Monday, June 29, 2026

லிங்க புராணம்.

 லிங்க புராணம் 


பகுதி-1 


தோற்றுவாய்: சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் பதினொன்றாவது புராணம் ஆகும். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது. இதைப் பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்து இருப்பர் என்றார். 1. பஞ்ச பூதங்களின் தோற்றம் பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்து அனைத்துலகுக்கும், ஆதாரமானதும், வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. தமக்கென வித்து ஏதுமின்றி, அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின் ஏவலாய் மாயையிடம் இருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. பேரொலியிடமிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் உண்டாயின. வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்களுக்கு அதிஷ்டான தெய்வம் உண்டாயிற்று. தைஜசம் என்னும் அகங்காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், மனமும் உண்டாயின. தத்துவங்கள் ஓர் அண்டமாகி பிரளய நீரில் மிதந்து கொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன், அரி, அரன் என்று படைத்தல், காத்தல், அழித்தல் என்ற காரியங்களுக்கேற்ப அழைக்கப்படுகின்றார். பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கி உள்ளன. அகங்காரத்தை மகத்தத்துவம் சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதி புருஷன் தன்னிடம் லயம் கொண்டிருப்பான். பிரளயத்தின் முடிவில் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவர். 


தொடரும்🙏🙏

 லிங்கபுராணம் 


பகுதி 4 


ஈசனின் ஐவகைத் தோற்றம் 1. சுவாத லோகித கற்பத்தில் பிரமன் ஈசனைத் தொழுது தியானிக்கும் போது, ஈசன் அவர் முன் அழகிய இளம்பாலகனாய்த் தோன்றினார். இது சத்தியோசாதம் என்னும் தோற்றம். 2. படைப்புக் கடவுள் பிரம்மன், ஈசன் திருவடிகளில் அர்ச்சித்து வேதங்களால் துதித்தார். அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நான்கு முனிவர்கள் தோன்ற இத்தோற்றத்தை மனதில் தியானித்து ஈசனை வழிபடுவோர் சிவலோகம் அடைவர். முப்பதாவது இரத்த கற்பத்தில் பிரமன் ஈசனைத் தியானித்த போது சடையில் பாம்பணிந்து, கரங்களில் மானும், மழுவும் ஏந்தி ஈசன் தோன்றினார். இத்தோற்றம் வாமதேவம் எனப்படும். 3. அப்போது பந்த பாசம் அறுத்த; தெளிந்த ஞானம் பெற்ற நால்வர் ஈசனிடம் தோன்றி உலகம் உய்ய தருமம் கடைப்பிடித்தும், மற்றவர்களுக்கு உணர்த்தியும் பல்லாண்டுகள் வாழ்ந்து ஈசன் திருவடிகளை அடைந்தனர். இத்திருவுருவைத் தியானித்து வணங்கி வழிபடுவோர் பிறப்பிறப்பு நீங்கி செஞ்சடையோன் தாள் சேர்வர். பீதகற்பத்தில் நான்முகனுக்கு, எம்பெருமான் சடையில் இளம் மதி அணிந்து தோன்றினார். இத்தோற்றம் தத்புருஷம் எனப்படும். ஆனந்தம் கொண்டு பிரமன் பரமனைப் பூசித்து வேதங்களால் துதித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஈசனார் அழகிய காயத்திரியை உண்டாக்கி அவருக்கு அளித்தார். உத்தமமான காயத்திரியைப் பக்தியுடன் ஆராதிப்பவர்களுக்கு நரகவாசம் இல்லை. கைலாச வாசம் தேடி வரும். ஈசன் திருமேனியிலிருந்து தோன்றிய நால்வர் நரகவாசமளிக்கும் கர்மாக்களை நீக்கி பஞ்சாக்ஷரத்தை உணர்ந்து ஜபித்து முதலில் ஈசன் திருவடியில் சேர்ந்தனர். இத்தத் புருஷனைத் தியானித்து அவரடித் தாமரையை வழிபடுவோர் பிறவிக்கடல் நீந்தி கயிலையை அடைவர். 4. நீல கற்பத்தில் முக்கண்ணன் நெருப்பும், வாளும் கைகளில் ஏந்தி கரியரூபத்துடன் தோன்றினார். இது அகோரரூபம். மிக்க ஆனந்தத்துடன் பிரமன் அகோர வடிவில் ஈசனைப் பூசிக்க ஐயன் மனமகிழ்ந்து வேண்டுவன கேள் என்றிட பிரமன் ஐயனிடம் என்றும் குன்றாத அன்பைத் தர பிரார்த்தித்தார். அப்போது சிவனார் யாராலும் யாகம் செய்யும் அந்தணரைத் தடுத்து நிறுத்த முடியாதென்று உரைத்தார். சிவமந்திரத்தை லட்சம் முறை உச்சரித்தோர் பாபங்கள் நீங்கி கைலாசத்தில் வீற்றிருப்பர் என்று அருள்பாலித்து மறைந்தார். 5. விஸ்வரூப கற்பத்தில் மலரயன் சிவனாரைத் தியானித்த போது ஈசன் சடையில் பிறைச் சந்திரன், நெற்றிக்கண், கோரைப்பற்கள் கொண்டு இருபுறம் இரு மாதர்களுடன் தோன்றினார். அப்போது பிரமன் சிவனாரின் இருபுறம் இருக்கும் மாதர்கள் யாவர் என்று வினவ, ஒருத்தி தேவர்களை ஈன்ற அன்னை, மற்றவள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் வாணி என்று கூறினார். இவ்வாறு இப்பகுதியில் பரமனின் ஐவகைத் தோற்றம் விளக்கப்பட்டுள்ளன. 


