கோவர்த்தன பூஜை : இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் செய்தி
எஸ். அனந்தகிருஷ்ணன், சென்னை, தமிழ்நாடு
வணக்கம். நமஸ்காரம். ஜெய் ஸ்ரீகிருஷ்ணா! ஜெய் ஸ்ரீகிருஷ்ணா!
இந்திரன் மழைக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். மழை வேண்டி பிருந்தாவனத்தில் வாழ்ந்த மக்கள் இந்திரனை வழிபட்டு வந்தனர்.
ஸ்ரீகிருஷ்ணர் தமது பால லீலைகளால் பிருந்தாவன மக்களை மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தி வந்தார்.
ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணர் பிருந்தாவன மக்களிடம் கூறினார்:
நாம் வாழும் இந்தப் பிருந்தாவனத்தின் இயற்கைச் சமநிலை கோவர்த்தன மலையைச் சார்ந்துள்ளது. எனவே, நாம் கோவர்த்தன மலையை வழிபட்டு, அதற்கு நமது நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணரின் அறிவுரைப்படி, பிருந்தாவன மக்கள் இந்திர வழிபாட்டிற்குப் பதிலாக கோவர்த்தன மலையை வழிபடத் தொடங்கினர்.
இதனை அறிந்த இந்திரன் கோபமடைந்தார். பிருந்தாவனத்தில் பெருமழையைப் பொழியச் செய்தார்.
அப்போது ஸ்ரீகிருஷ்ணர் தமது சுண்டு விரலால் கோவர்த்தன மலையைத் தூக்கினார். பிருந்தாவன மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும் பசுக்களுடனும் மலையின் கீழ் அடைக்கலம் புகுந்தனர்.
தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பெய்தது. ஆயினும், பிருந்தாவன மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். மழையால் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இதைக் கண்ட இந்திரன் ஸ்ரீகிருஷ்ணரின் மகிமையை உணர்ந்தார். தமது அகந்தையை விட்டொழித்து, ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினார்.
பிருந்தாவன மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்வின் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடம்:
இயற்கையே நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகிறது. மலைகள், ஆறுகள், காடுகள், விலங்குகள், பறவைகள் மற்றும் மழை ஆகிய அனைத்தும் மனித வாழ்வின் அடிப்படைகளாகும்.
இவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
இயற்கைக்கு நன்றி செலுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், அகந்தையைத் துறத்தல் ஆகியவையே கோவர்த்தன பூஜை நமக்கு உணர்த்தும் உயரிய செய்திகளாகும்.
வாருங்கள்! இயற்கையை மதித்து, அதன் சமநிலையைப் பாதுகாப்போம் என்று உறுதி ஏற்போம்.
ஜெய் கோவர்த்தனதாரி ஸ்ரீகிருஷ்ணா!
No comments:
Post a Comment