ரகுநாத கிருஷ்ண மூர்த்தி அவர்கள் பதிவு நகல் . அவருக்கு நன்றி
ஐந்து யாகங்கள
்
***************************
சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர்.
முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெருக்கிக் கொண்டனர்.
யாகங்களால் இவை மட்டுமல்ல, பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும்.
வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு.
இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டிய
5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
1.தேவயாகம், 2.பூத யாகம், 3.மனிதயாகம், 4.பிரம்ம யாகம், 5.பிதுர் யாகம்.
தேவ யாகம்:
-------------------------
ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.
பூத யாகம்:
---------------------
ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஒர் உயிரினத் துக்கு) ஒருபிடி உணவு அளிக்க வேண்டும்.
மனித யாகம்:
---------------------------
தினமும் ஒரு ஏழை மனிதனுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.
பிரம்ம யாகம்:
------------------------------
அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது
பிரம்ம யெக்கியமாகும்.
பிதுர் யாகம்:
-------------------------
நம்முடைய காலஞ்சென்ற மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலியவற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம்.
யாகம் செய்வதனால் பயன் உண்டா?
என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன?
யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும்.
நம்மிடம் உள்ளபொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை,
இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே
யாகம் ஆகும்.
அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா?
அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம்.
அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல்,
கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார்.
அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை
தர்மகாண்டத்தில் பேசுகிறது.
பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்காயாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.
நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை ஆகுதிகளாக போடும்
யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு.
ஒவ்வொரு நாட்டிலும்,தொழிற் சாலைகளிலும் சிறப்பான யாக குண்டங்களை அமைத்து நியதிப்படி யாகம் செய்யப்பட்டிருக்குமேயானால்,
இன்று பூமி பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும் முடியாது.
சுற்றுபுறச் சூழல் கெட்டுருக்கவும் செய்யாது.
இனி பஞ்சயெக்கியம் பற்றிப் பார்ப்போம்:
தினசரி கடவுளை வழிபடுவது தெய்வயெக்கியமாகும்.
உடல் தந்த பெற்றோரை அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும்.
நலிந்தோருக்கு தொண்டு செய்வது மனுஷ யெக்கியமாகும்.
பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும்,ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும்.
அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பதுபிரம்ம யெக்கியமாகும்.
இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாது
யார்வேண்டுமானாலும் செய்யலாம்.
அப்படி செய்பவன் மட்டும் தான் மனிதன் ஆவான்.
###$$###$$###$$###$$###$$###$$####$$###
சிவ வடிவங்கள்
-----------------------------------
சிவ வடிவங்கள் என்பவை
சைவக் கடவுளான
சிவபெருமானின்
வடிவங்களாக
ஆகமங்களும், நூல்களும் கூறுபவனவாகும்.
இவ்வடிவங்களில் சிவபெருமான் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு அருளுகின்றார்.
வடிவ வகைகள்
----------------------------------
இச்சிவ வடிவங்களை உரு, அரு, அருஉரு என மூன்றாக வகைப்
படுத்துகின்றனர்.
இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும்,
பிரவிருத்தர், சத்தர், பரம்பொருள் என்றும்
சகளம், நிட்களம், சகள நிட்களம் எனவும்
பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர்.
உருவ நிலை
----------------------------
சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படும் உருவ நிலையானது
பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதாகும்.
தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த
சிவ வடிவங்கள் இவ்வகையில் அடங்கும்.
அருவ நிலை
---------------------------
நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படும் அருவ நிலையானது
விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதாகும்.
உறுப்புகள் எதுவும் இல்லாத சிவலிங்கம் இவ்வருவ நிலையில் அடங்கும்.
அருவுருவ நிலை
------------------------------------
சகளம், சகளத் திருமேனி என்று அறியப்படும் அருவுருவ நிலையானது,
சதாசிவ வடிவமாக இருக்கும்
முகலிங்கத்தினை குறிப்பதாக அமைகிறது.
