Saturday, February 4, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபது.


ஸ்ரீ ராமச்சந்திரர் ,சீதை இருவரின் அழகையும் அனைவரும்

இமை அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அனைவரும்  இறைவனிடம்  வேண்டினர் :---
பகவானே!ஜனகர் பிரதிக்ஞை என்ற
முட்டாள்தனத்தை விட்டுவிட்டு
சீதையின் விவாஹத்தை ராமருடன் செய்ய அருள்புரியுங்கள்.
இந்த விஷயம் எல்லோருக்குமே பிடித்துள்ளது. எல்லோரின் மனதிலும் இந்த கருநீலவண்ணன் தான் சீதையின் மணாளன் என்ற எண்ணமே மேலோங்கியது. ஜனகரின் பிடிவாதத்தால் இறுதியில் மனவேதனை தரும் என்று எண்ணினர்.
 
அப்பொழுது அரசர் பாடகர்களை அழைத்தார். அவர்கள்
புகழ்ந்து பாடிவிட்டுச் சென்றனர். அரசர் சொன்னார் --போய் ,என்னுடைய சங்கல்பத்தைச் சொல்லுங்கள். அவர்கள் மிக ஆனந்தத்துடன் அரசனின் அறிவிப்பைச் சொல்ல சென்றனர்.

  பாடகர்கள்  அறிவித்தனர்--"புவி  ஆளும் அரசர்களே!
நாங்கள்  எங்களுடைய புஜங்களை உயர்த்தி
ஜனகரின்  சபதத்தைச் சொல்கிறோம்.
அரசர்களின் புஜவலிமைக்கு   சந்திரன். சிவனின் வில் ராஹு.
அது மிகவும் கனமானது. கடினமானது   என்பதை
அனைவரும் அறிந்ததே.
மிகப்பெரிய போர்வீரர்களான  ராவணன் ,பாணாசூரன்
போன்றவர்களால் இந்த வில்லைத் தூக்கக் கூட  முடியவில்லை. அவர்களுக்கு மூச்சுத் திணறியது.

 அவர்களால்  ஒடிக்க முடியாத வில்லை  இன்று யார் உடைப்பார்களோ , அவர்கள் மூவுலகையும் வென்றவரகளாவது மட்டுமல்ல, சீதையும் அவர்களுக்கு எவ்வித  தடையுமின்றி மாலை சூடுவாள்.

 ஜனகரின் பிரதிக்ஞையைக்  கேட்டு ,எல்லோரும் ஆசைப்பட்டனர். வீரத்தில் ஆணவம் கொண்ட அரசர்கள் ஆர்ப்பரித்தனர். தங்கள் இஷ்ட  தெய்வத்தை வழிபட்டு ,
வில்லை எடுத்து ஓடிக்கச் சென்றனர்.

  மிகவும் ஆவலுடன் வில்லைப் பார்த்துவிட்டு ,
அதை எடுத்து முறிக்க பலவிதத்திலும் முயன்றனர்.
ஆனால கடும் முயற்சிகுப் பின்னும்   தோல்வியே கண்டனர்.
விவேகமுள்ளவர்கள் வில்லிற்கு அருகிலே கூட செல்லவில்லை.
  அந்த முட்டாள் அரசர்கள் முயன்று தோற்று நாணத்துடன் சென்றுவிட்டனர்.
வீரர்களின் புஜவலிமையை விட ,  வில்லின் சுமை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
பத்தாயிரம் அரசர்கள் ஒன்று சேர்ந்து முயன்றும் வில்லை
நகர்த்தக் கூட முடியவில்லை. வில் எப்படி அசையும் ?
 முயன்ற அனைத்து அரசர்களும் பரிகாசத்திற்கு ஆளாகினர்.
புகழ், வீரம் , வெற்றி அனைத்தையும் வில்லினால் இழந்து சென்றனர்.
அரசர்கள் கலை இழந்து அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தனர்.
அரசர்களின் தோல்வி கண்டு ஜனகர் பயந்தார்.
கோபமாகப் பேசினார்.

நான் செய்த சபதத்தால் ஒவ்வொரு தீவிலிருந்தும் அரசர்கள் வந்தனர். தேவர்களும் அரக்கர்களும்  மனித வடிவத்தில்  வந்தனர்.  மேலும் பல யுத்த வீரர்கள்  வந்தனர்.
ஆனால் வில்லை ஒடித்து வெற்றி பெற்று தன கான்னியை மணக்கும் ஒருவரை பிரம்மா சிருஷ்டிக்கவில்லை.
 வில் ஒடிப்பதால் வரும் பயனை அனைவரும்  அறிவர்.
ஆனால் சிவதனுஷை யாராலும்  முறிக்க  முடியவில்லை.

  எள்ளின்  அளவு கூட  நகர்த்த முடியவில்லை.
எந்த ஆணவமுள்ள வீரர்களும் கோபப்பட வேண்டாம். பூமி வீரர்களில்லாமல் போய்விட்டது.

  எல்லோரும் நம்பிக்கையை விட்டு விட்டு  தங்கள் வீட்டிற்குச் சென்றுவிடுங்கள். பிரம்மா சீதைக்கு திருமணம் என்பதை
எழுதவில்லை.

    நான் சபதத்தை விட்டுவிட்டால், எனது புண்ணியம் போய்விடும்.  நான் என்ன செய்ய முடியும் ?
எனது கன்னி  கன்னியாகவே  இருக்கட்டும். என்ற  ஜனகரின் உதடுகள் துடித்தன. இந்த பூமி வீரர்களின்றி  சூன்யமாகிவிட்டது என்பது  தெரிந்திருந்தால் ,
நான் இப்படிப்பட்ட சபதம் செய்திருக்க  மாட்டேன் என்றார்.
ஜனகரின்  கண்கள் சிவந்தன.

ஜனகரின் புலம்பல் கேட்ட அனைவரும்
 சீதையைப் பார்த்து வேதனை அடைந்தனர்.
ஆனால் லக்ஷ்மணனின் முகம் கோபத்தால் சிவந்தது.
புருவங்கள் வளைந்தன. உதடுகள் துடித்தன. கண்கள் சிவந்தன.  ஆனால் ரகுவீரரின் மீது கொண்ட மரியாதையாலும் அச்சத்தாலும் அமைதியாக இருந்தார்.

  அவர் இறுதியில் பொறுமை இழந்து சொன்னார்--
ஜனகர் சொன்ன சொற்கள் தவறானது.
ரகுவம்சத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும்போது ,
ராமர் இங்கு இருக்கும்போது இவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது.

  இவர் சூரியகுலத்தின் தாமரையின் சூரியன். நான் இயற்கையாகச் சொல்கிறேன் நீங்கள் அனுமதி அளித்தால் இந்த வில்லை பந்துபோல் தூக்கிவிடுவேன்.
  அதை பச்சைக்களிமண் பானை போன்று உடைத்துவிடுவேன். நான் சுமேரு  மலையையே தூள்தூளாக்கி விடுவேன்.
இறைவா!உங்கள்  பிரதாபத்திற்கு முன்  இந்த பழைய வில்
ஒரு பொருட்டே அல்ல.
பகவானே!அனுமதி கொடுங்கள். வில்லை தாமரைத் தண்டை முறிப்பதுபோல் நூறுமைல் தூரத்திற்கு தூக்கிக்கொண்டு ஓடும் விளையாட்டைக் காட்டுகிறேன்.
உங்கள் பலத்தால் வில்லை  காளான் போன்று உடைத்துவிடுவேன்.
இவ்வாறு என்னால் செய்யமுடியவில்லை என்றால்
நான் வில்லையும் அம்பையும் தொடமாட்டேன்.
லக்ஷ்மணனின் இந்த வார்த்தைகளால்  சீதை மகிழ்ந்தாள்.
இலக்குமணனின் கோபத்தால் பூமி நடுங்கியது.
திக்குகள் அனைத்தும் நடுங்கின. யானைகள் நடுங்கின. அனைத்து அரசர்களும் பயந்துவிட்டனர். ஜனகர் நாணத்தால் குறுகிப்போனார்.
ராமர், ரிஷிகள் ,முனிவர்கள் மிகவும்  மகிழ்ந்தனர்.
ராமர் லக்ஷ்மனரை பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டினார். அவரைத்தடுத்து தன்னருகில் அமரவைத்தார்.
நாலநேரம்  அறிந்து விஷ்வாமித்திரர் ராமரிடம்  சொன்னார்---
"ராமா!எழுந்திரு. வில்லை உடைத்து ஜனகரின் மன வேதனையைப் போக்கிவிடு.

  குருவின் கட்டளையை ஏற்று ராமர் குருவை வணங்கினார்.
அவர் மனதிலும் மகிழ்ச்சியுமில்லை. துக்கமும் இல்லை. அவர் மிகவும் கம்பீரமாக சிங்கமும் நாணும்படி , எழுந்து நின்றார்.

  அரங்கம் என்ற மலையில் ரகுநாதர் என்ற இளம் பரிதி உதய மானதுமே , சாதுக்கள் என்ற தாமரைகளின் முகங்கள்  மலர்ந்தன .

  கண்கள் என்றவண்டுகளும்  மகிழ்ந்தன.
ஆணவம் கொண்ட அல்லி போன்ற அரசர்களின் முகங்கள் வாடின. கட அரசர்கள் என்ற ஆந்தைகள் மறைந்துவிட்டன.
  முனிவர்களும் தேவர்களும் சக்ரவாகு பறவை போன்று
மகிழ்ந்தனர். அவர்கள் பூமாரி பொழிந்து  தங்கள் சேவையைக் காட்டினர்.
அன்புடன் குருவின் சரணங்களை வணங்கி ராமர் ரிஷியிடம் அனுமதி கேட்டார்.

  அனைத்து உலகிற்கும்  ஸ்வாமியான ராமர் அழகான மதம் கொண்ட  யானை போன்று நடந்து சென்றார். ராமர் அரங்கத்திற்குச் சென்றதுமே நகர மக்கள்  மகிழ்ந்தனர்.
அவர்கள் ரோமங்கள் சிலிர்த்தன.
   அவர்கள் தங்கள் முன்னோர்களையும் தெய்வங்களையும்
ராமர் வாழைத்தண்டு போல் வில்லை முறிக்க  வேண்டும் என வேண்டினர்.
Post a Comment