொற்கள்  உங்களுக்கு   அம்பு போல் தோன்றினால் , நீங்கள் சிந்தித்து     பேசவில்லை. ?
முடியாது என்று சொல்லிவிடுங்கள். நீங்கள்  ரகு குலத்தில்
வாக்குத் தவறாமைக்கு புகழ் பெற்றவர்.
 நீங்கள் தான் வரம்  அளிக்கிறேன் என்றீர்கள் .
இப்பொழுது தர வேண்டாம். உண்மையை விட்டு விட்டு உலகில்    அவப்   பெயர்    பெறுங்கள்.
உண்மையைப்  புகழ்ந்து வரம் தருகிறேன் என்றீர்கள் .
ராஜ  சிபி ததிசி ,பலி போன்றவர்கள்   தன்  வாக்கு   மாறக்கூடாது  என்பதற்காக உடலையும் செல்வத்தையும்
தியாகம் செய்தனர். கைகேயி மிகவும் கசப்பான கடுமையான    வார்த்தைகளை  அள்ளி வீசினாள்.
 தர்மத்தின்  அச்சு   தசரதர்   தைரியத்தை உண்டாக்கி
கண்களைத் திறந்தார்.  பிறகு     பெருமூச்சு  விட்டு
என்  நிலையை  மிகவும்  மோசமாக்கிவிட்டாய். இனிமேல்
நான்  பிழைப்பது  கடினம் என்றார்.



ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்- பத்து

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்-பத்து

     தசரதர்   தன் மனதில் கைகேயியை நல்ல மனம் படைத்தவள்  என்று  நினைத்து அன்புடன் ஆனந்தமாக
மென்மையான அழகான சொற்களுடன்  ,"பெண்ணே!
உன்மனம்  மகிழ்ந்துவிட்டது. நகரம் முழுவதும் ஆனந்தமாக வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  நான் நாளையே ராமருக்கு யுவராஜ் பதவி கொடுக்கிறேன்.
ஆகையால் நல் விழியாளே! நீ மங்களப் பொருள்களை அலங்கரி.  இதைக்கேட்டதும்   அவளுடைய   கல்மனம் உடையத் தொடங்கியது.  பழுத்த வெயில் கொப்பளம்
உடைந்து விட்டது போல் இருக்கிறது.

   ஆனால் இப்படிப்பட்ட வலியையும் கைகேயி சிரித்து  சமாளித்தாள். திருடனின் மனைவி  வெளிப்படையாக
அழமாட்டாள்.
அரசர் அவளுடைய கபடத்தையும்  கெட்டிக்கார நடிப்பையும்
புரிந்துகொள்ளவில்லை.
காரணம் கோடி கொடுமைக்காரிகளின்  தலைமை குரு
கூனியின் சிஷ்யை. அவள் சொல்லிக்கொடுத்தபாடம்.

   அரசன் நீதியில் நிபுணராக இருந்தபோதிலும்  பெண்களின்
நடத்தை மற்றும் குணத்தின் ஆழத்தை அறிவது கடினம்.
அவள் கபடம் நிறைந்த அன்பை வெளியில் காட்டி கண்களையும் முகத்தையும் திருப்பி    சிரித்துக்கொண்டே
சொன்னாள்----- பிரிய நாதா!  நீங்கள் கேள் !கேள்! என்கிறீர்கள். ஆனால்    நீங்கள்  எப்பொழுதும் எதுவும் கொடுக்கல் -வாங்கல் கிடையாது.
நீங்கள் இரண்டுவாரம் கொடுப்பதாகச் சொன்னீர்கள் . அதே கிடைப்பது சந்தேகமாக உள்ளது.
நான் இப்பொழுதுதான் நீ சொல்வதை புரிந்துகொண்டேன்.
நீ அந்தவரங்களை  என்னிடம் சேமிப்பாக கொடுத்து வைத்துள்ளாய்.  நீ அவைகளைக் கேட்கவே இல்லை. என்னுடைய மறதியால்  அந்த  நிகழ்ச்சி  எனக்கு நினைவில் இல்லை.  என்னை பொய்யானவன் என்று குறைஇல்லாதே.
 இரண்டுக்கு பதிலாக நான்கு வரங்கள் கேள்.
உயிர் போனாலும் வாக்கு தவறக்கூடாது என்பதுதான்
ரகுகுல முறை  .
பொய்  சொல்வது போன்ற பாவங்களின் கூட்டம்  வேறெதுவும் இல்லை.
கோடி  குண்டுமணிகள்  சேர்ந்தாலும் மலையாக முடியுமா?
உண்மைதான் எல்லா உத்தம நற்செயல்களுக்கும் புண்ணியத்திற்கும்   ஆணி வேர்.
மனுநீதிப்படியும் வேதங்கள் -புராணங்களிலும் இப்படியே சொல்லப் பட்டிருக்கிறது.
மேலும் ராமனின் மீது ஆணையிட்டு நான் சொல்லி இருக்கிறேன். ராமர் எனது புண்ணியம். ராமர்  எனது அன்பின் எல்லை. இவ்வாறு தான் சொன்னதை தசரதர் உறுதிப்படுத்தினார். அப்பொழுது வேட்டைக்காரி  போல் தன்னுடைய வாக்கு என்ற வேட்டைப்பறவையை விட விரும்பினாள். 