நவந்தருபேதம்
--------------------------------
உருவ நிலையில் நான்கு,
அருவ நிலையில் நான்கு
மற்றும் அருவுருவ நிலையில் ஒன்று
என ஒன்பதும் நவந்தரும் பேதமாகும்.
இவ்வுருவங்கள் உயிர்களின் பிறப்பினை ஒழிக்க சிவபெருமான் எடுத்தவையாகும்.
இதனை,
"நவந்தருபேதம்
ஏக நாதனே நடிப்பன்"
என சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறார்.
பல்வேறு உருவ
-----------------------------------
நிலைகள்
----------------------
நவந்தருபேதத்தில் சிவபெருமானின் உருவ நிலை
பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன்
என நான்கென குறிப்பிட்டலும்,
நூல்கள் பல்வேறு உருவ நிலைகளைக் குறிப்படுகின்றன.
பஞ்சகுண மூர்த்திகள், பதினாறு வடிவங்கள், பதினெட்டு வடிவங்கள், மகேசுவர வடிவங்கள், அஷ்டாஷ்ட மூர்த்திகள்
என பல்வேறு வகைப்பாடுகளும்,
எண்ணற்ற சிவவடிவங்களும் உள்ளன.
ஐவகை உருவம்
-----------------------------------
மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணம்
சத்தியோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம், ஈசன் என ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது.
பஞ்சகுண சிவ
******************
மூர்த்திகள்
**************
வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை
முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம்.
இந்த குணங்களின் அடிப்படையில்,
சிவனது ஐந்து மூர்த்தர்கள் வகைப்படுத்தப் படுதலை,
பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள் சைவர்கள்.
வக்ர மூர்த்தி - பைரவர்
சாந்த மூர்த்தி - தட்சிணாமூர்த்தி
வசீகர மூர்த்தி - பிட்சாடனர்
ஆனந்த மூர்த்தி - நடராசர்
கருணா மூர்த்தி - சோமாஸ்கந்தர்
சிவ மூர்த்தங்கள்
*********************
சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன.
இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஈசானம் -
--------------------
சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
தத்புருஷம் -
---------------------------
பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
அகோரம் -
-----------------------
கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
வாமதேவம் -
--------------------------
கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
சத்யோஜாதம் -
*****************
இலிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி,
உமா மகேஸ்வரர்
ஓம் நமசிவாய
###$$###$$###$$###$$###$$###$$####$$###
சில சிந்தனைகள் தங்கள் மேலான பார்வைக்கு
============================================
1. சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு
அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.
நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.
நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.
குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.
ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.
2. நீ இறைவனுடைய கருணையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.
அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.
துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருணை செய்.
அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருணை செய்தால்
கடவுள் உன்னிடம் கருணை கொள்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.
3. உலகத்திலே நீ இரு.
ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
குடும்பத்தில் நீ இரு.
ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால்
நீ அழுந்தி விடுவாய்.
வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.
கப்பல் கடலில் இருக்க வேண்டும், கடல்
கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அமிழ்ந்து விடும்.
4. வேறு எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத
நரையை உனக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்றுச் சிந்தித்துப் பார்;
ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை;
மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை
அடைய நீ வந்தாய்.
அதை மறந்தவருக்கு ஓர் உணர்ச்சி வரும் பொருட்டே இறைவன்
நரையைத் தந்தான்.
நரைக்கத் தொடங்கும்போதாவது
உன் ஆவி
ஈடேறும் நெறியில் செல்.
5. யாசித்து, நெய்யும் பாலும் தயிரும் சேர்நத் சிறந்த அன்னத்தை உண்பதைவிட,
உழைத்து உண்ணும் தண்ணீரும் சோறும் சிறந்தது.
வீரமும் புகழுமில்லாமல் மங்கி நெடுங்காலம் இருப்பதைவிட,
வீரமும் புகழும் பெற்றுச்
சிறிது காலம் வாழ்வது சிறந்தது.
