உதவி செய்வதே உயர்ந்த பக்தி!
அயோத்தி ராமர் கோவில் திருவிழா கோல£கலமாக நடந்து கொண்டிருந்தது. ராம பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். அப்போது பக்தர்களின் மத்தியில் ஒரு தேவன் தோன்றினான். அவன் கையில் ஒளி வீசும் பொன் தட்டு ஒன்று இருந்தது.
‘யார் உண்மையான ராம கைங்கர்யம் செய்பவரோ அவர்களுக்கே இந்த பொன் தட்டு சொந்தம். உண்மையான ராம பக்தர் இந்த தட்டைத் தொடும் போது அது மேலும் ஒளி பொருந்தியதாக மாறும். அதுவே மற்றவர்கள் தொட்டால் ஒளியிழந்து பித்தளையாகி விடும்’ என்று கூறி, அந்த பொன் தட்டை ராமர் பாதத்தில் வைத்து விட்டு மறைந்து விட்டான்.
தங்களுக்கே தெரிந்த பல குற்றங்களை செய்தவர்கள் தாமாகவே விலகிக் கொண்டனர். ஆனால் பெரும் செல்வந்தர்கள், ‘ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் செய்யும், தான தருமங்கள் செய்யும் நம்மை விட சிறந்த ராம பக்தன் எப்படி இருக்க முடியும்’ என்ற எண்ணத்தில் அந்த பொன் தட்டை தொட்டனர். அது அப்போதே ஒளியிழந்து பித்தளையானது. அர்ச்சகர்கள் முதல் ஆசை விடாதவர்கள் வரை அனைவரும் அதனை தொட்டுப் பார்த்தனர். எவருக்கும் அது கிடையாது என்பது தெரிந்து போயிற்று.
அந்த ஊரில் ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். அவர் அன்றைய தினம் உழவுக்காக கலப்பையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வழியில் மயங்கிக் கிடந்தார். அவர் பட்டினியால் மயக்கம் அடைந்திருப்பதை அறிந்த உழவன், தன் வீட்டிற்கு அவரை தூக்கிச் சென்று போய், உணவு அளித்தார்.
பின்னர் அந்த வழிப்போக்கனை ஓய்வெடுக்க கூறிவிட்டு, உழவுக்காக செல்ல புறப்பட்டார். ஆனால் வழிப்போக்கனோ, அந்த விவசாயியை விடவில்லை. ‘தாங்கள் என்னுடன் அயோத்தி கோவிலுக்கு வர வேண்டும். அங்கு ஓர் அதிசயம் உள்ளது. அதனை தாங்கள் பார்க்க வேண்டும்’ என்று அழைத்தார்.
‘ஐயா! எல்லாக் கோவில்களிலும் ஓர் அதிசயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் எனக்கு உழவுத் தொழில்தான் தெய்வம். அதைத் தவிர்த்து ராம பகவானை எண்ணவோ, வழிபடவோ எனக்கு நேரம் இல்லை. நான் இதுவரை கோவிலுக்கு சென்றதில்லை. ராமநாமம் ஜபம் அறிந்தது இல்லை. வழிபாட்டு முறையும் நான் அறியவில்லை. நிலம் காயும் முன் நான் உழவு செய்ய வேண்டும்’ என்று கூறி மறுத்தார் விவசாயி.
ஆனால் எப்படியோ வற்புறுத்தி விவசாயியை தன்னுடன் ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டார் வழிப்போக்கன்.
அங்கு சென்றதும், ‘இந்த ஏழை விவசாயியை அந்த தட்டை தொட அனுமதிக்க வேண்டும்’ என்று வழிப்போக்கன், கோவில் அர்ச்சகரிடம் கேட்டுக் கொண்டார்.
அங்கிருந்தவர்கள் விவசாயியின் கந்தலான உடையையும், தோற்றத்தையும் கண்டு விலகினர். ‘பல தான தர்மங்கள் செய்த நமக்கே அந்த தட்டு சொந்தமில்லை. நெற்றியில் திருநாமம் கூட இல்லாத, தனக்கே அடுத்த வேளை உணவு இல்லாத இந்த ஏழை விவசாயிக்கா அது கிடைக்கப் போகிறது’ என்று செல்வந்தர்கள் எண்ணிக்கொண்டனர்.
ஆனால் அடுத்த சில நொடிகளில் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியின், ஆச்சரியத்தின் எல்லையில் நின்று கொண்டிருந்தனர். ஆம்! ஏழை விவசாயி தொட்டதும் பித்தளையாக இருந்த அந்த தட்டு பொன் தட்டாக மாறி முன்னிலும் கூடுதலாக ஒளிவீசியது.
ஏழை விவசாயியுடன் வந்திருந்த வழிப்போக்கன் மறைந்திருந்தார். வந்தவர் ராமர் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். அங்கு ராம நாமம் திக்கெட்டும் திகைக்கும் வகையில் முழங்கத் தொடங்கியது.
பணம் செலவழிப்பதால் அவர் தர்மவான் ஆக முடியாது. அன்னதானம் செய்வதால் அவர் அறம் செய்தவர் ஆக முடியாது. நெற்றியில் திருமண் இட்டவர் எல்லாம் ராம பக்தரும் இல்லை. பலர் பகட்டுக்காகவும், நானும் பக்திமான் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், பெருமைக்காவும் இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஏழைகளின் தொண்டே இறைவனின் தொண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஒருவர் துன்பப்படும் போது அவருக்கு துணை நின்று அவர் உயிர் காப்பதே ராம கைங்கர்யம். உதவி செய்பவர் ஏழையாக இருக்கலாம். நெற்றியில் திருமண் இடாதவராக, பஜனை, ஜெபம், வழிபாடு அறியாதவராக இருக்கலாம். இருப்பினும் ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்து துயர் துடைக்க முன்வருவாரே ஆயின் அவரே உண்மையான உயர்ந்த பக்தர்.
thinaththanthi.
No comments:
Post a Comment