Saturday, March 18, 2023

துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-பாகம்-1.

 துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-

வால்மீகி எழுதிய இராமயணம் பாரதத்தின் அனைத்து மொழிகளிலும்
 பேச்சு வழக்கில் உள்ள மொழிகளிலும்
 உலகத்தில் உள்ள மொழிகளிலும்
மொழி பெயர்க்கப்பட்டு
மக்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வால்மீகி இராமாயணத்தை விட
துளசி இராமாயணம் வட பாரதத்தில் 
 ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
இராமநவமியை முன்னிட்டு துளசி இராமாயணத்தின்
 சுந்தரகாண்டத்தின் தமிழ் பொருளுரை.


ஸ்ரீ கணேசா போற்றி.
ஓம் முருகா போற்றி 
ஓம்  சிவனே போற்றி.
ஓம் துர்கையே போற்றி.
ஓம் ராமரே போற்றி.
ஓம் சீதையே போற்றி.
ஓம் ஹனுமனே போற்றி

-------------------------------------------------------

சுந்தர காண்டம் 

பகவான் இராமர்  அமைதியானவர் .
அழிவில்லாதவர் .
நிலையானவர் .
முக்தியளிப்பவர்.
 சாந்தி அளிப்பவர் .
ஆசிகள் வழங்குபவர்.
படைக்கும் கடவுள்
பிரம்மனால் வணங்கப்பட்டவர்.
அழிக்கும்  கடவுள்
சிவனால் வணங்கப்பட்டவர்.
பூமியைத் தாங்கும்
ஆதிசேஷனால் வணங்கப்பட்டவர் .
வேதங்களால் அறி்யப்பட்டவர்.
உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்.
அனைத்து இறைவனைவிட உயர்ந்தவர்.
மாயையால் மனிதனாக காட்சியளிக்கும் ஹரி.
அனைத்து பாவங்களையும் போக்குபவர்.
கருணையின் சுரங்கம்.
அரசர்களில்  தலைசிறந்தவர்.
ரகுகுலத்திலகம்.
ராமர் என்று அனைவராலும்
அழைக்கப்படுகின்ற
வையக இறைவனை வணங்குகிறேன்.
என் மனதில்
என் அந்தராத்மாவில்
 எவ்வித விருப்பமும் கிடையாது.
எனக்கு முழுமையான பக்தியை அளியுங்கள்.
என் மனதில் காமம் போன்ற
 குற்றமில்லாமல் இருக்க அனுக்ரஹம் செய்யுங்கள்.

ராமரே ! ஒப்பிடமுடியாத பலம் பெற்றவரே! 
தங்கமலை போன்று
மின்னும் ஒளிரும் உடல் பெற்றவரே ! 
அரக்கர்கள் என்ற வனத்திற்கு
காட்டுத்தீ  போன்றவரே!
ஞானிகளின் தலைவரே!
அனைத்து நற்குணங்களையும் பெற்றவரே ! 
உங்களை வணங்குகிறேன்.

வானரங்களின் தலைவரான ராமரின்
ப்ரிய பக்தனாக விளங்கும்
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்

ஜாமவந்தனின் அழகான அன்பான,
பணிவான வந்தனங்கள்,வேண்டுகோள்கள்
ஆஞ்சநேயருக்கு மிகவும்  பிடித்திருந்தன.
ஹனுமான் அனைவருக்கும் தைரியம் அளித்து சொன்னார்----
நான் சீதையை கண்டுபிடித்து திரும்பும் வரை
மனத்துயரத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயமாக சீதையைக் கண்டுபிடித்து திரும்பிவருவேன்.
எனது மனம் மிகவும் மகிழ்கிறது.
என்று கூறிக்கொண்டே
ஸ்ரீ இராமரை மனதில் அமர்த்தி 
அனைவரையும் வணங்கி
சீதையைத் தேடி புறப்பட்டார்.

இராமர் கடற்கரையை அடைந்தார்.
அங்கு ஒரு அழகான மலை இருந்தது.
அதன் மேல் மகிழ்ச்சியாக ஏறினார்.
இராமரை மனதில் நினைத்துக் கொண்டே
துள்ளிக் குதித்தார்.
அவர் குதித்த வேகத்தில் மலையானது
 பாதாளத்திற்குள் அமுங்கிவிட்டது.
இராமரின் குறிதப்பாத அம்பு போல் 
ஹனுமான் முன்னே சென்றார்.

சமுத்திரமானது ஸ்ரீஹனுமானை
இராமரின் தூதர் என்று அறிந்து 
மைனாக் மலையிடம்
ஸ்ரீஹனுமானுக்கு  ஓய்வெடுக்க இடம் கொடு என்று கூறியது.
=============================================.

    ஸ்ரீ ஹனுமான் அந்த மலையைத் தொட்டு வணங்கிக் கூறினார் --
சகோதரா! ஸ்ரீ ராமரின் பணியினை முடிக்காமல் நான் எப்படி ஓய்வெடுப்பது ?

          தேவர்கள் வாயுகுமாரன்  அன்னை சீதையைத் தேடி செல்வதை அறிந்ததும்
  அவரின் வலிமையையும் அறிவுத்திறனையும் சோதிப்பதற்காக
  பாம்புகளின் அன்னை ஸுர்ஸாவை அனுப்பினர்.
ஸுர்ஸா  ஆஞ்சனேயரிடம்  வந்து
உன்னை எனக்கு உணவுப் பண்டமாக அளித்துள்ளனர்.
இதைக்  கேட்டதும் ஸ்ரீ ஹனுமான் கூறினார்---
நான் ஸ்ரீ ராமரின் பணிக்காக அன்னை சீதையைத் தேடிச் செல்கிறேன்.
அப்பணியை  முடித்து சீதையைக் கண்டுபிடித்த செய்தியை ராமரிடம் கூறியதும்
உனக்கு உணவாக என்னை அர்பணிக்கிறேன் .  அரவங்களின் அன்னையே  என்னை செல்ல அனுமதி அளியுங்கள்.நான் சொல்வது சத்தியம்.
   ஆனால் அரவம் ஆஞ்சனேயரை செல்ல அனுமதிக்கவில்லை. வேறு வழி இன்றி தன்னை உணவாக்கிக் கொள் என்று வாயுபுத்திரன் கூறினார். 
      அரவங்களின் அன்னை  ராம பக்த அனுமானை சோதிக்க  தனது வாயை நான்கு மைல் அளவிற்கு 
 அஞ்சனை மைந்தனை  விழுங்குவதற்காகத்  திறந்தது.உடனே ஆஞ்சநேயர்  தன் உருவத்தை இரண்டு மடங்காக்கினார். ஸுர்ஸா தன் வாயை  பதினாறு மைல் அகலத்திற்குத் திறந்தது. உடனே. ஸ்ரீ ஹனுமான் தன் உடலை இரண்டு மடங்காக அதாவது 32 மைல் அளவிற்கு உருமாற்றினார்.  இவ்வாறு அதன் வாயின் அகலம் அதிகரிக்க அதிகரிக்க ஹனுமானின் உயரமும் இரண்டு மடங்கு அதிகரித்தது. அரவம் தன் வாயை நூறு மைல் விஸ்தீரணத்திற்குத்  திறந்தது.அப்பொழுது  ஹனுமா்ன் தன் உருவத்தை  மிக சிறியதாக்கினார். அரவத்தின் வாயினுள் நுழைந்து வெளியே  வந்தார். பிறகு தலை வணங்கி
சீதாதேவியைத்  தேடிச் செல்ல அனுமதி  கேட்டார்.  தேவர்கள் உன் அறிவுத் திறனையையும் பலத்தையும் சோதிக்க அனுப்பினார்கள்.அதில் நீ வெற்றி பெற்றதை நான் அறிந்துகொண்டேன்.நீ அறவுத் திறனும் பலமும் கொண்ட  கிடங்கு. நீ ஸ்ரீ ராமரின் அனைத்துப் பணிகளையும் வெற்றியுடன் செய்யும் திறமை உடையவன். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு மிக மகிழ்ச்சியடன் 
அன்னை  சீதையைத் தேடி புறப்பட்டார்.

==================================

   கடலைக்கடக்க  அங்கும் வாயு குமாரனுக்கு ஒரு சோதனை.கடலில் ஒரு அரக்கி . அவளுக்கு ஒரு
சக்தி. கடலுக்கு மேல் பறப்பவைகளை அவைகளின் நிழலைப் பிடித்தே நிஜத்தைக் கொன்று விடுவாள்.
நிழலைப் பிடித்தாலே அவைகளால்  பறக்க முடியாது.அவைகள் கடலில் விழுந்து விடும்.அதை அந்த அரக்கி தன்  உணவாக்கிக் கொள்வாள். கொல்வாள்.அவளின் மாயையை வாயு குமாரன்  அறிந்து கொண்டார்.தன் மதிநுட்பத்தால்  அந்த  அரக்கியைக்  கொன்றுவிட்டு சமுத்திரத்தைக் கடந்து சென்றார். அந்த பிரதேசமே அழகாக இருந்தது. பூஞ்சோலைகளில் பூக்கள் பூத்துக் குலுங்கின.பூக்களில் வண்டுகள். ரீங்கரமிட்டன. மரங்களில் பழங்களும் பூக்களும் அதிகமாக இருந்தன.
பல விதமான விலங்குகளையும் பறவைகளையும் கண்டு களித்தார்.எதிரில் ஒரு பெரிய மலையைக் கண்டு அச்சமின்றி ஏறி இலங்கையின் அழகைக் கண்டு  வியந்தார். 

      ஹனுமானின் செயல்களைக் கண்டு சிவபகவான்  தன் மனைவியிடம்  இதில் ஹனுமானுக்கு எதுவும் பெருமை இல்லை. இது இராமரின் மகிமை. எமனையும் அழிக்கும் சக்தி வருவது இராமபிரானின்  அருளாகும்.
   ஹனுமான் மலை மேல் நின்று இலங்கையைப்  பார்த்தார். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட எழில் மிக்க நகரம்.கோட்டையின் மதில் சுவர்  தங்கத்தால் ஆனது.ஒளிமயமானது. அதில் விலை உயர்ந்த இரத்தினங்கள் பதிக்கப் பட்டிருந்தன. அகலமான தெருக்கள்,கடைத் தெருக்கள் இருந்தன. அழகான நகரம் பலவாறு அலங்கரிக்கப் பட்டிருந்தன. யானைகள்,குதிரைகள்,கோவேரிக் கழுதைகள் கூட்டம 
கூட்டமாக இருந்தன. மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. தேர்களும் அதிகமாக இருந்தன.
அவைகள் அனைத்துமே  எண்ணமுடியாத அளவிற்கு இருந்தன . பல உருவங்களில் அரக்கர் குழுக்கள்.
வலிமை மிக்க படைகள்.

அங்கிருந்த காடுகள் ,தோட்டங்கள்,நந்தவனங்கள் ,பூந்தோட்டங்கள்,கிணறுகள்,படியுள்ள கிணறுகள் அனைத்துமே  அழகுள்ளதாக இருந்தன. அங்குள்ள மனிதர்கள்,நாகர்கள்,கந்தர்வர்களின் பெண்கள்
ஆகியோர்  தங்களது  ஒப்பற்ற  அழகால் முற்றும் துறந்த முனிவர்களையும் வசீகரி்த்துக் கொண்டிருந்தனர். சில இடங்களில் மல்லர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.அவர்கள் தங்கள் பயிற்சி மைதானத்தில் கர்ஜித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் உடல் மலைகள் போல் காட்சி அளித்தன.அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டும் சவால் விட்டுக் கொண்டும் இருந்தனர்.
      அச்சமளிக்கும் சரீர அமைப்பைக் கொண்ட பலவித வீர்ர்கள் நகரத்தின் நான்கு திக்குகளிலும் எல்லா பக்கங்களையும்  பாதுகாத்துக் கொண்டிருந்தனர். சில இடங்களில் துஷ்ட அரக்கர்கள் மனிர்களையும்,எருமைகளையும்,பசுக்களையும் ,கழுதைகளையும்.வெள்ளாடுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  நிச்சயமாக  இவர்கள் இராமரின் அம்பு  மழை  தீர்த்தத்தில்  வீரமரணம் அடைவார்கள் என்பதை  அறிவிக்கத்தான்  துளசிதாசர் இவர்களுடைய  கதையைக். கூறி இருக்கிறார்.

   நகரில்  அதிக எண்ணிக்கையில் கண்காணிப்புக்  காவலர்கள்  இருப்பதைக்  கவனித்த ஹனுமான் 

தன் வடிவத்தை சிறிதாக்கி. இரவில் நகரில்  நுழைவதே சரி என முடிவெடுத்தார் .

       ஹனுமான் தன் வடிவத்தைக்  கொசு போல சிறு உருவமாக மாற்றி ,
மனித வடிவில் லீலைகள்  புரியும் பகவான்  ஸ்ரீ இராமசந்திரனை  வணங்கி  இலங்கைக்குச் சென்றார்.
இலங்கையின்  நுழைவாயிலில் லங்கினி என்ற அரக்கி இருந்தாள். அவள் ஆஞ்சனேயரிடம்
என்னை அவமதித்து என்னிடம்  கேட்காமல் எங்கே  போகிறாய் ?என்று கேட்டாள் .
மேலும்  முட்டாளே!  நீ என் ரகசியத்தை அறியவில்லை. திருடர்கள்  அனைவரும் எனது உணவாவார்கள்.
இதை  அரக்கி கூறியதுமே  ஹனுமான் அரக்கியை ஒரு குத்து குத்தினார். அரக்கி இரத்த வாந்தி எடுத்து 
தரையில் விழுந்தாள். 

 அந்த லங்கினி   தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து பணிவுடன் கைகளைக் கூப்பி  சொன்னாள் ----

பிரம்மா  இராவணனுக்கு  வரம் கொடுத்து விட்டுச்  செல்லும்  போது  என்னிடம் கூறினார்----
உன்னை ஒரு குரங்கு தாக்கும்.அப்பொழுது   நீ குழப்பம் அடைவாய். அப்பொழுது அரக்கர்களுக்கு
அழிவுகாலம்  என்று அறிந்து கொள். நான் செய்த புண்ணியத்தால் ஸ்ரீராமனின் தூதனான  உன்னை என் கண்களால் பார்த்துவிட்டேன். 
 சுவர்கத்தையும்  மோட்சத்தையும்  அதனால் கிடைக்கும் சுகங்களையும் திராசின் ஒரு தட்டில் வைத்து 
மறு தட்டில்  ஒரு நொடியில் சத்சங்கத்தால்  ஏற்படும்  நன்மைகளை வைத்தால்  அந்த சுவர்க மோட்ச சுகங்கள் அந்த ஒரு நொடி சத்சங்கப் பயன்களுக்கு  ஈடாகாது. 

  அயோத்தியாவின்  அரசன் இரகுராமனை மனதில் வைத்து ஜபித்துக் கொண்டே இலங்கைக்குள் சென்று நீ வந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவும். ராம பக்தரகளுக்கு  விஷம் அமிர்தமாக மாறிவிடும். விரோதிகள்  நண்பனாகி  விடுகின்றனர்.  சமுத்திரம்  பசுவின் குழம்பின்  அளவிற்கு  ஆழமில்லால்  போய்விடும். நெருப்பு  குளிர்ச்சி  அடைந்துவிடும். 
     ==========================
21/3
  ராமரின் அருட்பார்வை  பெற்றவர்களுக்கு மேருமலை கால் தூசிக்கு சமமாகும்.
 ஹனுமான் மிகச் சிறிய வடிவம்  எடுத்துக் கொண்டு இலங்கைக்குள்  நுழைந்தார் . அவர் 
 ஒவ்வொரு மாளிகைக்கும் சென்று சீதையைத்  தேடினார் . சென்ற  இடத்தில் எல்லாம் அதிக எண்ணிக்கையில் போர் வீர்ர்களைக்  கண்டார். பிறகு  இராவணனின் மாளிகைக்குச்  சென்றார். 
ராஜமாளிகை மிகவும்  விசித்திரமாக இருந்தது. அதை வர்ணிப்பது மிகவும் கடினம் .ஹனுமான்
   
மாளிகையில்  இராவணன்  படுத்திருப்பதைக் கண்டார். ஆனால் சீதையைக் காணவில்லை.பிறகு மற்றொரு  அதிக அழகான பகவானின் ஆலயத்தைக் கண்டார்.அந்த மாளிகை இராமரின் ஆயுதமான 
வில் மற்றும். அம்புகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.அந்த அழகை வர்ணிக்க சொற்கள் கிடைக்காது.
அங்கு புதிய புதிய துளசி மரக் கூட்டங்களைக்கண்டு  வானர அரசனான ஆஞ்சனேயர் மகிழ்ச்சி அடைந்தார். 

 இலங்கை அரக்கர்களின் கூட்டங்கள் வசிக்கும் இடம். அங்கு நல்லவர்கள் இருப்பதரிது. ஆஞ்சனேயர் இப்படி  நினைத்துக் கொண்டிருக்கும் போதே விபீஷணன் எழுந்தார் . எழுந்ததுமே  இராம நாமத்தை 
உச்சரித்தார். ஹனுமான் விபீஷணனை நல்லவர்  என உணர்ந்து மகிழ்ந்தார் .இவரிடம் என்னை அறியப் படுத்திக் கொகிறேன். நல்லவர்களால். எவ்வித தீமைகளும் உண்டாகாது. பயன்களே  ஏற்படும். 

      அந்தணர் வடிவமெடுத்து ஆஞ்சனேயர்  கூப்பிட்டார் . உடனே விபீஷணர் வெளியே வந்தார் .அந்தணரை வணங்கி  அவரைப் பற்றிய விவரம் கேட்டார் . 
  நீங்கள் ஹரிபக்தரா ?  உங்களைக்  கண்டதுமே என் மனதில் அதிகமான அன்பு உண்டாகிவிட்டது.
 நீங்கள்  வறியவர்களுக்கு உதவும் ராமர் தானே? எனக்கு என் இருப்பிடத்திற்கே வந்து காடசி அளித்து 
பெரிய பாக்கியவானாக்க எழுந்தரளியிருக்கிறீரா?  என்றெல்லாம் விபீஷணர் அந்தணர் வடிவில் வந்த 
ஆஞ்சநேயரிடம் கேட்டார் . 

  ஆஞ்சனேயர் விபீஷணனிடம்  இராமருக்கு நேர்ந்த நிலையைக்  கூறி தான் யார் என்பதையும் விளக்கினார்.  கேட்டதுமே. விபீஷணன் மிகவும்  ஆனந்தமடைந்தார். ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த பண்புகளின் நினைவலைகளில் இருவரும் அன்பிலும் ஆனந்த்த்திலும்  மெய் மறந்தனர்.

     பிறகு விபீஷணன் பவனகுமாரன்  ஆஞ்சனேயரிடம் கூறினார்--- வாயுகுமாரரே! நான் பற்களுக்கிடையில் உள்ள  நாக்கு போல இங்கு உள்ளேன்.என் நிலை சரி இல்லை. சூரியகுல திலகம் 
ஸ்ரீ  ராமர் என்னை அநாதையாக ஏற்று. அருள் புரிவாரா? 
  நான்   அரக்க  உடல்   பெற்றுள்ளதால் எனது  சாதனையில் வெற்றிபெற முடியவில்லை.என் மனதில் இராமர். மீது  அன்பும்   இல்லை தங்கள் போன்ற பக்தரை சந்தித்த பிறகு இராமரின் அருள் எனக்கு கிடைத்திருக்கிறது என்ற  நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.ராமரின் அருள் இருந்ததால்  தான் உங்களுடய 
தரிசனம்  கிடைத்துள்ளது.ராமர் பக்தர் மேல்  எப்பொழுதும் அன்பு செலுத்துவது தான் அவரது நெறிமுறையாகும். நான் ஒன்றும்  உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவனில்லையே. நான் சஞ்சல மன நிலைஉள்ள வானரம்.பிறவிகளில்  மிகவும்  தாழ்ந்தவன்.   காலையில் எழுந்ததும் குரங்குகளின் பெயரைச் சொன்னால் அன்று முழுவதும் உணவு கிடைக்காது. நான் இந்த அளவிற்கு தாழ்ந்தவன்.
அப்படி உள்ள எனக்கு  இராமரின் அருள்  கிடைத்திருக்கிறது. என்று தன்னைப் பற்றி விபீஷணனிடம் கூறும் போதே ஸ்ரீஹனுமானின் கண்களில் இருந்து பக்தி பரவசத்தால் கண்ணீர் பெருக்கெடுத்தது.

     பகவானின் அருள் அறிந்தும் மற்ற லௌகீக விஷயங்களில் ஈடுபட்டு செல்லும் திசை தெரியாமல் சுற்றித் திரிவோருக்கு  இன்னல்கள் ஏன் வராது? இராமரின் பண்பினை குணத்தைப்  புகழைப்  பாடப்பாட வர்ணிக்க முடியாத அளவிற்கு தெய்வீக அமைதியைப்  பெற்றனர். 
    பிறகு விபீஷணன் அன்னை ஜானகியின் இலங்கையில் இருக்கும்  நிலைபற்றி கூறினார். ஸ்ரீஹனுமான்  சீதையின் நிலைபற்றி கேட்டறிந்ததும்  அன்னையைப்  பார்க்க வேண்டும் என்ற தன் வந்த விருப்பத்தையும் நோக்கத்தையும் கூறினார்.
   விபீஷணன்  சீதையைக்  காண அனைத்து உபாயங்களையும் கூறினார். ஸ்ரீஹனுமான். மீண்டும் தன் உருவத்தை மிகச் சிறியதாக மாற்றி அசோக வனத்தில் சீதை  இருக்கும் பக்கமாகச் சென்றார்.

   அங்கு. சீதையைக் கண்டதும்  மனத்திற்குள்ளேயே அவரை வணங்கினார். அங்கேயே இரவு முழுவதும் கழிந்துவிட்டது. சீதையின் உடல் மெலிந்திருந்தது. தலையில்  ஜடாமுடியின் ஒரு கொத்திருந்தது.
ஜானகியின்  துயரமான நிலை கண்டு  பவனகுமாரர்  மிகவும் வருத்தமுற்றார்.
     ஹனுமான்  மரத்தின். இலைகளில் மறைந்து அமர்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதிகமான பெண்களுடன் அலங்கரித்துக்கொண்டு இராவணன் அங்கு வந்தான். 
 துஷ்டனான இராவணன் சீதையை பலவாறு தன் இச்சைக்கு அடங்கும் படி  அன்பாகவும்,  தானம் பரிசு தருவேன்  என்றும் அச்சுறுத்தியும்  தண்டனை தருவேன் என்றும்  மிரட்டினான் .பிறகு மண்டோதரி போன்ற ராணிகளை  உனக்கு அடிமையான  வேலைக்காரிகளாக்குவேன்  என்று. உறுதி மொழி அளித்தான். தனது  அன்பிற்குறிய கணவன் கோசலநாட்டு மன்னனை மனதில் நினைத்துக் கொண்டு 
அங்குள்ள  துரும்பகளைத்  திரையாக்கி அதன் மறைவி்ல் இருந்து  கொண்டு சொன்னாள்--
  பத்துத்  தலை கொண்டவனே! மின்மினுப் பூச்சி  வெளிச்சத்தில் தாமரை மலராது. நீ உன்னை அப்படியே நினைத்துக் கொள். தீய குணம் படைத்த அரக்கனே! உனக்கு  ஸ்ரீ ராமரின் பாணத்தின் மகிமை பற்றி  தெரியாது. 
  பாவியே! நீ அவர் இல்லாத போது சூனியத்தில் என்னை கொண்டுவந்துள்ளாய். நீ தாழ்ந்தவன்.வெட்கமில்லாதவன். உனக்கு வெட்கமே இல்லையா?

    தன்னை மினிப்பூச்சி என்றும் இராமனை சூரியன் என்றும்  சீதை சொன்னதுமே இராவணன் மிகவும் 
கோபம்  அடைந்து தன் வாளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு  கோபத்துடன் சொன்னான்---
சீதையே! நீ என்னை அவமதித்துவிட்டாய். நான் உன் தலை என் வாளால் வெட்டிவிடுவேன்.நான் சொல்வதைக் கேட்கவில்லை.என்
றால் நீ. உன் யிரை  இழந்துவிடுவாய். 

   பத்துத் தலையா! என் பிரபுவின்  புஜங்கள்  கருப்புத் தாமரை மலர் போன்று மென்மையானவை.அவை
யானையின் தும்பிக்கை போன்றவை. அவருடைய புஜங்கள் என் கழுத்தில் விழும் . அல்லது  உன்னுடைய வாள். ஏ பைத்தியக்காரா! இது தான் என் உண்மையான உறுதிமொழி. 

வாளே! எனது விரகதாபத் தீயால் உண்டான மிக அதிக எரிச்சலை போக்கி விடு. வாளே! நீ குளிர்ச்சியான,தீவீரமான,மேன்மையான பெருக்கத்தை ஓடச்செய்து விடுவாய்.உன்னுடைய  கூர்மை எனக்கு குளிர்ச்சியாக இருக்கும். என் மனத்துயரத்தின் சுமையைப் போக்கிவிடு.

 சீதை இவ்வாறு கூறியதுமே அவளை கொல்வதற்காக இராவணன் ஓடினான்.அப்பொழுது மயன் என்ற அரக்கனின் மகள்  மண்டோதரி அவனைத் தடுத்து அறிஉரை கூறி தடுத்தாள் . இராவணன் தன்னுடன் வந்த அரக்கப்  பெண்களிடம்  சீதையை  பல விதங்களி்ல் அதிகமாக  பயம் காட்டுங்கள். ஒரு மாதத்தில்
இவள். நான். சொல்வதை ஏற்காவிட்டால் இவளை வாளால் வெட்டிக் கொன்றுவிடுவேன். என்று கூறிவிட்டு  இராவணன் அங்கிருந்து சென்றுவிட்டான்.இங்கே ராட்சசிகள்  பல வித பயங்கர வடிவங்கள்
எடுத்து  சீதையை  பயமுறுத்தினர்.  அவர்களில் திரிசடை என்ற அரக்கி  மிக நல்லவள். இராமரின் மீது அதிக பக்தி உடையவள் . அதிக ஞானம் உடையவள்.அவள் அனைவரிடமும் தான் கண்ட கனவைக் கூறி
சீதைக்கு பணிவிடை செய்து நீங்கள் நலம்  பெறுங்கள். 
   எனது கனவில்  ஒரு குரங்கு இலங்கையை எரித்துவிட்டது.அரக்கர்களின் படைகள் முழுவதும் அழிந்துவிட்டது. இராவணன்  நிர்வாணமாக  கழுதையில் உட்கார்ந்திருக்கிறான்.அன் தலை  மொட்டை அடிக்கப் பட்டுள்ளது.இருபது புஜங்களும் வெட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவன் யமபுரிக்கு போய்க் கொண்டிருக்கிறான்.இலங்கைக்கு அதிபதியாக விபீஷணன் ஆகவிட்டார். நகரத்தில் அனைவரும்
இராமர் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர் . பிரபு   சீதையை அழைத்துச்  சென்றார். இந்த கனவு நான்கு  நாட்களில் மெய்யாகிவிடும். திரிஜடை  சொன்னதைக் கேட்டு  அரக்கிகள் பயந்து சீதையி்ன் கால்களில் விழுந்து வணங்கினர். 
  அனைவரும் சென்ற பிறகு  ஒரு மாதம் கழிந்த பிறகு இந்த அரக்கன் என்னைக் கொன்றுவிடுவான் என்று  சீதை நினைத்தாள். 
சீதை கைகூப்பி திரிசடையை வணங்கினாள். அவளிடம்  ஆபத்தில் என்னுடன் சேர்ந்து இருந்தாய்.நீ விரைவில் என் உயிர் போக ஒரு வழியைப் பயன் படுத்து. இந்த விரஹ வேதனையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. 
 கட்டை களைக் கொண்டுவந்து  எனக்கு சிதை மூட்டு.இராவணனின் கடும் சொற்களை என்னால் கேட்க இயலவில்லை. 

 சீதை சொல்வதைக் கேட்டு திரிசடை அவளுக்கு இராமனின் வீரத்தையும் பலத்தையும் கூறி ஆறுதல் அளித்தாள். இரவில் சிதைக்கான கட்டைகள் கிடைக்காது என்று கூறி சென்றுவிட்டாள். 

 பகவானே எனக்கு எதிராக இருக்கிறார்.நெருப்பும் கிடைக்காது.எனது மனத்துயரமும் தீராது.ஆகாயத்தில் நெருப்பு  கங்குகள் போல் நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் பூமியில் ஒரு நட்சத்திரம்கூட இல்லையே என்று சீதை மனதிற்குள் எண்ணினாள். 

நிலவும் நெருப்பு மயமே .ஆனால் அதுவும் என்னை துரதிர்ஷ்டசாலி என அறிந்து நெருப்பைப் பொழியவில்லை. அசோகமரமே! எனது வேண்டுகோளை ஏற்று எனது மனவேதனைகளைப்  போக்கி 
உன்னுடைய பெயரான துன்பத்தை போக்கு என்பதை மெய்ப்பித்து விடு. உன்னுடைய  மென்மையான 
இலைகள் நெருப்பைப் போன்றவையே. நெருப்பை மூட்டி எனது பிரிவுத்துயரத்தைப் போக்கிவிடு.

  சீதையின் விரக வேதனையைக் கண்ட  அனுமானுக்கு அந்த நொடி  ஒரு கல்பத்திற்கு சமமாக இருந்தது . சீதைக்கு தைரியம் கொடுக்க ஆஞ்சனேயர் ராமரின் கணையாழியை சீதையின் முன் போட்டார். சீதை அது ராமருடையது என அறிந்து எடுத்துப் பார்த்தாள்.அதில் இராமருடைய பெயர் பொறித்திருப்பதைப்  பார்த்து சீதை ஆச்சரியப்பட்டாள். மகிழ்ச்சி அடைந்தாள். ராமரை நினைத்து பிரிவுத் துன்பத்தால் வேதனையடைந்தாள்.பிறகு  ராமர் வீரர். அவரை ஒருவரும்  வெல்லமுடியாது. எந்த மாயையும் இப்படி ஒரு மோதிரத்தை செய்ய முடியாது.இப்படி சீதை  மனதில் பல வித எண்ண அலைகள் அலைபாயும் போது  அனுமான் இனிய  சொற்களால்  பேசினார்--இராமரின் புகழைப் பாடினார். அதைக் கேட்டதும் சீதையின் துயரம். பயந்தோடிவிட்டது.அனுமான் சொல்வதை அவர் கவனமாகக் கேட்டார்.
ஆரம்பத்தில் இருந்து  முழுகதையையும்  அனுமான் கூறினார். 
   என்  காதிற்கு  இனிய  அமிர்தமான சொற்களைக்கூறி மகிழ்வித்தவர் எனக்கு எதிரி்ல் ஏன் வரவில்லை என்றார். உடன் அனுமான் சீதைக்கு முன் வந்தார். அவரைப் பார்த்த்தும் சீதை முகத்தைத் திருப்பிக் கொண்டார். 
அப்பொழுது அனுமான் சீதையிடம். நான் ராமனின்  தூதன். அன்னை ஜானகியே! நான் கருணை வடிவான ராமரின்  மீது சத்தியமாகக்  கூறுகிறேன். அன்னையே! இந்த மோதிரத்தை நான் தான் 
கொண்டுவந்தே
ன். நான் அவர் தூதன்.அற்கு சான்றுதான் இந்த மோதிரம் .
 மனிதருக்கும் வானரத்திற்கும் எப்படி சேர்க்கை ஏற்பட்டது?என்று சீதை வினவ  அனுமான் விவமாக 
 இராமருக்கும் அனுமானுக்கும்  ஏற்பட்ட தொடர்பு பற்றி கூறினார். அனுமானின் அன்பு நிறைந்த 
விரங்களைக் கேட்டு  சீதைக்கு  அனுமார் மனதாலும்,சொல்லாலும் செயலாலும்  அருட் கடல் ராமரின் தாசர் தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.  ராமரின் அன்பிற்குறியவர் அனுமான் மீதுமிகவும் ஆழமான  அதிக அன்பு உண்டாகியது. உடலில் ஆனந்தம்  ஏற்பட்டது.கண்களில் கண்ணீர்  பெருக்கெடுத்தது. அனுமானே!  பிரிவுத் துயரக்கடலில். மூழ்கும் எனக்கு என்னை மீட்க வந்த கப்பல்
போன்றவன் நீ. இராமன-லட்சுமணனின் நலத்தைப் பற்றி கூறு.ராமர்  மென்மையான மனமும் கிருபாகடாட்சமும் கொண்டவர்.  ஏன் இப்படி இரக்கமற்ற முறையைக் கையாள்கிறார். தொண்டனுக்கு சுகம் அளிப்பது அவரது  இயற்கை  குணம்.  அவர் என்னை நினைவில் வைத்துக்கொண்டுள்ளாரா?
அவரது  மென்மையான  உருவம்  கண்டு என் கண்கள் குளிர்ச்சியடையுமா?என்னால் பேச முடியவில்லை.
கண்களில்  இருந்து  கண்ணீர் பெருக்கெடுத்தது. நாதா! நீங்கள். என்னை  முற்றிலும்  மறந்து விட்டீரகள்.
  சீதையின் ஆற்றொனாத் துயர் கண்டு  பணிவாக மென்மையாக பேசினார்--ஸ்ரீராமரும் இலக்குவனனுடன் நலமாக இருக்கிறார். ஆனால் உங்கள் நினைவாகத்தான் வருத்தமாக இருக்கிறார்.
இராமரின் இதயத்தில் உங்கள் மீது  அதிக அன்பு இருக்கிறது. நீங்கள் தைரியமாக இருங்கள். அனுமான்  அன்பினால் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். 
பின் ராமரின் செய்தியாகக் கூறினார்-- ராமர் சொல்கிறார்   - சீதையே! உன்பிரிவால்  எனக்கு எல்லாமே 
அனுகூலமற்றதாக இருக்கின்றன. மரங்களின் துளிர் இலைகளும் நெரு்பு போல் இருக்கின்றது.இரவு பயங்கரமாக உள்ளது. நிலவு  சூரியனைப் போல் சுட்டெரிக்கிறது. தாமரை வனங்கள் ஈட்டிகளின் வனங்கள் போல் இருக்கின்றன. எனக்கு நல்லது செய்வதெல்லாம் இப்பொழுது இன்னல் தருவது போல் இருக்கின்றன. காற்று கூட மூச்சுக் காற்றுபோல் சூடாக இருக்கின்றது. பாம்பு  சுவாசிப்பது போல் விஷம் கலந்த வெப்ப காற்றுபோல இருக்கிறது. மன வேதனை சொன்னால் வேதனை குறையும்.ஆனால் யாரிடம் பகர்வேன். இந்த வேதனையை ஒருவரும் அறியமாட்டார்கள். உனக்கும் எனக்கும் உள்ள காதல் தத்துவம் எனக்கு மட்டும் தான் தெரியும். என் மனம் எப்பொழுதும் உன்னருகில் தான் இருக்கிறது. என் அன்பின்  சாரம் இதுதான். இராமரின் அன்பான செய்திகளைக் கேட்டு  சீதை தன் மெய்மறந்து விட்டாள். அன்பில் ஐக்கியமாகிவிட்டாள்.
  ஹனுமான் அன்னையிடம் இராமர் மீது நம்பிக்கை வைத்து மனதில் தைரியமாக இரு. தன் பக்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்மைகளையும் சுகங்களையும் தரக்கூடிய ஸ்ரீராமனை ஜபம் செய்.  ஸ்ரீராமரின் மகிமையை மனதில் இருத்தி கோழைத் தனத்தை விட்டுவிடு.
   அரக்கர்கள் கூட்டம் விட்டிற் பூச்சிகள்  போன்றது.அந்துப் பூச்சிகள் போன்றவை. ஸ்ரீ ராமரின் பாணம்
நெருப்பு போன்றது. அன்னையே! அரக்கர்கள் எரிந்துவிட்டனர் என்றே அறிந்துகொள். 
    ஸ்ரீராமருக்கு உங்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் தாமதிக்கமாட்டார்.அன்னையே!ஸ்ரீராமரின் அம்பு என்ற சூரியன் உதித்ததுமே அரக்கர்கள் படைகள் என்ற இருள் அகன்றுவிடும். 
 அன்னையே! இப்பொழுதே நான் தங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லமுடியு்ம்.ஆனால் இராமசந்திர பிரபு எனக்கு அனுமதி அளிக்கவில்லை. சில நாடகள் பொறுமையாக இருங்கள்.
ஸ்ரீஇராமர் வானரப்படைகளோடு இங்கு வருவார். அரக்கர்களைக் கொன்று உங்களை அழைத்துச் செல்வார். நாரதர் போன்ற முனிவர்கள் மூன்று உலகங்களிலும் உன் புகழைப் பாடுவார்கள்.
  சீதை மனதில் சிறிய வடிவில் உள்ள அனுமனைக்கண்டதும் சந்தேகம் எழுந்தது. அவர் அனுமானிடம்,
வானரங்கள் அனைத்தும் உன்னைப்போல் சிறிதாக இருப்பார்களா?இவ்வளவு பெரிய அரக்கர்களை எப்படி  எதிர்த்து. போரிடமுடியும்? இதைக் கேட்டதும்  அனுமான் தன் அட்டமா சக்தியால்் தன்் உண்மையான பெரும் வடிவத்தில் தோன்றினார்.பொன் மலை போன்ற உடல். அவரைப் பார்த்தாலே எதிரிகள் அஞ்சும் உடலமைப்பு.பலமும் வீரமும் கொண்ட தோற்றப்பொலிவு. 
    ஸ்ரீஹனுமானின்  உண்மையான தோற்றம்  கண்டு  சீதை மனதில் இருந்த ஐயம் விலகியது.மனதில் 
திடமான நம்பிக்கை ஏற்பட்டது. 

  ஹனுமான். மீண்டும்  சிறிய. வடிவம் எடுத்துக் கொண்டார்.  
அன்னையே! வானரங்களுக்கு   அறிவு  மட்டு. பிரபுவின் பிரதாபத்தால்  சிறிய  பாம்பும்  கருடனை சாப்பிட முடியும். மிகவும் பலமற்றவனும் மிக  பலமுள்ளவனைக் கொல்ல முடியும்.  
   பக்தி, வீரம் ,பலம், தேஜஸ் மிக்க அனுமானின் வார்த்தைகளைக் கேட்டு சீதைக்கு மனநிறைவு ஏற்பட்டது. ஸ்ரீராமரின் அனபிற்குறிய அனுமானுக்கு ஆசிகள் வழங்கினார். 
அனுமானை மகனே என்று அழைத்தார். நீ பலமானவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் இரு.நீ முதுமை இன்றி எப்பொழுதும் இளமையாக இருப்பாய். உனக்கு மரணமில்லை.ஸ்ரீராமர் உனக்கு அருள் பரியட்டும்.
பிரபு அருள் புரியட்டும் என்று அன்னை சீதை கறியதுமே அனுமான் அதிக ஆனந்தமடைந்தார். 
சீதையை மீண்டு்ம் மீண்டும் வணங்கினார். பிறகு இருகரங்களையும் கூப்பி ,''அன்னையே! இப்பொழுது நான் வெற்றிபெற்றுவிட்டேன். உங்களது ஆசிகள் சக்திமிக்கவை.புகழ் பெற்றவை. 
    பழங்கள் நிறைந்த மரங்களைக் கண்டதும் எனக்கு பசி எடுக்கிறது. மகனே!மிகப் பெரிய வீர்ர்கள் இவைகளைக்  காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சீதை கூறியதும் ஹனுமான் ,அன்னையே!
நீங்கள். மகிழ்ச்சியுடன் கட்டளை இட்டால் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை.
  
ஹனுமானின்  அறிவுத் திறனையும் பலத்தையும் கண்டு சீதைஅனுமானிடம் கூறினார்---மகனே!ரகுநாதனை  மனதில் வைத்துக் கொண்டு   இனிப்பான பழங்களைச்  சாப்பிடு.  
   ஸ்ரீஹனுமான் சீதையை வணங்கி விட்டு  தோட்டத்திற்குள் புகுந்து பழங்களை சாப்பிட்டார்.மரங்களின் கிளைகளை முறித்தார். அங்கு பல போர் வீரர்கள்  காவலுக்கு இருந்தனர்.
அவர்களில் சிலரை அனுமான் கொன்றுவிட்டார். சிலர் இராவணனிடம் புகார்  கொடுக்கச் சென்றனர் .
அவர்கள இராவணனிடம் அசோகவனத்தில் பெரிய குரங்கு வந்து பழங்களை சாப்பிட்டது.மரங்களை முறித்தது. சில வீர்ர்களைக்  கொன்றுவிட்டது. 
 இதைக் கேட்டு இராவணன் அதிக வீரர்களை  அனுப்பினான். அவர்களைப் பார்த்து கர்ஜித்தார். பல வீரர்களைக்  கொன்றுவிட்டார். சிலர் அடிபட்டு கத்திக் கொண்டே சென்றனர். 
   பிறகு இராவணன் அட்சயகுமாரனை அனுப்பினார்.அவன் பெரும்படையுடன் சென்றான். அவன் வருவதைப் பார்த்து  இராமன் பெரிய மரத்தைப்  பிடுங்கி அவனைக் கொன்று பெரும் ஓசையுடன் கர்ஜித்தார்.அனுமான் சேனையில்  சிலரைக் கொன்றார்.  சிலரை  நசுக்கினான்.சிலரை மண்ணோடு 
மண்ணாக்கினார்.சிலர் இராவணனிடம் சென்று   அனுமான் பெரிய பலசாலி என்று கூறினர். 
    மகன் வதம் செய்யப் பட்ட செய்தி  அறிந்து தன் மூத்த மகன் பலசாலியான மேகநாதனை அனுப்பினார். அவனைக்  கொன்றுவிடாதே. அவனைக் கட்டி உயிருடன் அழைத்துவா. அந்த குரங்கு எங்கிருந்து வந்திருக்கிறது? 
 இந்திரனையே தோற்கடித்த ஒப்பில்லா வீரன் மேகநாதன் அனுமானுடன் போர் புரியச் சென்றான்.தன் சகோதரனைக்  கொன்ற செய்தி அறிந்து மேகநாதன் மிகவும் கோவமாக இருந்தான். அனுமான் பயங்கரமான போர்வீரன் வருவதைப் பார்த்தார். அவர் கர்ஜித்துக் கொண்டே ஓடினார். ஒரு மிகப்பெரிய 
மரத்தை வேரோடு பிடுங்கி மேகநாதனின் தேரை ஒடித்து அவனுக்குத் தேர் இல்லாமல் செய்தார். அவனுடன் வந்த வீரர்களை அழிக்க ஆரம்பித்தார். அனைவரையும் கொன்று விட்டு மேகநாதனுடன்
போர் புரியத் தொடங்கினார். இரண்டு யானைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் இருந்தது. அனுமான் மேகநாதனை ஒரு குத்து குத்திவிட்டு மரத்தின் மீதுஏறினார். அவனுக்கு ஒரு நொடியில் மயக்கம் தெளிந்தது.  அவன் எழுந்து அனுமான் தன்னை வெல்ல முடியாத அளவிற்கு மாயைகள் புரிந்தான். ்ஆனால் அவனால் வெல்ல முடியவில்லை.இறுதியில் அவன் பிரம்மாஸ்த்திரத்தை 
பிரயோகித்தான். அனுமான் பிரம்மாஸ்த்திரத்தின்  மஹிமை குறைந்துவிடக் கூடாது என கட்டுண்டிருந்தான்.அவன் அனுமான் மீது பிரம்ம பாணத்தை ஏவினான்.அது தாக்கியதுமே அனுமான் மரத்தில் இருந்து விழுந்தார்.விழுந்து கொண்டிருந்த நிலையிலும்  பல படைவீர்ர்களைக் கொன்றார்.
ஹனுமான் மயக்கமடைந்த பிறகு  மேகநாதன் அவரை நாகபாசத்தால் கட்டி எடுத்துச் சென்றான்.
  குரங்கு கட்டப்பட்ட செய்தி அறிந்ததும் வேடிக்கை பார்க்க அரக்கர்கள் எல்லோரும் அவைக்கு வந்தனர். ஹனுமான் இராவணனின் அரசவையைப் பார்த்தார்.அங்கு வர்ணிக்க முடியாத அளவிற்கு
ஜஸ்வர்யங்கள் இருந்தன.
   தேவர்களும் திக்பாலகர்களும் மிகவும் பணிவுடனும் ்பயத்துடனும் இராவணனின் கோபமான முகத்தைப்  பார்த்துக் கொண்டிருந்தனர்.அவனுடைய  வீரத்தையும் மகிமையை அறிந்தும் பார்த்தும் ஹனுமான் அஞ்சவில்லை.அவர் பாம்புகளின்  கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் கருடன் போன்று
பயமின்றி இருந்தார்.
  இராவணன் அனுமானைப் பார்த்துஉ தீயசொற்களைக் கூறி அட்டகாசமாக சிரித்தான். ஆனால் மகனின் மரணத்தை நினைத்து  வருந்தினான். 
  பிறகு ஹனுமானைப் பார்த்து கேட்டான்--" நீ யார்?யாருடைய பலத்தால்  நீ காட்டை பாழ்படித்தினாய்?
நீ என்னுடைய பெயரையும் புகழையும் கேள்விப்படவில்லையா?பைத்தியக்காரா! எனக்கு  முன்னால் நீ அச்சமின்றி இருக்கிறாயே! நீ. அசுரர்களை  எந்த குற்றங்களுக்காகக்  கொன்றாய்?முட்டாளே! உனக்கு 
உன் உயிர் போய்விடும் என்ற பயம். இல்லையா?
ஸ்ரீஹனுமான் விடைபகர்ந்தார்--என் பலம்  படைத்தல்,காத்தல்,அழித்தல் புரியும் பிரம்மா,விஷ்ணு,
மஹேஷ்  வலிமை. பிரம்மாண்டத்தை,மலைகள்,வனங்களைத் தாங்கும் ஆயிரம்தலை கொண்ட ஆதிஷேசன் பலம்.தேவர்களைக் காக்க பலவித்த அவதாரங்கள் எடுத்தவர் பலம்.உன்னைப் ்போன்ற 
முட்டாள்களுக்கு தண்டனை கொடுக்கும் பலம்.சிவ தனுஷைஐ உடைத்தபலம்.அதனால் அரசர்களின் ஆணவத்தை தூள் தூளாக்கியபலம். கரன்,தூசன்,திரிசடை,வாலி போன்றோரை வதம் செய்தபல்.யாருடனும் ஒப்பிட முடியாதபலம்.  
 அந்தபலத்தின் சிறிதளவு பலத்தால் உலகம் முழுவதையும் நீ வென்றுள்ளாய்.அந்த அதிக பலம்
உள்ளவரின் மனைவியைத் திருட்டுத் தனமாக கொண்டுவந்துள்ளாய். நான் அந்த சர்வ வல்லமை பெற்றவனின் தூதன்.

 நான் உன் மஹிமையை நன்கு அறிவேன். ஸஹஸ்ரபாஹுஉடனும் வாலியிடமும் போரிட்டு வெற்றிபெற்று புகழ் பெற்றுள்ளாய். அரக்கர்களின் தலைவனே!எனக்கு பசி எடுத்தது.ஆகையால் மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து சாப்பிட்டேன். குரங்குகளின் குணப்படி மரங்களை ஒடித்தேன்.தீயவழியில் செல்லும் துஷ்ட அரக்கர்கள் என்னை. அடிக்கத் தொடங்கினர்.உடல் அனைவருக்கும் அதிகப் பிரியமானது.என் உயிர் காக்க அவர்களைக் கொன்றேன்.அதனால் உன் மகன் என்னைக் கட்டிக் கொண்டுவந்து விட்டான். நான் என் பிரபுவின் பணிக்காக வந்தேன்.
இராவணா! நான் கைகூப்பி வேண்டுகிறேன்.நீ உன் ஆணவத்தை விட்டுவிட்டு  என் அறிவுரையைக் கேள்.நீ உன் பவித்திர குலத்தின் மேன்மைக்காக உனது பிரமையை விடுத்து பக்தர்களின் பயம் போக்குவதற்காக பகவானை  பஜனை செய்யவும். அனைத்து உலகப் படைப்புகளையும் அழிக்கும் எமனே  ராமரைக் கண்டு அஞ்சுவார்.அவரைப் பகைத்துக் கொள்ளாதே. நான் சொல்வதைக் கேட்டு
சீதையை கொடுத்துவிடு.

 கரனின் விரோதியான ஸ்ரீ ரகுநாதன் அடைக்கலமானவர்களைக் காப்பவர். இரக்கக் கடவுள்.நீ சரணடைந்தால் உன்னுடைய குற்றங்களை மன்னித்து அடைக்கலம் தருவார். ஸ்ரீராமரை மனதில் 
வைத்து இலங்கையை  ஆட்சி செய்.
 தங்கள் தந்தை ரிஷி புலஸ்த்யரின் புகழ்  களங்கமற்ற நிலவைப் போன்றது. அந்த நிலவில் நீ களங்கமாகி விடாதே. 
  ராம நாமம்  இன்றி சொல்லிற்கு அழகு இருக்காது. மோகத்தையும் ஆணவத்தையும் விடுத்து  எண்ணிப்பார். அடே! தேவர்களின்  எதிரியே! ஆபரணங்களால் தன்னை அலங்கரித்த  அழகான பெண் 
ஆடையின்றி நிர்வாணமாக இருந்தால் அழகாக இருக்கமாட்டாள். இராமனை எதிரியாக நினைப்பவர்களின் செல்வமும் மஹிமையும் இருந்தாலும் பயன் இன்றி அழிந்து விடும். செல்வங்கள் பெற்றாலும் பெறாததற்கு  சமம். நீர் ஊற்றுள்ள  நதிமூலம்  இல்லாத ஆறுகளில் மழைகாலத்தில் தண்ணீர் ஓடும்.  மழை நின்றதும் வரண்டுவிடும்.  ராமனை எதிரியாகக் கருதுபவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.ஆயிரம்  சிவன்கள்,விஷ்ணுக்கள,பிரம்மாக்கள் உடன் இருந்து அருள் பாலித்தாலும்  அவர்களால்  தப்பிக்க முடியாது.

அனைத்திற்கும் மூலமாக இருப்பது மோகம் தான்.  அது அறியாமையை உண்டாக்கும் அதிக இருண்ட வாழ்க்கையைத் தரும் மோகத்தையும் ஆணவத்தையும் விட்டுவிடு.கருணைக் கடலான ரகுகுலத் திலகமான இராமச்சந்திரனை  பஜனை செய்.  
 ஸ்ரீ ஹனுமான் இராவணனுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் ,நீதி  ஆகிய அறிவுரைகள் வழங்கினாலும் 

மிகவும் ஆணவம் கொண்ட  இராவணன் ஹனுமானை பரிகாசம் செய்தான். நமக்கு ஞானோபதேசம் செய்ய ஓரு குரங்கு  குருவாகக்  கிடைத்துள்ளார் என்றான்.
ஹனுமானைப் பார்த்து துஷ்டனே!நீச்சனே! எனக்கா பாடம் புகட்டுகிறாயா ?உனக்கு மரணம் நெருங்கி விட்டது என்றான். 
இதைக் கேட்டதும் ஹனுமான் உனக்குத் தான் மரணம் நெருங்கிவிட்டது. எனக்கல்ல.உனது அறிவு  மழுங்கிவிட்டது என்பதை நான் நேரடியாக காண்கிறேன்.







   

  

  
 


 



 




 

 


   



  




  

No comments: