Friday, February 3, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தெட்டு -துளசிதாஸ் துளசிதாஸ் 
          ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தெட்டு -  

        ஜனகரின் அழைப்பைக் கேட்டு
          முனிவர்  சொன்னார் ---" வில்போட்டி நடக்கும்        இடத்திற்குச் சென்று ஸ்வயம் வரத்தைப்  பார்க்கவேண்டும்".
   கடவுள் யாருக்கு பெருமைதருகிறார்
   என்பதைப் பார்க்கவேண்டும்.
லக்ஷ்மணன் சொன்னார்---
"நாதா! உங்களின்  கிருபைக்கு
பாத்திரமானவர்கள் வில் உடைத்து வெற்றி பெறும்
பெருமைக்குப் பாத்திரமாவார்கள்".
இவ்வாறு லக்ஷ்மணர் சொல்லக்கேட்டு
 முனிவர்கள் மகிழ்ந்தனர்.
எல்லோரும் மகிழ்ந்து ஆசி  வழங்கினர்.
முனிவர்களுடன்  கிருபை நிறைந்த ராமச்சந்திரரும்
வில் வேள்வி  சாலைக்குச் சென்றனர்.
   இரண்டு  சகோதரர்களும்  அந்த வேள்விச்சாலைக்கு
  வந்தது அறிந்து நகத்தில் உள்ளவர்கள்  அனைவரும்
  பாலகர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் ,
  ஆண்கள் ,பெண்கள்   என  அனைவரும் தங்கள் வீட்டை யும்
  வேலைகளையும் விட்டு  வந்து விட்டனர்.

   ஜனகர் அதிக கூட்டம் வந்தது தெரிந்ததும்  ,
 நம்பிக்கையுள்ள பணியாட்களை அழைத்து  அனைவருக்கும்
 தகுந்த இடம் அளித்து , அமரவைக்க உத்தரவிட்டார்.

  அந்த பணியாட்கள் வந்த கூட்டத்தை  ,
உத்தமர்கள்,நடுத்தரமக்கள்,தாழ்ந்தவர்கள், சிறியவர்கள்  எனப் பிரித்து
அவர்களுக்கேற்ற இடத்தில்
மென்மையாக ,பணிவாகப் பேசி
அமரவைத்தனர்.
   அந்த நேரத்தில் அழகின் உருவமாக கருநீல ராமரும் ,
வெள்ளையாக இருக்கும் லக்ஷ்மணரும் அங்கு வந்தனர்.

அவர்கள் இருவருமே குணங்களின் கடலாகவும் , திறமைசாலிகளாகவும் ஒப்பற்ற வீரர்களாகவும் இருந்தனர்.
 அவர்கள்  இருவரும் மற்ற அரசர்களுக்கு மத்தியில்
நட்சத்திரங்களுக்கு நடுவில் உள்ள  முழு நிலவுகள் போன்று
காட்சி அளித்தனர்.
ஒவ்வொருவரும் தங்கள் மனோபாவத்திற்கு ஏற்ப ராமரைப்
புகழ்ந்தனர். போரில் திறமை உள்ளவர்கள் ,
வீர ரசமே உடலெடுத்து வந்துள்ளதாக நினைத்தனர்.
கொடிய அரசர்கள் பயங்கரமாக நினைத்து பயந்தனர்.
வஞ்சிப்பதற்காக  அரச வேடத்தில் வந்த அரக்கர்கள்,
நேரடியாக எமனே வந்ததாக நினைத்தனர்.
நகரமக்கள் இருவரையும்  மனிதர்களின் ஆபரணமாகவும்
மகிழ்ச்சியும் நன்மையையும் தரக்கூடியவர்கள்  என்று எண்ணினர்.
பெண்களும் அகமகிழ்ந்து தன்தன் விருப்பம்
 ருசிக்கு ஏற்றவாறு  பார்த்துக்கொண்டிருந்தனர்.
சிங்காரரசமே உருவெடுத்து அழகாக வந்துள்ளது என்று  நினைத்தனர்.

     படித்தவித்வான்களுக்கு   மிகப்பெரிய உருவமாக,
அதிக முகங்கள், கைகள், கால்கள் ,கண்கள் தலைகள் கொண்ட பரபிரம்மமாகத் தோற்றமளித்தார்.
ஜனகரின் குடும்பத்தவர்கள் தங்களுடைய சம்பந்திபோன்று
அன்பானவராகப் பார்த்தனர்.
    ஜனகரும் , ராணிகளும் அவரைத் தன் மகன்போல  பார்த்தனர். அவர்களின் அன்பு வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
   யோகிகளுக்கு அவர் சாந்தமான, சுத்த ,ஒளிமயமான பரம
 தத்துவமாகக்  காட்சி அளித்தார்.
 ஹரியின் பக்தர்கள் அவரை இஷ்ட தெய்வமாகப் பார்த்தனர்.  சீதை ராமரை  அன்பின் சுகத்தின் இணைப்பாகக் கண்டாள். அந்த எண்ணங்களை வர்ணிக்க முடியாது.
அந்த சீதையின் அன்பை உணரத்தான் முடியும்.
ஒரு கவிஞனால் வர்ணிக்க முடியாது.
இவ்வாறாக கோசல மன்னன் ஸ்ரீ ராமச்சந்திரன் அந்த வேள்விச் சாலையில்  மிக ரம்யமாகக் காட்சி அளித்தார்.

   இருவருமே தன் நன்னடத்தையால் ,
இயற்கையான அழகால்
அனைவரின் மனதையும் கவர்ந்தனர்.
 கோடிக்கணக்கான
காமதேவர்களும் அவருடன் உவமையாகச் சொல்லமுடியாது.
அவர்களுடைய அழகு முகம்
  முழு நிலவின் அழகைக் குறைத்துவிடும்.
அவர்களது  தாமரைக்  கண்கள்
அனைவருக்கும்  மிகவும் பிடிக்கும்.

   அகிலத்தினரின்   மனத்தைக் கவரும்  அழகு கமதேவனையே  கவரும் அழகு.
அழகான கன்னங்கள் , காதுகளில் அசையும் குண்டலங்கள் ,
அழகான உதடுகள், தாடைகள் ,மென்மையான குரல்
அகிலத்தினரைக் கவரும் அழகு.
ராமரின் அழகு. அவர் தம்பி லக்ஷ்மணன் அழகு.
ஈடு இணையற்ற அழகு.

      அவர்களைப் பார்த்து அனைவரும்  மகிழ்ந்தனர்.
கண் இமைக்காமல் பார்த்தனர்.
 கண்பாப்பா அசையவில்லை.
ஜனகர்  இரு சகோதரர்களையும்  பார்த்து மகிழ்ந்தார்,
பிறகு முனிவரை வணங்கி , வேள்வி சாலையை காண்பித்தார்.
அவர்களுடன் சென்ற  ராமரையும் ,
லக்ஷ்மணனையும்  ஒவ்வொருவரும்
 ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அனைவருக்கும் ராமர் அவர்களையே பார்ப்பது போல்  இருந்தது.
ஆனால் இதன் ரஹசியத்தை  அதாவது ராமர் மூலப் பரம்பொருள்  என்பதை அறியவில்லை.
முனிவர் சொன்னார் --"போட்டி நடக்கும் அரங்கம் மிகவும்
அழகாக இருக்கிறது."
 முனிவரே  புகழ்ந்ததால்  அரசர்  மிகவும்
மகிழ்ந்தார்.
  ஒவ்வொரு மேடையும்  ஒன்றைவிட
  ஒன்று அழகாக இருந்தது.
அதில் எல்லாவற்றையும் விட மிக அழகான.பெரிய   மேடையில்   அரசர் முனிவரையும் இரண்டு சகோதரர்களையும்  உட்கார வைத்தார்.
  ராமச்சந்திர பிரபுவைப்  பார்த்ததுமே ,
 மற்ற அரசர்கள்  நிராசையடைந்து
 உற்சாகத்தையும் இழந்து விட்டனர்.
அவர்களின் நிலை முழுநிலவுக்கு முன் நட்சத்திரங்கள்
பிரகாசத்தை இழந்ததுபோல் ஆயிற்று.
அனைவருக்கும் சந்தேகமின்றி  ராமர் தான்  வில்லை உடைப்பார்  என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

சிலருடைய மனதில் ராமரின் அழகைக்கண்டு ,
சிவதனுஷை உடைக்காமலேயே சீதை ராமருக்கு
வரமாலை போட்டுவிடுவாள் என்ற எண்ணம்  ஏற்பட்டது.


அனைவரும் எப்படியும்  நமக்குத் தோல்விதான். ஆகையால்
திரும்பிச் சென்றுவிடுவோம் என்று சொல்லத் தொடங்கினர்.

  ஆணவமுள்ள , அறியாமையால் குருடனான அரசர்கள், இதைக்கேட்டு சிரித்தனர்.
வில்லை ராமர் உடைத்தாலும்
திருமணம் நடப்பது கடினம்.
 நாங்கள் அவ்வளவு எளிதாக சீதையை விடமாட்டோம்  என்றனர்.
 அந்த நிலையில் வில்லை உடைக்காமல் எப்படி திருமணம் நடக்கும்? என்றனர்
சீதைக்காக நாங்கள் எமனுடனும் போரிட்டு வெல்வோம் என்றனர். இந்த கர்வமான பேச்சைக்கேட்டு ,
தர்மாத்மாக்களும், ஹரி பக்தர்களும்  புன்சிரிப்பு சிரித்தனர்.

    அரசர்களின் கர்வத்தைப் போக்கி  ராமர் சீதையை மணப்பார் என்றனர்.
வீரமுள்ள தசரத குமாரர்களை யாரால் வெல்ல  முடியும்  என்றனர்.
வீணாக உளறாதீர்கள்.
மனதில் லட்டு சாப்பிடாதீர்கள். அது பசிபோக்காது.  எங்களுடைய புனிதமான ஆலோசனையைக் கேட்டு  சீதையை தங்கள் மனதில் உலக மாதாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
அவரை வேறு மாதிரி நினைக்காதீர்கள்.
ஸ்ரீ ராமரை உலகின் தந்தையாக , பரமேஸ்வரனாக ஏற்று
அவரைப் பாருங்கள்.
இந்த இரண்டு குணமுள்ள சகோதரர்கள்
 சிவனின் இதயத்தில் உள்ளனர்.
சிவனே வழிபடும் பரமேஸ்வரர்
உங்களுக்குமுன் வந்துள்ளார்.
அருகில் உள்ள அமுதக் கடலை விடுத்து
கானல் நீரைக்கண்டு ஓடி ஏன் உயிர் துறக்கவேண்டும் ?
  இறைவனின் காட்சியைக்கண்டு தர்சிக்காமல் ,
கானல் நீரைப் பார்த்து ஓடி ஏன் உயிரைவிடுகிறீர்கள் .
உங்களுக்கு  எது நன்றாக உள்ளதோ , அதைச் செய்யுங்கள்.
நாங்கள் ராம சந்திரரைப் பார்த்து அந்த புண்ணியத்தால் எங்கள் பிறவிப்பயனை அடைகிறோம்.அடைந்துவிட்டோம்.
இப்படி நல்ல அரசர்கள் அன்பில் மூழ்கி ராமரின் ஒப்பிடமுடியா  அழகை தரிசிக்கத் தொடங்கினர்.
  மனிதர்கள் மட்டுமா ? தேவர்களும் விமானத்தில் ஏறி ,
தர்ஷித்துக்கொண்டு , அழகான பாடல்கள் பாடி பூ மழை
பொழிந்துகொண்டிருந்தனர்.

  நல்ல நேரம் வந்ததை அறிந்து ,
ஜனகர் சீதையை அழைத்தார்.
சீதையை அழைத்துவர கெட்டிக்கார
அழகான  தோழிகள் சென்றனர்.

     .

 


   

Post a Comment