Tuesday, April 4, 2017

ராமசரித மானஸ்ப---அயோத்யகாண்டம் ---பக்கம் ஒன்பது

     ராமசரித மானஸ்ப---அயோத்யகாண்டம்
                                                                                            ---பக்கம்  ஒன்பது

    மிகவும்   பலசாலியான இந்திரனையே
  பயமில்லாமல்  அரக்கர்களிடமிருந்து  காத்தவர்  தசரதர். அனைத்து அரசர்களும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருப்பர்.
அதே அரசர்  தசரதர் இன்று மிகவும் பயந்துகொண்டே தன் அன்பு  ராணி கைகேயியிடம் சென்றார். இதுதான் காமதேவனின் பிரதாபம் . மகிமை.
திரிசூலம் ,ஈட்டி, கத்தி முதலியவற்றின் காயங்களை
சகித்துக்கொள்ளும் தசரதர், இன்று ரதிநாதர்,
காமதேவனின் பூக்களால் அடிக்கப்பட்டார்.
 கைகேயியின் நிலை கண்டு அவருக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.
  கைகேயி தரையில் படுத்திருந்தாள். பழைய தடிமனான துணி அணிந்திருந்தாள்.  உடலில் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி எரிந்திருந்தாள்.
அந்த துர்மதியாள் கைகேயியின் தோற்றம்  அந்த தீய வேஷத்தில் எப்படி அழகாகத் தோன்றும் ? அவள் தோற்றம் எதிர்காலத்தின் விதவைக்  கோலத்தின்  அறிவுப்பு கொடுத்துக்கொண்டிருந்ததுபோலவே காட்சியளித்தது.
அரசர் அவளிடம் மிக மெதுவாக பாசமுடன் கேட்டாள்--என்னுயிரைவிட   அன்பானவளே!
ஏன் கோவமாக இருக்கிறாய் ?
என்று அவள் உடலைத்  தொடும்போது  தட்டிவிட்டாள்.
கோவத்தில் சீரும் நாகம்போல்  கொடூரமான பார்வை வீசினாள்.
இரண்டு வரங்கள் அந்த நாகத்தின் நாக்குகள் போலவும் இரண்டு வரங்களை வைத்திருந்தது பல் போலவும் ,
இப்பொழுது கடிப்பதற்கேற்ற இடத்தைத் தேடுவதுபோலவும் இருந்தன.
 அரசர் தன்  சாதுர்யத்தால்  இதை காமதேவனின் விளையாட்டு என்றே அறிந்தார் என துளசிதாசர் சொல்கிறார்.
அவர் மிகவும் மென்மையான அன்பான குரலில் அடிக்கடி
கோவத்தின் காரணத்தைக் கேட்கிறார்.
அழகே!அழகுவிழி யே!குயில் போன்று இனிமையாக பேசுபவளே!  யானையைப்போல் மெதுவாக ஆடி அசைந்து
நடப்பவளே! கோவத்தின் உண்மையான காரணத்தை சொல் என்றார் .
 