உமிக் குவியல் போல் நெடுநேரம் காந்திக்
கருகுவதை விட,
தைலமுள்ள மரம் போல்
ஜொலித்துச் சிறிது நேரம் எரிவது சிறந்தது.
6. புலன்களை வென்றவனே வீரன்.
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.
துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.
விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.
அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.
கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.
7. அழுக்கு மூன்று வகையாகும்..
i) மன அழுக்கு.
அவை:- பொறாமை, ஆசை, கோபம்,
பகை என்பன.
இந்த மன அழுக்கைத் ‘தியானம்’ என்ற நீரால் கழுவுக.
ii). வாயழுக்கு, அவை:-
பொய், புறங்கூறல், தீச்சொல்
என்பன.
இந்த வாயழுக்கைத் ‘துதி’ என்னும் நீரால் கழுவுக.
iii). மெய்யழுக்கு.அவை:-
கொலை, புலை, பிறன்மனை
நயத்தல், களவு முதலியன.
இந்த மெய்யழுக்கை ‘அர்ச்சனை’ என்னும் நீரால் கழுவுக.
8. நாவுக்கு அடிமையாகாதே!
‘நல்லுணவு எங்கே? எங்கே?
என்று தேடி ஏங்காதே.
இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடை.
நாவுக்கு அடிமையானால் உனது நல் குறையும்.
மீன் சதா உணவாசையினால் ஒழியாமல் தண்ணீரில்,
உலாவுகிறது,
ஒருசமயம் உணவாசையால் தூண்டிலில் பட்டு இறந்துவிடுகிறது.
9. பாம்பு, தேள், நட்டுவாக்கிலி முதலிய பெருந் துன்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலவும்.
பெருச்சாளி, எலி, பூனை, நாய் முதலிய துன்பத்தைச் செய்யும் உயிர்களைப் போலவும்,
கொசு, மூட்டை பூச்சி, உண்ணி முதலிய சிறு துண்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலும் நீ இருக்காதே.
அனில் என்ற உயிரை நோக்கு;
அது ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்கிறது
சேதுபந்தனத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது.
அதுபோல் வாழ்தல் வேண்டும்.
10. பிறர் உன்னை திட்டுவார்களாயின் அந்த வன்சொற்களை இன் சொற்களாக கருது.
நீ எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.
கிடைத்தது கூழாயினும் அதனை
நெய்யன்னமாகக் கருதி உணவு செய்.
பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு.
கசப்புப் பெருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி உட்கொள்.
அதனால் மெய்ப்பதம் காண்பாய்.
திருச்சிற்றம்பலம்
#######$$$$###$$###$$###$$###$$###$$###
நால்வர் பாதையில்...
~~~~~~~~~~~~~~~~~
நஞ்சுண்ட நாயகனாகிய ஈசனை,
ஞானசம்பந்தர் கொஞ்சியும்,
திருநாவுக்கரசர் அஞ்சியும்,
மணிவாசகர் கெஞ்சியும்,
சுந்தரர் விஞ்சியும் பதிகங்கள் பாடியுள்ளனர்.
ஞானசம்பந்தரை பாலைக் காட்டியும்,
திருநாவுக்கரசருக்கு சூலை (நோய்) காட்டியும்,
மணிவாசகருக்கு காலை காட்டியும்,
சுந்தரரை ஓலை காட்டியும் ஈசன் தடுத்தாட்கொண்டார்.
நால்வரும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்மறைகளின் வழி நின்று பாடி அருள்பெற்றனர்.
சிதம்பரம் தில்லைக் கோயிலுக்கு நான்கு வேதங்களே நான்கு கோபுரங்களாக அமைந்துள்ளன.
நான்கு கோபுர வழியாகவும் மேற்கண்ட நால்வரும் வழிவந்து வழிபாடாற்றியுள்ளனர்.
கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும்,
தெற்கு கோபுரம் வழியாக திருஞானசம்பந்தரும்,
மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும்,
வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும்
வந்து நடராஜப் பெருமானை தரிசித்து பேறுபெற்றனர்.
