Wednesday, March 29, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு

        ராமர் திருமணமாகி வந்ததில்  இருந்து தினந்தோறும்

புதிய மங்கள  நிகழ்ச்சிகள் அயோத்தியாவில் நடந்துகொண்டே இருக்கின்றன..
     ஆனந்த  மங்கள இசை வாசிக்கப்படுகின்றன.
 நான்கு உலக வடிவமான மிகப்பெரிய மலைகளில்
புண்ணிய வடிவமான  மேகங்கள்  சுகமான  மழை
பொழிந்து கொண்டிருக்கின்றன.

செழிப்பும்  செல்வமும் சொத்தும்  நதிகள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து அயோத்தியா என்ற கடலில் சங்கமித்தன.
 நகரத்தின் ஆண்களும் பெண்களும் நல்ல ரத்னங்களின் குவியல் போன்றவர்கள். பவித்திரமானவர்கள். விலை மதிப்புள்ளவர்கள். அழகானவர்கள்.
 நகரத்தின் ஐஸ்வரியம்  பற்றி சொல்லவும் வேண்டுமா ?
நகர மக்கள் அனைவரும்  ஸ்ரீ ராமச்சந்திரரின் முகம் என்ற நிலவைப் பார்த்து எல்லாவிதத்திலும் மகிழ்ந்தனர்.
  எல்லா அன்னைகளும் தோழிகளும்  தன்னுடைய மனவிருப்பம் என்ற கொடி  பூத்து பழுத்துள்ளது கண்டு ஆனந்தமடைந்தனர். எல்லோரும்  மகாதேவனை வேண்டி தன்  விருப்பத்தை வெளியிட்டனர். அரசர் உயிருடன் இருக்கும்போதே   ஸ்ரீ ராமச்சந்திரருக்கு  இளவரசர் பட்டம் தரவேண்டும் .
 இந்த மக்களின் எண்ணம் பூர்த்தி அடைந்தால்,
உடல் இருந்தாலும் இறந்தாலும்  எந்தவித வருத்தமும் இல்லை என்று தசரதர் கூறினார். இதைக்கேட்டு முனிவர் மனதில் மிக மகிழ்ந்தார்.
 வசிஷ்டர் சொன்னார் ---அரசே!  ராமச்சந்திரர்  உங்களுடைய மகன். அவர் மக்களால் மிகவும் விரும்பப்படுபவர். அவரைப்பார்க்காமல்  மக்கள் வருத்தப்படுவார்கள். அவரை ஜபிக்காமல் மனவேதனை போகாது. அப்படிப்பட்ட சர்வலோகேஷ்வர்  உங்கள் புத்திரர் ராமர்.  அவர் பவித்திர அன்பை பின்பற்றி செல்பவர்.
  அரசே!இன்னும் தாமதிக்காதீர்கள். சீக்கிரமாக ஏற்பாடு செய்யுங்கள்.  ஸ்ரீ ராமச்சந்திரர் இளவரசர் பட்டம் சூட்டும் நாள் தான் சுப நாள்.
  அரசர் ஆனந்தமடைந்து   அரண்மனைக்கு வந்தார்.
அவர் சேவகர்களின்    மூலம்   சுமந்திரியையும்  அழைத்துவரச் சொன்னார்.
அனைவரிடமும்   தசரதர்  ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய விரும்புவதைச் சொன்னார். அனைவருக்கும் என் எண்ணம் பிடித்திருந்தால்   நீங்கள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யுங்கள்.
தசரதரின் அன்பு வார்த்தைகளைக்கேட்டு  மந்திரிகள் ஆனந்தமடைந்தனர். அனைவரும்  தசரதரை "பலகோடி ஆண்டுகள் வாழ்க" என்று கோசமிட்டனர்.
  அரசே!  நீங்கள் அகில உலகத்திற்கும் நல்லதை செய்யும் நல்ல யோசனை நினைத்துள்ளீர்கள். சீக்கிரமாக செய்யுங்கள். தாமதிக்காதீர்கள் . என்றனர்.

அமைச்சர்கள் ஆமோதித்து வாழ்த்தியதும் அரசர் ஆனந்தமடைந்தார்.  தத்தளிக்கும் கொடிக்கு படர மரம் கிடைத்ததுபோல் உணர்ந்தார்.
 அரசர் அறிவித்தார் -- ஸ்ரீ ராமச்சந்திரரின் பட்டாபிஷேகத்திற்காக  வசிஷ்டர் கூறும் ஆணைப்படி அனைத்தும் உடனே செய்க என்றார்.
  வஷிஸ்டர்   மிக மகிழ்ந்து மென்மையான சொற்களால்  எல்லா உயர்ந்த தீர்த்தங்களில் இருந்தும் தண்ணீர் கொண்டுவாருங்கள் என்றார். பிறகு வேள்விக்கு வேண்டிய மூலிகைகள், வேர்கள், மருந்துகள், பழங்கள் , இலைகள்  போன்ற மங்கலப்பொருட்களின் பட்டியலைச் சொன்னார்.
  சாமரம் ,மான் தோல், பலவித ஆடைகள், பல இனத்தைச்சேர்ந்த  கம்பளங்கள், பட்டாடைகள், ரத்தினங்கள், பல மங்கலப்பொருட்கள்,பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்கள்  எடுத்துவர கட்டளை இட்டார்.
முனிவர் வேதங்களில் கூறப்பட்ட
எல்லா விதிகளையும் சொன்னார்.

நகரத்தில் அதிக கூடார மண்டபங்கள் அமைக்க உத்திரவிட்டார். பழங்களுடன் கூடிய மா ,பாக்கு,வாழை  மரங்களை நட உத்திரவிட்டார். அழகான ரத்தினங்கள்  பதித்த மேடைகள் அமைக்கச்சொன்னார்.
கடைதெருவெல்லாம் அலங்கரிக்கச்  சொன்னார் .
ஸ்ரீ கணேசர், குரு, குலதெய்வ பூஜை செய்யக் கட்டளை பிறப்பித்தார். பூமியின் தேவதைகளான அந்தணர்களுக்கு அனைத்து வித சேவைகளும் செய்யவேண்டும் என்றார்.
 கொடிகள் ,பதாகைகள்,தோரணங்கள்,கலசங்கள், குதிரைகள், யானைகள்,  தேர்கள் எல்லாவற்றையும் அலங்கரிக்கச் சொன்னார். எல்லோரும் முனிவரின் கட்டளைகளை சிரமேற்கொண்டு தங்கள் தங்கள் கடமையில் ஈடுபட்டனர்.
முனிவரிட்ட கட்டளைகளை மிகவிரைவில் செய்து முடித்தனர். அந்த வேகம் முனிவர் கட்டளைக்கு முன்பே பணிகள் நடந்து முடிந்ததுபோல் இருந்தது.
அரசர் ராமருக்காக அனைத்து மங்கள காரியங்கள் செய்யத்தொடங்கினார்.
சாதுக்கள், அந்தணர்கள் மற்று தேவதைகளை பூஜை செய்தார். ஸ்ரீ ராமருக்காக எல்லா மங்கள காரியங்களையும் செய்தார்.
செய்தியைக்கேட்டதுமே அயோத்தியா நகரில் மங்கள் வாத்தியங்களின்  ஒலிகள் கேட்கத்தொடங்கின. பாடல்கள் பாடத்தொடங்கினர். ஸ்ரீ ராமச்சந்திரரின்,உடலிலும் சீதையின் உடலிலும் சுப துடிப்புகள் துடிக்கத்தொடங்கின.
நல்ல சகுனங்கள் தோன்றின.
 சீதையும் ராமரும் பரதனின் வருகையின் அறிவிப்பே இந்த நல்ல சகுனங்கள் என்றனர். பரதன்  தன் மாமா வீட்டிற்குச் சென்று அதிக நாட்கள் ஆகிவிட்டன. பரதனை சந்திக்கத்தான் இந்த சகுனங்கள். நமக்கு மிக அன்பானவர் பரதன் என்றனர்.
 ஆமையின் மனதில் முட்டையின் நினைவு இருப்பதுபோல்
ராமரின் மனதில் பரதனின் நினைவுகள் இருந்தன.
   ராமரின் பட்டாபிஷேகச் செய்தி கேட்டு அந்தப்புரத்தில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.  நிலவைக்கண்டு கடல் அலைகள்  வீசுவதுபோல் ஆனந்தம் அனைவருக்கும். 
Post a Comment