 அன்பானவளே! உனக்கு யார் தீங்கு செய்தார்கள் ?
யாருக்கு இரண்டு தலைகள் உள்ளன?யமன் யாரைத் தன் உலகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்?
 நீ சொன்னால் ஏழையை  அரசன் ஆக்குவேன். அரசனை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் .
 உன்னுடைய விரோதி  தேவதையாக இருந்தாலும் சொல் ,
அவனைக் கொன்றுவிடுவேன். அப்பாவி மனிதர்களாக இருந்தால் புழு பூச்சி போன்று நசுக்கிவிடுவேன்.
அழகியே! உனக்கு நன்றாகத்தெரியும் ,என்னுடைய மனம் உன்னுடைய முகம் என்ற நிலவின் சக்கரவாஹப் பறவை.
அன்பானவளே!என்னுடைய நாட்டு மக்கள், குடும்பம் ,சர்வ சம்பத்துக்கள் மட்டுமல்ல என் உயிரும் உன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நான் உன்னிடம் எதுவும் கபடமோ ஏமாற்றமோ செய்யவில்லை . இது ராமன் மீது ஆணை.

   நீ சிரித்து உன் மனம் விரும்புவதைக் கேள்.   உன் அழகான அங்கங்களை நகைகளால் அலங்கரித்துக்கொள். மனதில் நல்லது கெட்டதை  சிந்தித்துப்பார். அன்பே! சீக்கிரம் இந்த  தீய வேஷத்தை மாற்றிக்கொள்,
 இதைக்கேட்டதும் துர்மதியாள்  கைகேயி சிரித்துக்கொண்டே எழுந்தாள்.  நகைகள் அணிந்து கொண்டாள். அவள் நடவடிக்கை வேட்டைக்காரி மானைப் பார்த்து வலை தயாரிப்பதுபோல் இருந்தது.
   

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம் எட்டு

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்  எட்டு


            மிகவும் ஆனந்தமாக  நகரத்தின் எல்லா ஆண்களும் பெண்களும் நல்லொழுக்கமாக அனைத்தையும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். அரண்மனை நுழைவாயிலில் கூட்டம் கூடியது. சிலர் உள்ளே சென்றனர். சிலவெளியே வந்தனர். அனைவரின் முகத்திலும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
  ராமரின் பால்ய சிநேகிதர்கள் ராஜதிலக செய்தி கேட்டு மகிழ்ச்சியுடன் ராமரை சந்திக்க வந்தனர்.
அவர்களின் அன்பை அறிந்து ராமர் அவர்களுக்கு தக்க மரியாதை செய்தார்.  மென்மையான குரலில் நலம் விசாரித்தார்.

தன் அன்புத்தோழன் ராமரின் அனுமதி பெற்று  ,
தங்களுக்குள் ராமரின் பெருமையை கூறிக்கொண்டே வீட்டிற்குத் திரும்பினர்.
இவ்வுலகில் ராமர் போல் ஒழுக்கமுள்ளவர்கள் .அன்பாகப் பழகுபவர்கள்  யாருமே இல்லை என்றனர்.
நாம் எவ்வகையில்  எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
நமக்கும் ராமருக்கும் இறக்கும் உறவு  நிலைத்து இருக்கவேண்டும்.
நகரத்தில் உள்ள அனைவரின் ஆசைகளும் அதே.
ஆனால் கைகேயி மனதில் எரிந்து கொண்டிருந்தாள்.
தீயவர்களின் சேர்க்கையால் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தாழ்ந்த புத்தி உள்ளவர்கள் சொல்படி நடந்தால்
அறிவு மழுங்கிவிடும்.
  மாலை நேரம் ராஜா தசரதர் கைகேயியின் மனைக்கு வந்தார்.  அவர்வருகை  அன்பே உருவெடுத்து
கொடுமையிடம் வந்ததுபோல் இருந்தது.

 கோப பவனம் என்ற பெயரைக்கேட்டதுமே ராஜா பயந்துவிட்டார். அச்சத்தால் அவர் கால்கள் நகரவில்லை. 

Monday, April 3, 2017

ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --பக்கம்-ஏழு

ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --பக்கம்-ஆறு

      கூனி  கைகேயியை பலிகடா ஆக்கிய பின்  தன்  கபடம் என்ற  கத்தியை மீண்டும் கூர்மை ஆக்கினாள்.
ராணி கைகேயி உடனே வரக்கூடிய கஷ்டங்களை சகிக்க தயாராக இல்லை.  மான்குட்டி பசுமையான   புல்லை அச்சமின்றி மேய்வதுபோல் தனக்கு வரும் ஆபத்தை  உணராததுபோல்  கைகேயியும் கூனியின் பேச்சில்
மயங்கி தன் விபத்தை உணரவில்லை.