நடராஜப் பெருமான் ஏன் அவர்களின் மனதில் இந்த குறிப்பிட்ட வாசல் வழியாகத் தான் வரவேண்டும் என்று பணித்தார்?
அதற்கு அழகான பதிலை ஆன்றோர்கள் தந்தருளியுள்ளனர்.
திருஞானசம்பந்தர் -
************************
சீர்காழி தோணியப்பரின் அருளால்,
உமையம்மையின் திருஞானப்பால் குடித்த, குழந்தை வடிவினர்.
பெரியவர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவது போல,
குழந்தையே தெய்வத்தைக் கொஞ்சும் விதத்தில்
பாடல்களைப் பாடியுள்ளவர்.
குழந்தை நம்மைத் தேடி வரும்போது,
நாமே அந்தக் குழந்தையை நோக்கிச் சென்று கொஞ்ச விழைவது போல,
தாமே முன்னோக்கிச் சென்று (நடராஜப் பெருமான் தெற்கு நோக்கி காட்சியருளுபவர்) குழந்தையை வரவேற்பது போல,
நடராஜப் பெருமான் சம்பந்தரை தெற்கு கோபுரம் வழியாக
வரச் செய்து அருள்பாலித்தார்.
திருநாவுக்கரசர் -
**********************
மிகவும் பணிவானர்.
உழவாரப் பணி செய்தவர்.
மகேஸ்வரனின் அருள் பெற மிகவும் கெஞ்சிப் பாடியவர்.
திருநீறு பூசிய பின் சூலை எனும் வயிற்று வலி நோய் தீர்ந்து,
சிவனை நெக்குருகப் பாடியவர்.
அவருக்காக, அருள் தரும் அபய ஹஸ்தத்தினால் (நடராஜரின் வலக்கை மேற்கு நோக்கி நீண்டிருக்கும்) அருள,
அப்பர் சுவாமிகளை மேற்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
சுந்தரர் –
************
வன் தொண்டர்.
ஓலையைக் காட்டி சுந்தரன் தன் அடிமை என திருவிளையாடல் செய்து,
சுந்தரரை ஈசன் ஆட்கொண்டருளினார்.
ஈசனை ஒரு நண்பன் போல நினைத்தவர்.
விஞ்சிப் பாடியவர்.
பரமேசனையே தன் காதலிக்காக தூது போகச் சொல்லியவர்.
ஒரு நண்பனானவர் எப்படி தன் நண்பரின் பின்பக்கத்திலிருந்து வந்து,
தோள் மேல் கை போட்டு நட்பு கொண்டாடுவாரோ
அதே போல, சுந்தரர் நடராஜப் பெருமானை (நடராஜரின் பின் பக்கமாகிய வடக்கு) வந்தடைந்தார்.
சுந்தரரை வடக்கு கோபுர வாயில் வழியாக வரச் செய்து அருள்பாலித்தார்.
மாணிக்கவாசகர் –
***********************
இவர் பாடல்களின் வாசகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல மதிப்புடையதாக இருந்ததால்,
இறைவனாலேயே மாணிக்கவாசகர் என போற்றப்பட்டவர்.
திருப்பெருந்துறையில் கல்லால மரத்தடியின் கீழ் யோக நிலையில் அமர்ந்திருந்த
தட்சிணாமூர்த்தியின் இடது புறத் திருவடியின் திருவொளி கண்டு
ஞான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தவர்.
ஆகையால், அவரை (நடராஜப் பெருமானின் இடது புறமாகிய) கிழக்கு கோபுரம் வழியாக வரச் செய்து அவருக்கு அருள்பாலித்தார்.
நால்வர்கள் காட்டிய ந(நா)ல்வழியே சென்று,
அவர்கள் காட்டிய அறநெறியைப் பின்பற்றி,
அவர்களின் பாடல்களை பக்தியோடு பாடி, பரமனின்
அருளைப் பெறுவோம்.