தொடரும்🙏


 லிங்கபுராணம் 


பகுதி 3 


அஷ்டாங்க யோகம் ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று, அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர், அத்திரி, வியாசர் முதலியோரால் உலகின் பிரசித்தமாயிற்று. 1. பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி, தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள், மனைவியருடன் காட்டில் உறைவர். 2. பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் சவுசம், தவம், மகிழ்ச்சி, ஜபம், சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால், ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி, திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது, வளர்பிறை அமாவாசை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம், இரண்டாம் நாள் இரண்டு கவளம் என்று கூட்டிக் கொண்டே சென்று பௌர்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் தேய்பிறையில் நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறைநெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சி ஆகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும். 3. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல. அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும். 4. பிராணாயாமம் : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம், மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம், சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும், இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன. 1. உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது பிராணவாயு.

2. கீழ்நோக்கிப் பிரிவது அபானவாயு.

3. உடலெங்கும் நிறைந்து இரத்த ஓட்டம், சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது வியானவாயு.

4. உறுப்புகளின் சந்திகளில் தங்குவது உதானவாயு.

5. உடலைச் சமனப்படுத்தவது சமன வாயு.

6. விக்கல், கக்கல் ஏற்படக் காரணமானது கூர்ம வாயு.

7. தும்மலை உண்டாக்குவது கிரிகா வாயு.

8. கொட்டாவிக்கு உதவுவது தேவதத்தவாயு.

9. உடலை வீங்கச் செய்வது தனஞ்செய வாயு.

10. நாகன் வாயு - பாடுதல், கண் சிமிட்டல், மயிர்க்கூச்சலுக்கு உதவுவது. இந்தப் பத்துவித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம். 5. பிரத்தியாகாரம் : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.

6. புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது தாரணை.

7. ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.

8. ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய் மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும். இந்த எட்டும் யோக அங்கங்கள் ஆகும். யோகம் கடைப்பிடிக்கும் போது பல இடையூறுகள் ஏற்படும். அவை நோய், சிரத்தையின்மை, பிரமாதம், ஐயுறல், விஷயங்களில் இச்சை, துன்பம், அப்பிரதிஷ்டை, பிராநிதி தரினம் என்று கூறப்படும் ஆதிதெய்வீகம், ஆதிபௌதிகம், ஆத்யாத்மிக துக்கங்கள் என்பன. இவையே அன்றி குறிப்பாக உணரக்கூடிய உபசருக்கம் ஆறு உள்ளன. அவை முறையே பிரதிபை, தேவதரிசனம், சிரவணம், வார்த்தை, சுவாதம், ரசனை ஆகும். மேலும் பஞ்சபூதத்தின் குணங்கள், பிரமத்தின் குணங்கள் என்று பல குணங்களும் விளக்கப்பட்டன. யோகியானவள் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்குணர்ந்து அவற்றை விலக்கி, எம்பெருமான் திருவடிகளைச் சேவித்தால் அவர் அருளைப் பெற்று முக்தி அடைவான். யோகத்தைக் கடைப்பிடித்து ஈசன் அருள்பெறலாம். அதுமட்டுமின்றி நல்லறத்தைக் கடைபிடித்து அவ்வழி நின்றோர்க்கும் ஈசன் அருள் கிட்டும். ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், எந்த வழியில் வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்று கேட்டார். ஒரு சமயம் பிரம்மனிடம் தான் கூறியதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். மகாமேரு முதல் மங்கையர் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து உருகி என்னிடம் செலுத்தும் அன்புக்கு நான் அருள் செய்வேன் என்றார். 