 கூனியின் பேச்சுக்கள் ,  கேட்பதில் மென்மையானவை.
ஆனால் அதன்  விளைவுகள்  பயங்கரமானவை .
விஷம்  கலந்த  தேன்  போல்    அவளது கபட நாடகம்.
 கூனி சொன்னாள்---அம்மா! நீ எனக்கு ஒரு கதை சொன்னாய்.  நினைவு இருக்கிறதா ?

   உன்னுடைய இரண்டு வரங்கள் அரசரிடம்  சேமிப்பாக உள்ளது.  இன்று அந்த வரங்களைக்  கேட்டு  உன் என்னத்தை நிறைவேற்றிக்கொள்.  ஒருவரத்தால் மகனுக்கு பட்டாபிஷேகமும் , ஒருவரத்தால் ராமனுக்கு வனவாசம் கேள்.
சக்களத்தியின் எல்லா ஆனந்தத்தையும் நீயே அடைந்து கொள்.

   முதலில் ராமனின் மீது சத்தியம் வாங்கிய பின் வரங்களைக்  கேள். அப்பொழுதுதான் அவர் சொன்ன வாக்கை மீறமாட்டார் .  இன்று இரவுக்குள் முடிக்கவில்லை என்றால்
வேலை கெட்டுவிடும்.
நான் சொல்லுவதை உயிரைவிட மேலானதாகக் கருதவேண்டும்.
பாவி கூனி மேலும் சொன்னாள்--
 கோவமான பவனத்திற்கு செல்லுங்கள்.
எல்லா வேலையையும் மிகவும் எச்சரிக்கையுடன் செய்யவும்.
அரசரை உடனே  நம்ப வேண்டாம். அவர் சொல்வதைக் கேட்க வேண்டாம்.  ராணி கூனியை  உயிர் போன்ற பிரியமானவள் என்று நினைத்து அடிக்கடி  அவளை புகழ்ந்தாள்.
 உலகில் உன்னைப்போன்ற என்னுடைய நலம் விரும்பி யாரும் இல்லை. மூழ்குபவளுக்கு நீ உதவியாக வந்துள்ளாய்.

நாளை கடவுள் என்னுடைய மன விருப்பத்தைப் பூர்த்தி செய்தால்   உன்னை நான் என் கண்மணிபாப்பா ஆக்கிக்கொள்வேன்.
இவ்வாறு அடிமையை  புகழ்ந்து விட்டு கைகேயி  கோவபவனுக்குச் சென்றாள்.
கலஹம்  விதை. கூனி  மழைகாலம். கைகேயியின் தீய அறிவு
நிலமாகிவிட்டது. அதில் கபடம் என்ற  நீர் ஊற்றி ,
முளை கிளம்பிவிட்டது. இரண்டுவரங்கள்   அந்த முளை கிளம்புதலில்   இரண்டுவரங்கள் இரட்டை இலைகள்.முடிவில் இதில் துன்பம் என்ற பழம் உண்டாகும்.
 கைகேயி  கோபத்தின் எல்லா உருவமாகி  தூங்கினாள்.
அவளுக்கு ஆட்சி  துஷ்ட புத்தி யால் நஷ்டமாகி விட்டது.
அரண்மனையும் நகரமும் ஆடம்பரமாக இருந்தது.
இந்த தீய சூழ்ச்சியை யாரும் அறியவில்லை.

Sunday, April 2, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் --பக்கம் -ஆறு

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் --பக்கம் -ஆறு

  கைகேயி மந்தரையிடம் மீண்டும் சத்தியம் செய்து சொல்லும்படி கேட்க,  கூனி  என்ன கேட்கிறாய்?
மிருகங்களுக்குக் கூட தனது நல்லது  கேட்டது தெரியும்.உனக்கு இப்பொழுதும் புரியவில்லையா ?

    பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. ஏற்பாடுகள் அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்று என்னால் தான் இந்த செய்தி உனக்குத் தெரிந்துள்ளது.
நான் உன்னுடைய ராஜ்யத்தில் உணவு உண்டு வளர்ந்துள்ளேன். உண்மை சொல்வதால் தவறு இல்லை.

நானாக கெடுப்பதற்காக ஏதாவது செய்தால் கடவுள் எனக்கு தண்டனை அளிப்பார்.  நாளை ராமனுக்கு ராஜதிலகம் நடந்துவிட்டால்  கடவுள் உனக்கு விபத்தின் விதையை விதைத்து விட்டார்.
 நான் கோடுபோட்டு  உறுதியாகச் சொல்கிறேன் --நீ இப்பொழுது பாலில் விழுந்த ஈ ஆகிவிட்டாய். பாலில் ஈ விழுந்தால் ஈயை எடுத்து எரிந்து விடுவார்கள்.
அப்படியே உன்னை விட்டிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்.
நீ மகனுடன் வேலைக்காரி ஆகிவிட்டால் வீட்டில் இருக்க முடியுமா ?   வீட்டில் இருக்க வேறு வழி இல்லை. கத்ரு வினதாவிற்கு துன்பம் அளித்தாள். உனக்கு கௌசல்யா துன்பம் தருவாள். பரதன் சிறைக்குச் செல்வான். லக்ஷ்மணன்
ராமனுக்கு உதவியாளனாவான்.
கூனியின் கசப்பான விஷம் நிறைந்த வார்த்தைகளைக்கேட்டு  கைகேயி மிக பயந்துவிட்டாள்.
உடல் வியர்த்து நடுங்கியது. அப்பொழுது கூனிக்கு பயம் வந்து விட்டது. கைகேயி இதயத்துடிப்பு நின்றுவிட்டால் ?!
எதிர்மாறாக நடந்துவிடும்.
கூனி  கபடக்கதை களைக் கூறி கைகேயியை தைரியமாக இருக்கச்சொன்னாள்.
கைகேயிக்கு இந்த கூனியின் கபடநாடகம் பிடித்துவிட்டது.
அவள் கொக்கை அன்னமாக எண்ணி  அவளைப் புகழ்ந்தாள்.
மந்தரையே!நீ சொல்வது சத்தியமே.எனது இடதுகண் தினந்தோறும் துடிக்கிறது. நான் இரவும் பகலும் தீய கனவுகளைக் காண்கிறேன். ஆனால் என் அறியாமையால் உன்னிடம் சொல்லவில்லை. இன்றுவரை நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. ஏன் எனக்கு கடவுள் சஹிக்கமுடியாத துன்பத்தைத் தருகிறார்?
நான் தாய்வீட்டில் சென்று வாழ்வேன். நான் உயிருள்ளவரை சக்களத்திக்கு அடிமை வேலை செய்யமாட்டேன். கடவுளே விரோதிக்கு அடிமை ஆக்கினால், அவர்களுக்கு வாழ்வதைவிட இறப்பதே மேல்.
என்று கைகேயி ப்லாம்பியதும் கூனி மீண்டும் கபட நாடகத்தைத் தொடர்ந்தாள்.
  நீ  ஏன்  வீணாகப் புலம்புகிறாய்.உன்னுடைய நலன்  அதிகமாகும். உனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கு தீங்கே உண்டாகும். நான் இந்த தீய்தைக்கேட்டதிளிருந்து  பகலில் பசியில்லை. இரவில் தூக்கம் வரவில்லை.
நான் ஜோதிடர்களிடம் கேட்டேன். அவர்கள் கணக்கிட்டு பரதன் தான் அரசன் ஆவான் என்று சொன்னார்கள். இது சத்தியம்.  நான் உனக்கு வழி சொல்கிறேன். ராஜா உன் பணிவிடையால் உன் வசத்தில் இருக்கிறார்.  கேள். என்று கூனி சொன்னாள்.
  கைகேயி சொன்னாள்--மந்தரை! நீ சொன்னால் நான் கிணற்றிலும் குதிப்பேன். மகனையும் கணவனையும் கூட விட்டுவிடுவேன். நீ என் துன்பத்தை அறிந்து அதிலிருந்து விடுபட  என் நன்மைக்காகச் சொன்னால், நான் கட்டாயம் செய்வேன்.