☀️ உண்மை — ஆத்மாவின் ஒளி ☀️
சே. அனந்தகிருஷ்ணன் — சனாதன சிந்தனைகள் : பகுதி 3
உண்மை —
அது இல்லாத உள்ளம்,
தன் நிழலைத் தானே சுடும்.
பொய் சொன்ன மனம்,
தன் நெஞ்சைத் தானே தகனம் செய்கிறது.
வள்ளுவர் சொன்னார் —
“தன் நெஞ்சறிந்து பொய்யற்க.”
அது வாழ்வின் முதல் வேதம்.
களங்கம் தான் குருக்ஷேத்திரம்,
சத்தியம் தேடும் யுத்தம்.
கிருஷ்ணன் கூட சில சமயம்
பொய்யைச் சொல்லி சத்தியத்தை காப்பாற்றினார்.
அது தத்துவமா?
அல்லது சூக்ஷ்ம மாயையா?
நிராயுதபாணி கர்ணன் விழுந்தான்,
கிருபாச்சாரியர் வஞ்சிக்கப்பட்டார்,
துரியோதனன் தொடையில் அடித்தான் —
அது தர்மமா?
அல்லது தண்டனையா?
அபிமன்யு வதம்,
அரக்க மாளிகை,
சூதாட்டம், மௌனமாய் இருந்த குந்தி —
ஒவ்வொன்றிலும் பாவமும், புன்ணியமும்
இணைந்து நின்றன.
ஆண்டவன் மாயையின் இயக்குனர்,
நாடகம் எழுதுவான்,
அதிலே மனிதனை பாத்திரமாக்குவான்.
சத்தியம் தெரிந்தும் மறைக்கும்,
அது அவனின் சூக்ஷ்ம லீலை.
விளக்குப் பூச்சி போல் ஒளி காட்டி,
தீயவற்றை அழகாக ஆக்கும்.
மனிதன் ஓடிச் சேரும்,
அதுதான் லௌகீக மாயை.
ஆனால்,
இதையெல்லாம் மீறி
மனக் கட்டுப்பாடு காக்க முடிந்தால் —
அதே ஆத்ம ஞானம்.
வெல்லம் கொட்டி
எறும்பை ஈயைத் தடுக்க முடியுமா?
அதுபோல மாயை நடுவே
பொய் இல்லாமல் வாழ்வது கடினம்.
ஆனால் சாத்தியம் —
அதுதான் ஆத்மாவின் ஒளி.