தொடரும்🙏


 லிங்கபுராணம் 


பகுதி 5 


அரி, அயன் கண்ட ஜோதி பிரகிருதித் தத்துவமே ஒளிப் பிழம்பாய் லிங்கமாய் மாறியது. திங்கள் முடிசூடி, நஞ்சுண்ட முக்கண்ணனே அந்த லிங்கமாகி நின்றான். பிரளய வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது நாராயணன் யோக துயில் கொண்டு இருந்தான். நித்திரை கலைந்து எழுந்த பிரமன் உலகை மீண்டும் படைக்க எண்ணுகையில் பிரளய நீரில் மாதவனைக் கண்டார். நாராயணன் தானே சகல உலகங்களையும் தோற்றுவிப்பவன் என்றான். ஈரேழு புவனங்களையும் அனைத்து உயிர்களையும் படைப்பவன் நானே என்றான் பிரம்மன். இருவரில் யார் பெரியவன் என்ற போட்டி துவங்கி சண்டையாக மாறியது. அவ்வமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட, அடியைக் காண வராக வடிவில் நாராயணன் புறப்பட்டான். இருவரும் முடி, அடி காணமுடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக, ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர். அண்டம் கிடுகிடு என நடுங்குமாறு பேரொலி ஒன்று கேட்டது. அப்போது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் சடையில் பிறைச்சந்திரன் கைகளில் மான் மழுவேந்தி எம்பெருமான் தரிசனம் அளித்தார். இருவரும் வணங்கினர். அவர்கள் அப்பொருளைப் பலவாறு போற்றி சிரம்தாழ்த்த, கரம்கூப்பி, ரோமாஞ்சனம் பெற்றவராய் வணங்கினர். மகிழ்ச்சி அடைந்த ஈசனார் தன் வலப்புரத்தில் தோன்றியவன் மலரோன் என்றும், இடப்புறத்தில் தோன்றியவன் திருமால் என்றும் கூறி இருவரும் தம் மக்களாகிய முருகன், கணபதிக்கு ஒப்பானவர்கள் என்றுரைத்து வேண்டுவதைக் கேட்குமாறு பணித்தார். நான்முகன் அவருடைய அருளைப் பெற்ற தனக்கு வேறென்ன வேண்டும் என்று கூறி சிவனாரிடம் என்றும் குறையாத பக்தி அருள் செய்யுமாறு வேண்டினார். அவ்வாறே என்று அருள்பாலித்தார் பரமன். மாதவனிடம் பத்ம கற்பத்தில் நான்முகன் அவருக்குப் புத்திரனாக உந்திக் கமலத்தில் தோன்றுவான் என்று அருளினார். அன்று முதல் ஈசனார் லிங்க வடிவில் அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 


தொடரும்🙏🙏

 லிங்கபுராணம் 


பகுதி 6


பகவான் உந்தியில் தோன்றிய பரமன் மாதவன் உந்தித் தோன்றல் மலரோன் பிரம்மனாவான். மாதவனுக்கும், மலரோனுக்கும் ஏற்பட்டபோட்டி பற்றி ஏற்கனவே கண்டோம். அப்போது திருமால் பிரமனிடம், உலகைப் படைப்பவன் அவன் என்றால், ஈரேழு உலகங்களையும் அவன் உதிரத்தில் காட்டமுடியுமா என்று கேட்டு பிரமன் வாய்வழிச் சென்று அவன் வயிற்றில் சகல புவனங்களையும் கண்டு திருப்தி பெற்றவனாய் வெளிவந்தான். அப்போது பிரமன் திருமாலிடம் ஐயம் தீர்ந்ததா என்று கேட்டு, அவர் வயிற்றிலும் அனைத்து லோகங்களையும் காட்ட முடியுமா என்று கேட்க, திருமால் அதற்கு ஒப்பி அவர் வாய்வழியாகச் செல்ல அனுமதித்தார். நான்முகன் நாராயணன் வயிற்றை அடைந்து அங்கே சகல புவனங்களையும் கண்டான். பின்னர் திரும்ப எண்ணி மேல் நோக்கிப் புறப்பட, அஃதறிந்த மாதவன் அவர் வெளிப்படாதிருக்க வழியில்லாது செய்து விட்டார். வெளியில் செல்லும் வழியை அடைய முடியாமல் சுற்றிச் சுற்றிக் களைந்து விட்டார் பிரமன். அப்போது மாதவன் தொப்புள் குழியிலிருந்து தாமரை மலரின் தண்டைக் கண்டார். தன் உடலை அணுவாக்கிக் கொண்டு தண்டின் வழியே மேலே ஏறி வந்தார். மேலே வந்ததும் மொட்டின் மீது வெளிப்பட்டு மலர் மேல் அமர்ந்தார். அப்போது அங்கே சூலம் ஏந்தி சிவபெருமான் தோன்றினார். ஆனால் அவரை அடையாளம் தெரியாமல் பிரம்மன், நான் வெளிவர முடியாமல் வழிகளை மறைத்தது மட்டுமின்றி புதிய தோற்றத்துடன் நிற்கிறாயா நீ என்று திருமாலைக் கேட்பதாக எண்ணி ஈசனிடம் கேட்டார். அது கேட்டுத் திருமால் பிரம்மனிடம் அவன் பெருமையை அறிய தானே வழிகளை அடைத்ததாகவும், அவனைத் தன் மகனாகக் கமலத்தில் இருத்திக் கொள்ளவே அவ்வாறு செய்ததாகவும் மாலவன், மலரவனிடம் கூறினான். அப்பொழுது தன் எதிரில் இருக்கும் அப்புருஷன் யார்? என்று பிரமன் கேட்க, நாராயணன் இவருக்கு நிகர் இவரே! இவரைத் தவிர வேறு தலைவன் இல்லை. சகல ஜீவராசிகளுக்கும் இவரே உயிராக விளங்குகிறார் என்றார். மாயையால் சூழப்பட்ட பிரம்மனால் ஈசனை உணர முடியவில்லை. ஒவ்வொரு கற்பத்திலும், பிரம்மன் மாயையால் மயங்கி அலைய, ஈசன் அவர் மயக்கம் தீர அழற்சுடராகத் தோன்றி அருளுகிறார். இனியாவது ஈசனை உணர்ந்து அவரைத் தொழுது அருள் பெறுவாய் என்று மாதவன் பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். இருவரும் பக்தியோடு ஈசனைத் துதித்துப் போற்றினர். 


தொடரும்🙏🙏

 லிங்கபுராணம் 


பகுதி 7 


ருத்திரர் தோற்றம் பிரமன் தவம் மேற்கொண்டு தன் படைப்புத் தொழிலைத் தொடங்க, கொடிய நஞ்சுடை பாம்புகள் தோன்றின. அதனால் வேதனைப்பட்ட அயன் உயிரை விட, பிரமனின் ஆவி பதினோரு ருத்திரராகியது. அழுது கொண்டே தோன்றியதால் அவர்கள் ருத்திரர் எனப்பட்டனர். ஈசன் தோன்றி பிரமனை உயிர்ப்பித்தார். எழுந்த பிரமன் சிவபெருமானைத் துதிக்க ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் உருவில் பரமன் காணப்பட்டான். சத்தியோசாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரம், விஸ்வரூபம் என்ற வடிவங்களில் தோன்றியதுடன் காயத்திரியையும் தோற்றுவித்தார். பரமன் பிரமனிடம் துவாபர யுகத்தில் வியாசர் தோன்றி வேதங்களைப் பகுத்தளிப்பார். என்னிடம் தோன்றிய நால்வர் ஞானத்தை அனைவருக்கும் உணர்த்துவதோடு அவர்களும் சிறந்த ஞானம் பெற்று கைலையங்கிரியை அடைவர். இந்திரனும், திருமாலும் நீயும் லிங்கபூசை செய்து கிடைத்தற்கரிய பேறு பெறுவீர்களாக என்று கூறி மறைந்தார். இவ்வுடலைப் புனிதம் ஆக்குபவை, ஆற்றில் நீராடல், அக்கினிப் பிரவேசம், மந்திரங்களை உணர்ந்து நடத்தல் ஆகும். நீராடும் போது வருணனையும், சிவனையும் பக்தியுடன் தியானிக்க வேண்டும்.

தருப்பை, பலாச இலை, நறுமண மலரை நீரில் தோய்த்து சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். அதே போல கைகளில் நீர் ஏந்தி மந்திரம் ஜபித்து மும்முறை அர்க்கியம் விட வேண்டும். ஆயிரத்தெட்டு முறை காயத்திரி ஜபிக்க வேண்டும். பின்னர் முனிவர்களுக்கு, தேவர்களுக்கு பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்து சுத்தாசனத்தில் அமரவேண்டும். பட்டு, மான்தோல், கம்பளி ஆகியவற்றின்மீது அமரலாம். தர்ப்பையின் மீது அமர்தல் சிறப்புடையது. பவித்திரம் அணிந்து வலது முழங்கால் மீது இடதுகையின் மீது வலதுகையை வைத்து பிரம்ம யஜ்ஞம் செய்ய வேண்டும். பிரணவத்தை உச்சரித்து நெற்றி, கைகள், மார்பு, வயிறு தோள்களிலும் கழுத்துகளிலும் விபூதியைப் பக்தியுடன் தரித்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்து உடலைப் புனிதமாக்க வேண்டும். விநாயகரையும், முருகனையும் பிம்பத்தில் ஆவாகனம் செய்து உமாமகேசுவரனைத் தியானித்து வாசம் கொண்ட நீரால் மந்திர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து ஆடை ஆபரணங்களை அணிவித்து, தூய மலர் கொண்டு அர்ச்சித்து, தூப தீப நைவேத்தியங்களால் ஆராதித்துக் கற்பூரம் காட்டித் தரிசிக்க வேண்டும். பரப்பிரம்மம் இருபத்தாறாம் தத்துவம் அப்பிரம்மத்தை நாடும் உயிர் இருபத்தைந்தாம் தத்துவம். அவ்வியத்தம் இருபத்தி நான்காம் தத்துவம், மகத்தத்துவம், அலங்காரம், பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம், பஞ்சபூதங்கள் ஆகிய இருபத்திரண்டும் சேர்ந்து இருபத்து மூன்று தத்துவங்களாகும். இருபத்தாறாம் தத்துவமாய் நின்ற தனி முதலே கர்த்தா. அவரிடமிருந்து தோன்றிய மூவரும் இவ்வுலகை நடத்திச் செல்கின்றனர். 


தொடரும்🙏🙏

 லிங்கபுராணம் 


பகுதி 9 


சுதரிசனன் வரலாறு உத்தம குலத்தில் பிறந்த அந்தணன் சுதரிசனனும், கற்பிற் சிறந்த மனைவியும், அன்றாடம் தன் இல்லத்திற்கு வரும் அதிதிகள் மனம் கோணாமல் அவர்களுக்கு உணவிட்டு, மகிழ்வித்து அனுப்பி வந்தனர். ஒருநாள் ஓர் அதிதி வந்தார். அவரையும் எல்லா வகையிலும் உபசரித்து உணவூட்டினர். இடையில் சுதரிசனன் ஓர் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் மனைவியிடம் அதிதி மனம் கோணாமல் அவரை உபசரிக்குமாறு கூறிவிட்டுச் சென்றான். உணவருந்திய அதிதி அவளிடம் தனக்கு உடல் சுகமும் அளிக்கும்படி கேட்டான். அவள் பதைபதைத்து விட்டாள். கற்புக்குப் பங்கம் வரும், அல்லது அதிதிக்கு உபசாரக் குறைவு ஏற்படும் என்று எண்ணி செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுதரிசனன் வீடு திரும்பினான். அதிதிக்கு எல்லாச் சௌகரியமும் கிடைத்ததா? பூரண திருப்தியா? என்று கேட்க மனைவி பதைபதைத்திருக்க, அதிதி அந்தணர் மனைவி அறுசுவை உண்டியுடன், உடலுக்குச் சுகம் அளித்து திருப்தி கொடுத்தாள் என்று கூறினார். அப்போது அந்தணன் சினமோ, வெறுப்போ கொள்ளாமல், தன் மனைவியை அவர் அனுபவித்து விட்டதால் அவள் அதிதியின் சொத்து என்று கூறி, அவளையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். அப்போது அந்த அதிதி மறைந்து விட்டார். அங்கே அவர்களுக்குச் சிவபெருமான் காட்சி தந்து, தான் அவர் மனைவியைத் தீண்டவும் இல்லை. அவள் கற்புக்கரசி. புனிதமானவள். பிறவிப் பெரும் துயரினின்று நீங்கள் இருவரும் விடுபட்டு என்னிடம் வந்து சேர்வீராக என்று அருள்பாலித்தார். இவ்வாறு அதிதி பூஜையின் மேன்மையைப் பிரமன் தாருகாவனத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், அம்முனிவர்கள் இறைவன் திருவடிகளிலேயே சரண் புக, அவரை வழிபடின் அவர் அருளால் முனிவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று அறிவுறுத்தினார். அடுத்து, பிரமன் அவர்களுக்குத் துறவின் தன்மையை எடுத்துக் கூறியதுடன் துறவிகள் மட்டுமின்றி மற்றோரும் ஈசன் பேரருளுக்குப் பாத்திரமானவர்களே. தாம் செய்யும் கர்மாக்களை அந்தப் பெருமானுக்கே அர்ப்பணித்து, அனைத்திலும் ஈசனைக் காண்பவர் முக்தி அடைவர் என்றார். 


தொடரும்🙏🙏

 லிங்கபுராணம் 


பகுதி 10 


காலனை வென்ற சுவேதன் வரலாறு சுவேதன் என்ற மறையோன் தன் வாழ்நாள் மிகக்குறைவே என்று அறிந்து ஈசன்தாள் பற்றி, சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் வழிபட்டு வந்தான். எந்த நேரமும், அவன் செயல் நினைப்பு அனைத்தும் ஈசனைப் பற்றியதாகவே இருந்தது. அவன் ஆயுள் முடியும் நேரம் காலனே நேரில் வந்தான். காலனைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. மேலும் ஈசன் திருவடிகளைப் பற்றினார்க்கு யாராலும், எவ்விதமும் துன்பம் நேராது என்று காலனிடம் சொன்னான். உன்னால் எனக்கு என்ன பயம் என்றான். அதைக் கேட்ட காலன் கடுஞ்சினம் கொண்டு பாசக்கயிற்றை சுவேதன் மீது வீசினான். கயிறு இறுகத் தொடங்கியது. ஆனால் சுவேதன் என்னைக் காப்பது நீயே அல்லவா? என்று எண்ணியவாறு தான் பூஜித்து வந்த லிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். அடுத்த கணம் லிங்கத்திலிருந்து தோன்றிய பரமன் கோபத்துடன் காலனை உற்று நோக்க அவன் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பரமன் சுவேதனுக்கு அழியா வாழ்வைக் கொடுத்து தம் கணங்களில் ஒருவனாக இருக்க அருள் செய்தார். உயிரற்றுக் கிடந்த யமுனை எழுப்பி அவனிருப்பிடம் அனுப்பி வைத்தார். சுவேதன் வரலாற்றைக் கூறிய பிரமன் முனிவர்களிடம், ஈசனைத் தியானித்து அவரைப் பக்தியுடன் ஆராதித்து வாருங்கள். சிவலிங்கம் ஒன்றை அமைத்து அதில் ஈசனைத் தியானித்து மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள். உங்கள் அன்புக்கு ஈசன் கட்டுண்டு அருள்புரிவான் என்றார். அவ்வாறே முனிவர்கள் பக்தியுடன் பூசிக்க திருப்தி அடைந்த ஈசன் அவர்களுக்கு அருள்புரிய முன் தோன்றிய அதே திகம்பர சந்நியாசி கோலத்தில் தாருகாவனம் வந்து சேர்ந்தார். இம்முறை முனிவர்கள் ஈசனை அன்புடன் வரவேற்றனர். வணங்கினர். முனி பத்தினிகளும் அவர்களுடன் ஈசனை வழிபட்டனர். மேலும் அவர்கள் ஈசனை நோக்கி, நாங்கள் செய்த அபசாரங்களை மன்னித்து, அடியார்களாகிய எங்களிடம் அளவற்ற அன்பு பூண்டு, பக்தியுடன் நாங்கள் அளிக்கும் உபசாரங்களை மனமுவந்து ஏற்று அருளவேண்டும் என்று வேண்டினர். அப்போது ஈசனின் திகம்பர வடிவம் மறைந்து, கைகளில் மானும், மழுவும் ஏந்தி உமாதேவியுடன் காட்சி அளித்தார். முனிவர்கள் பரமானந்தக் கடலில் மூழ்கினர். நெஞ்சம் உருக ஈசனைப் பக்தியுடன் துதித்து வணங்கினர். சுவேதன் வரலாறு, மார்க்கண்டேயன் வரலாறு போன்றது. மேலும், விரிஞ்சன் முதலான தேவர்கள் பாசுபத விரதத்தை ஆற்றியே அழியா உயர் பதத்தை அடைந்தனர். ஆகவே நீங்களும் அவ்விரதத்தைப் பக்தியுடன் கடைப்பிடியுங்கள் என்று கூறி மறைந்தார் ஈசன். முனிவர்களும் பக்தியுடன் பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து வல்வினைகள் தொலையப் பெற்றனர். 


தொடரும்🙏🙏

 லிங்கபுராணம் 


பகுதி 12 


மாயனை வென்ற ததீசி சனத்குமாரர் நந்தியை வணங்கி, ஐயனே, ததீசி முனிவர் மாயனை வென்ற, தாங்கள் கூற்றினைக் கடந்த வரலாற்றினை அன்பு கூர்ந்து சொல்ல வேண்டும் என்று வேண்டினார். ஒரு சமயம் பிரமன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வச்சிராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும், ததீசியும், ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற, ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர். எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ஜிராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க, அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி, அரசரின் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட, அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார். வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற, மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ஜிராயுதத்தால் தாக்க, வஜ்ஜிராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற, அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட, ஈசனார் திருவருள் பெற்று முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர், பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க, என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால், அவர்மீது சக்கராயுதத்தை வீச, முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர், இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா? என்று கேட்டார். இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப, ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரமன், சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற, மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார். அடுத்து, நந்தி காலனைக் கடந்த விவரத்தைக் கூறலானார். 


தொடரும்🙏

 லிங்கபுராணம் 


பகுதி 14 


யுகங்களும், யுக தருமங்களும் கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு. கிருத யுகத்தில் மக்கள் ஈசன் திருவடியை எப்போதும் துதி செய்த வண்ணம் இருப்பர். தரும தேவதைக்கு நான்கு கால்கள் இருக்கும். அனைவருக்கும் வாழ்நாள் ஒரே அளவில் இருக்கும். வருண பேதங்கள் இன்றி, மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பர். ஆசிரம வேறுபாடுகள் இல்லை. ஞானம் தெளிந்தவர்களாய் பரமன் அருளுக்குப் பாத்திரங்களாக இருப்பர். எங்கும் எல்லாம் இன்பமயம். மக்கள் சாத்துவிக குணம் உடையவர்களாய் பொறாமை, பொச்சரவு முதலியன இன்றி எல்லா உலகுக்கும் செல்லலாம். திரேதா யுகத்தில் சிறந்த யாகங்கள் புரிவர். தரும தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருக்கும். மழை பொழியும். மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து காய் கனிகள் குறைவின்றிக் கிடைக்கும். மக்கள் சினமுற்று சண்டையிடுவர். மக்கள் பொன், பொருள், ஆடைகள் அறுசுவை ஆகியவற்றில் விருப்பம் கொண்டிருப்பர். இளம் கன்னியர்களுடன் கூடி, இன்பமாக வசதியுள்ள வாழ்வு வாழ்வர். மன்னர்கள் நாட்டைப் பெருக்க போர் புரிவர். எளியோரை, வலியோர் வாட்டுவர். சில அரசர்கள் தரும நெறியில் நின்று உயர் பதம் அடைவர். துவாபர யுகத்தில் மக்களுக்கு கோபம், போட்டி மனப்பான்மை, சண்டை சச்சரவு இருக்கும். இந்த யுகத்தில் தரும தேவதை இரண்டு கால்களை இழந்து இரண்டு கால்களிலேயே நிற்கும். இந்த யுகத்தில் பாபம், புண்ணியம் வேறுபாடு புரியாமல் குழம்பிய மனத்துடன் மக்கள் தவிப்பர். சரியான குழம்பி இருக்கும். வியாசர் வேதங்களைப் பாகுபடுத்தி நான்காக வகுப்பார். புராணங்களும் இயற்றுவார். கலியுகத்தில் மெய்ஞானம் விளங்கத் தானம் புரிவர். தரும தேவதை இந்த யுகத்தில் மூன்று கால்களையும் இழந்து ஒற்றைக் காலிலே இருக்கும். அதர்மம் தலைதூக்கி பொய்ம்மை, கொடுமை, இழப்பு, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியவை தழைத்திருக்கும். அந்தணர், அரசர், வணிகர் பலவகை இன்னல்களுக்கு ஆளாவர். ஒழுக்கம் தவறி நடப்பர். மன்னர்கள் (அ) ஆட்சியாளர்கள் பொன்னும், பொருளும் சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பர். அந்தணர்கள் வேதம், வேள்வி பின்பற்றாமல் போக வாழ்வு வாழ்வர். வணிகர் பேராசை கொண்டு அதர்ம வழிகளில் செல்வர். வேடதாரிகள் மிகுதியாக இருப்பர். பெண்களிடம் ஒழுக்கக் குறைவு காணப்படும். கிருதயுகத்தில் ஓராண்டு தவம் செய்து பலன் பெறுவர். திரேதா யுகத்தில் மூன்றே மாதங்களில் அத்தகைய பலனைப் பெறலாம். துவாபர யுகத்தில் ஒரே மாதத்தில் பெறலாம். கலியுகத்தில் இறைவனிடம் பக்தி செலுத்தி, தூய உள்ளத்துடன் பூசனை புரிந்து ஒரே நாளில் அருளும், மேற்படி பலனும் பெறுவர். ஈசன் திருவடிகளில் சரண் புகுந்து அவரே அனைத்தும் எனக் கொள்பவர் வீடுபேறு பெறுவர். 


தொடரும்🙏

 லிங்கபுராணம் 


பகுதி 13 


சிலாதரும் நந்தியும் சிலாதர் என்ற முனிவர் இந்திரனைக் குறித்துத் தவம் செய்ய, இந்திரன் தோன்ற, இறவாப் புதல்வன் ஒருவனை வேண்டினான். அதற்கு இந்திரன், பிரமனே பரார்த்தம் இரண்டும் கடந்த பின் இறப்பை அடைவதால் அத்தகைய புதல்வனைக் கோருவது சாத்தியமாகாது என்றான். பின்னர் சிலாதர் சிவனை வேண்டிப் பல்லாண்டுகள் தவம் செய்ய அவர் உடம்பிலுள்ள எலும்புகள் தவிர மற்றவை எல்லாம் அரிக்கப்பட்டன. அந்நிலையில் ஈசன் அவர் முன் தோன்றி அவர் உடலை முன்போல் ஆக்கி அவர் வேண்டுதலுக்கு இணங்க, தானே அவருடைய மகனாக நந்தி என்ற பெயரில் தோன்றுவதாகக் கூறி மறைந்தார். அடுத்து சிலாதன் ஒரு யாகம் செய்ய, அதிலிருந்து நந்தி தோன்றினார். அவருக்கு மூன்று கண்கள், நான்கு கரங்கள் இருந்தன. ஒரு கையில் சூலம், மற்றொன்றில் கதையும் இருந்தன. வைரக் கவசம் இருந்தது. அப்போது கந்தவர்கள் பாடினர். தேவலோக நடனமாதர்கள் நடனமாடினர். நந்தியை சிலாதர் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல, அவர் சாதாரண மானிடக் குழந்தையாக மாறிவிட்டார். ஏழாண்டு வயதிலேயே அவர் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். மித்திரர், வருணர் எனும் இரு தேவர்கள் சிலாதரைக் காண வந்தனர். நந்தியின் உடலில் எல்லா சுபலக்ஷணங்களும் காணப்படுகின்றன. எனினும் எட்டு வயதுக்குள்ளாகவே இறந்து விடுவான் என்றனர். இதுகேட்ட சிலாதர் வருந்தி அழ, அதைக் காணச் சகியாத நந்தி சிவபெருமானைப் பிரார்த்திக்கலானார். அப்போது சிவபெருமான் நந்தியின் முன் தோன்றி நந்திக்கு மரணமே இல்லை. எப்போதும் சிவனார் அருகிலேயே அவர் இருப்பார் என்று கூறி, தன் கழுத்திலிருந்து ஒரு கழுத்தணியை எடுத்து நந்தியின் கழுத்தில் அணிவித்தார். உடனே நந்தி ஒரு தெய்வ வடிவம் பெற்றார். பத்துக் கரங்கள், மூன்று கண்களுடன் தோன்றிய அவரைப் பார்வதி தன் மகனாக ஏற்றாள். அன்று முதல் அவர் கணநாதராக சிவத்தொண்டு செய்து வந்தார். 


தொடரும்


: லிங்கபுராணம் 


பகுதி 15 


ஈசனுக்குப் பற்பல உருவங்கள் ஒரு நாமம் ஓரூருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ

-மாணிக்கவாசகர் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருட்சோதி. பிரணவ வடிவன், ஞானச்சொரூபன் ஆகிய ஈசனுக்கு அவரவர் செய்யும் கருமம், அவரவர் இச்சைக்கேற்ப விளங்கிடும் பற்பல உருவங்களைக் காண்போம். 1. ஈசனின் தலை சுவர்க்கம்; ஆகாயம் தொப்புள்; சூரியன் சந்திரன், அக்கினி-முக்கண்கள்; திக்குகள் செவி; பாதாளம் திருவடி, விண்மீன்கள், முத்துக்களாலான ஒரு மணி மாலை, விண்ணவர்கள் புயங்கள், அலைகடல்கள் ஆடை, ஞானம் ஒளி; மேகங்கள் ஜடாபாரங்கள்; வாயு-மூச்சு; பிரகிருதியே தேவி என்று இயற்கை வடிவில் ஈசனைக் காண்பர். அவர் முகத்திலிருந்து அந்தணர், தோள்களிலிருந்து இந்திரன், உபேந்திரன்; தொடையிலிருந்து வணிகர்கள், மற்றவர் பாதங்களிலிருந்து தோன்றினர். விருப்புடன் சிவபெருமான் சில உருவங்களைத் தாங்கினார். 2. தியானத்தின் மூலம் உயர்ந்தோர் தம் சிந்தையில் கண்டு, ஒளிமயமான அப்பெருமானை வழிபட்டு குழகனே அருளாம் என்று வந்தனை செய்வர். அந்த லிங்கம் வாயிகலிங்கம் ஆகும். 3. பரமன் உமாதேவியோடும், முருகனுடனும், பிறை அணிந்தவனாக காணப்படுவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். 4. திரிசூலம் தாங்கி நான்கு கரங்கள், மூன்று கண்கள், ஏக பாதத்துடன் விளங்குபவர் ஏகபாத மூர்த்தி எனப்படுபவர். 5. இரு முகம், ஏழு புயம், மூன்று பாதங்கள் கொண்ட வடிவம் யஞ்ஞ தேவன். 6. உமாமகேசுவரராக ரிஷபாமூர்த்தியாகத் தோன்றுவது ஓர் உருவம். 7. நந்தியுடன், சிவகணங்கள் பரமனைப் பணிந்து வணங்கிடும் உருவம் கண் கொள்ளாக் காட்சி ஆகும். 8. ஒரு கையில் உடுக்கை, மற்றொன்றில் தீ, தூக்கிய பாதம், ஒரு கை தொங்க, மற்றொன்று அபயகரமாக நடனமாடும் உருவம் நடராஜர் ஆகும். 9-12 . மேலும் ஈசன் கொண்ட பஞ்சத்தோற்றங்கள் வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம் ஆகியவை. 13. இடுப்பில் சிங்கத்தின் தோல், புயங்களில் பொன்னகைகள், மார்பில் சங்குமணி ஆரம், ஜடையிலே பிறைமதி, கையில் குருதியுடன் கூடிய கபாலம் கொண்ட உரு ஒன்று. 14. அபயக்கரம், வரதஹஸ்தம், சூலமேந்திய கரம், தாமரைக் கொண்ட கரம் என்று நான்கு கைகளுடன் உள்ள உருவம். 15. நெற்றிக்கண் தீ கக்க, மண்டையோட்டு மாலை அணிந்து, அயன், அரி, அரவம் கையில் பற்றி சுடுகாட்டில் வெண்ணீறு பூசி ஆடும் நடன உருவம். 16. ஜலந்தரனைக் கால் கட்டை விரலால் பூமியில் வட்டம் எழுதி, அச்சக்கரத்தால் அவன் உயிர் வாங்கி ஜலந்தாரசுர வதமூர்த்தி வடிவம். 17. கூரிய சூலம் தாங்கி, தேவியை அணைத்து லிங்கத்திலிருந்து தோன்றி காலனை அழித்த கால சம்ஹாரமூர்த்தி உருவம். 18. தேவர்கள் அமைத்த தேரிலே இருந்து முப்புரங்களைச் சிரிப்பினால் எரித்துச் சாம்பலாக்கிய திரிபுர தகனமூர்த்தி உருவம். 19. வேலவனை இடது தொடையில் அமர்த்தி அருள் புரியும் குகானுக்கிரக மூர்த்தி. 20. அவ்வாறே விநாயகரை சுமந்திருக்க காணப்படும் விநாயக அனுக்கிரக மூர்த்தி. 21. சப்த மாதர்களுக்கு அனுக்கிரகம் செய்த சப்தகன்னியர் அனுக்கிரக மூர்த்தி. 22. காளியாகிய துர்க்கைக்கு அருள்புரியும் துர்க்கானுக்கிரக மூர்த்தி மற்றும் ஜோதிலிங்க மூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி, பைரவ மூர்த்தி போன்றவைகளே அன்றி ஈசன் விளையாட்டாக கொண்ட கோலங்கள் எதையும் வடிவுற அமைத்து வழிபடுவோர் எம்பெருமான் பேரருளுக்குப் பாத்திரராகி வினைகள் நீங்கப்பெற்று என்றென்றும் அவன் திருவடி நிழலிலே வாழ்ந்திருக்கும் பேறு பெறுவர். 


தொடரும்🙏

No comments: