லிங்கபுராணம்
பகுதி 16
பாசுபத விரதம் நந்திகேச்வரர் சனத்குமாரருக்கு உபதேசித்த பாசுபத விரதம் பற்றி சூதர் முனிவர்களுக்கு விவரிக்கலானார். பிரமாதி தேவர்கள் கைலயங்கிரி வாசனை கைகூப்பித் தொழுது பசுபாசம் அகன்றிட அருள்புரியுமாறு பிரார்த்திக்க ஈசன் பாசுபத விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூற அவர்களும் அந்த விரதத்தை அனுஷ்டித்து பசுத்தன்மை நீங்கப்பெற்றனர். பாசுபத விரதம் என்பது ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனைத் தரக்கூடியது. சித்திரைத் திங்களில் படிக லிங்கத்தில் ஈசனை ஆவாகனம் செய்து, அபிஷேகம் செய்து, அலங்கரித்து பொற்றாமரை நடுவில் வைத்து நறுமண மலர்கள் கொண்டு அர்ச்சித்து, தூப தீப நைவேத்ய உபசாரங்கள் செய்து, இறைவன் நாமத்தை உளமுருக ஜபித்து வணங்க வேண்டும். தென்திசையில் அகில், மேற்கில் மனோசிலை, வடக்கில் சந்தனம், கிழக்கில் அரிதாரம் ஆகியவற்றை பீடத்தின் அருகில் வைத்து ஈசனை ஆராதிக்க வேண்டும். வைகாசியில் வைர லிங்கத்தை வைத்தும், ஆனியில் மரகத லிங்கம், ஆடியில் முத்துலிங்கம், ஆவணியில் நீலலிங்கம், புரட்டாசியில் மரகத லிங்கம், ஐப்பசியில் கோமேதக லிங்கம், கார்த்திகையில் பவள லிங்கம், மார்கழியில் வைடூர்ய லிங்கம், தையில் புஷ்பராக லிங்கம், மாசியில் சூரியகாந்தத்தால் ஆன லிங்கம், பங்குனியில் பளிங்குக் கல்லினால் ஆன லிங்கம் என்று வைத்து பரமனைத் தொழ வேண்டும். ரத்தினங்களுக்குப் பதிலாக பொன், வெள்ளி, செம்பினால் ஆகிய லிங்கங்களையும் பூஜிக்கலாம். இவ்வாறு பன்னிரண்டு மாதங்களும் நன்கு பூசை செய்து, அந்தணர்களுக்கு உணவு முதலிய உபசாரங்கள் செய்து அவர்களை ஈசன் வடிவாக எண்ணி அர்ச்சித்து வணங்கி லிங்கங்களைத் தானம் செய்ய வேண்டும். பூஜித்த லிங்கங்களைச் சிவாலயத்தில் சேர்க்கலாம். பின்னர் வியபோகன தோத்திரத்தால் சிவனைத் துதிக்கவேண்டும். அவ்வாறு செய்பவர்கள் பசுபாசம் நீங்கி சிவலோகம் அடைவர். நம: சிவாய சுத்தாய நிர்மலாய யசஸ்விநே:
துஷ்டாந்தகாய ஸர்வாய பவாய பரமாதிமநே
என்று தொடங்கும் துதி வியபோகன ஸ்தோத்திரம் ஆகும். உமாமகேசுவர விரதம் : அஷ்டமி, சதுர்த்தசி ஆகிய நாட்களில் உபவாசமிருந்து ஓராண்டு விரதம் இயற்றிய பின் பொன்னாலோ, வெள்ளியாலோ லிங்கத்தை அழகுடன் செய்து உமையுடன் பிரதிஷ்டித்து என் வினை தீர்த்தருள்வாய் என்று பிரார்த்தித்து மேள தாளங்களுடன் லிங்கத்தைச் சிவாலயத்துக்கு எடுத்துச் சென்று மறையோர்க்குப் பொருள்களுடன் தானம் செய்ய வேண்டும். பசும்பொன்னால் அமைந்த லிங்கத்துடன் ரிஷபமும், சூலமும் அமைத்து ஓராண்டு வழிபடுவோர் சிவலோகப் பிராப்தி அடைவர். இந்த உமாமகேசுவர விரதத்தை ஆண் பெண் இருபாலாரும் பக்தியுடன் கடைபிடிக்கலாம். ஈசன் திருவருளை வேண்டி அனுஷ்டிக்கும் விரதத்தின் முடிவில் பஞ்சாக்ஷரத்தை பக்தியுடன் பூஜிக்க வேண்டும்.
தொடரும்🙏
No comments:
Post a Comment