Monday, January 23, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தைந்து

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தைந்து


      ராணிகள் கர்ப்பமானதும்   அரண்மனையில்
மிகவும் ஆனந்தமாக அழகாக இருந்தனர்.
பிரபு வெளிப்படும் நேரம் வந்தது.
யோகம், லக்னம்,கிரஹம், வாரம் ,திதி எல்லாமே அனுகூலமாகின.
ஸ்ரீ ராமர் பிறந்ததது  சுகத்தின் ஆணிவேர். அதனால்
பூமியில் உள்ள அசையும் அசையாதன அனைத்தும் மிக மகிழ்ந்தன.
  சித்திரை மாதம்,நவமி திதி ,சுக்லபக்ஷம் பகவானுக்கு பிரியமான பிறக்கும் முகூர்த்தம். மதியநேரம்.அதிக குளிரும் இல்லை.அதிக வெயிலும் இல்லை.
அந்த  புனிதநேரம்  அகில உலகத்திற்கும் அமைதி தரக்கூடியது.
குளிர்ந்த மந்தமான மணமுள்ள காற்று வீசிக்கொண்டிருந்தது.
தேவர்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர். சாதுக்கள் மனதில் மிக ஆவலாக
எதிர்பார்த்து இருந்தனர்.

காடுகளில் பூக்கள்  மலர்ந்திருந்தன.
மலைகளில் மணிகள் மின்னிக்
கொண்டிருந்தன.   எல்லா நதிகளிலும் அமிர்தம் ஓடிக்கொண்டிருந்தது.

பிரம்மா பிரபு பிறக்கும் அறிந்தார். அப்பொழுது அனைத்து தேவர்களும்
விமானத்தில் புறப்பட்டனர். களங்கமற்ற ஆகாயம் தேவர்களால்
நிறைந்தது. கந்தர்வர்கள் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர்.
அழகான கைகளில் பூமாரி பொழிந்தனர். ஆகாயத்தில் முரசுகள் முழங்கின.  நகர்கள், முனிவர்கள்,தேவர்கள் ஸ்துதிபாடினர்.
பலவிதத்திலும் அன்பளிப்பு கொடுக்க விரும்பினர்.
தேவர்களுடைய கூட்டம் வேண்டிவிட்டு தன்-தன் லோகத்திற்குச் சென்றனர்.
அனைத்து உலகிற்கும் அமைதி தரக்கூடிய , வையகத்திற்கு
ஆதாரமான பிரபு ஜன்மம்  எடுத்தார்.
ஏழைகளின் மேல் இரக்கப்படும்  கௌசல்யாவின் மகனாக
கிருபையுள்ள ராமர் பிறந்தார். முனிவர்களின் மனம் கவர் மகனின்
அத்புத அழகை எண்ணி  கௌசல்யா மகிழ்ந்தாள்.
மேகவர்ண உடல், நான்கு புஜங்களிலும் ஆயுதங்கள், தெய்வீக நகைகள்,
வனமாலை அணிந்த மார்பு, பெரிய பெரிய கண்கள்,
கண்களுக்குப் பிரியமான ஆனந்தமளிக்கும் ராமர் பிறந்தார்.
அவர் கர ராக்ஷசர்களைக் கொல்லப்போகின்ற பகவான் தோன்றினார்.

  இருகைகளையும் சேர்த்து  வணங்கி  சொன்னாள்--
ஹே  அனந்த்! நான் எப்படி உன்னைப் புகழ்வேன்.
வேதங்கள்  உன்னை மாயை, குணம்,ஞானத்திற்கு அப்பாற்பட்டவர்,
அளவில்லாதவர் என்று சொல்கின்றன.
ஸ்ருதிகளும் சாதுக்களும் இரக்கத்தின் கடல் ,
அனைத்து குணங்களின் இருப்பிடம் என்று புகழ் கின்றன,
அதே பக்தர்களின் மேல்  அன்பு காட்டும் , லக்ஷ்மிபதி என் நலத்திற்காக தோன்றி  உள்ளீர்கள்.

உன்னுடைய ஒவ்வொரு  ரோமத்திலும் அநேக பிரம்மாண்டங்களின்
கூட்டங்கள் நிரம்பயுள்ளன என்று  வேதங்கள் சொல்கின்றன.
நீ  என்னுடைய கர்ப்பத்தில் இருந்தாய். இந்த பரிகாசமான விஷயத்தைக்
கேட்டு  மனிதர்களின் அறிவு  சஞ்சலமடையும்.
அம்மாவிற்கு ஞானம்  வந்ததும் பிரபு புன்சிரிப்பு சிரித்தார்.

    அவர் முன் ஜென்மத்தின் அழகான கதை சொல்லி ,
வாத்சல்ய அன்பைப் பெற்றார்.

   அம்மா மகனிடம் சொன்னாள்---நீ இந்த வடிவத்தை விட்டுவிட்டு ,
அன்பான பால லீலைகளில் ஈடுபடு.  எனக்கு மழலை விளையாட்டால்
மிகவும் ஆனந்தம்  அடைவேன்.   அம்மாவின் சொல் கேட்டு தேவர்களின் சுவாமியான பகவான் பாலகனாக மாறி அழ ஆரம்பித்தார்.

     
துளசிதாசர் சொல்கிறார்--இந்த ராம பாத்திரத்தைப் புகழ்ந்து பாடுவோர் ,
 ஹரி பதம் அடைவர். மீண்டும் அவர்கள் உலகம் என்ற கிணற்றுக்குள்
விழ மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மீண்டும் பிறவி இருக்காது,

   அந்தணர்கள்,பசுக்கள்,தேவர்கள் ,சாதுக்கள்  ஆகிய அனைவருக்காக
பகவான் மனித அவதாரம் எடுத்தார்.  அவர் மாயை,முக்குணங்கள்
மற்றும் பஞ்சேந்திரிய  சுகங்களுக்கு அப்பாற்பட்டவர். தன் விருப்பத்தால் அவர் தெய்வீக அவதாரம் எடுத்தார்.
   குழந்தையின் அழு குரல் கேட்டு , எல்லா ராணிகளும் ஆவலுடன் ஓடி வந்தனர்,  அனைத்து நகரமக்களும் ஆனந்தமடைந்தனர்.
   அரசர் தசரதர் மகன் பிறந்த செய்தி கேட்டு பிரம்மானந்தம்  அடைந்தார்.

அன்பினால் தளர்ந்த உடலை சமாளித்து எழுந்தார். மனதில் அதிசயமான
அன்பும் ஆனந்தமும் உண்டாகியது,
  யாருடைய பெயரைக்கேட்டாலே நலம் உண்டாகுமோ ,
அதே பிரபு என் வீட்டிற்கு வந்திருந்தார்.
அரசனின் மனதில் பரம ஆனந்தம் ஏற்பட்டது. அவர் வாத்தியக்காரர்களை
அழைத்து வாத்தியங்கள் வாசிக்கச் சொன்னார்.

    குரு வசிஷ்டருக்கு அழைப்பு சென்றது. அவர் அந்தணர்களை அழைத்துக்கொண்டு   அரசவைக்கு வந்தார்.
அழகின் ராசியான ஒப்புமைஇல்லா குழந்தையைப் பார்த்தார்.
 பிறகு  அரசர்  நாந்திமுக சிராத்தம் செய்து ,குல ஜாதி வழக்கப்படி கிரியைகள் செய்து , அந்தணர்களுக்கு கோ தானம், பூதானம்,வஸ்த்ரதானம், ஸ்வர்ண மணிகள் தானம் முதலியவற்றை செய்தார்.
கொடிகள்,தோரணங்களால்  நகரம் அலங்கரிக்கப் பட்டது. ஆகாயத்தில் இருந்து பூமாரி பொழிந்தது. எல்லோரும் பிரம்மானந்தத்தில் மூழ்கினர்.

பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இயற்கையான அலங்காரத்துடன் வந்தனர்,   தங்க கலசம்  எடுத்துகொண்டு , தட்டுகளில் மங்களப் பொருட்கள்  எடுத்துக்கொண்டு , பாடிக்கொண்டே அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் ஆரத்தி எடுத்து குழந்தையின்  பாதங்களை வணங்கினர்.
மகதர்கள், சூதர்கள், கைதிகள், பாடகர்கள் முதலிய அனைவரும்
சுவாமியின் பவித்தரமான புகழைப் பாடினர்.
அரசன் அனைவருக்கும் மன நிறைவு தரும் தானங்கள் கொடுத்தான்.
தெருக்கள் முழுவதும் குங்குமப்பூ , சந்தனம்,கேசருடைய சகதி உண்டாகியது.
  ஒவ்வொருவீட்டிலும் மங்கள வாத்தியமும் பாடலும் இறைவன் பிறந்ததால்
முழங்கின. அந்த நகர மக்கள் அடைந்த ஆனந்தத்தை சரஸ்வதி மற்றும் சர்பங்களின் அரசன் ஷேஷனாலும் வர்ணிக்க இயலாது, 

No comments: